இந்திய ரயில்வே பயணிகளுக்கு எதிரான தனியார்மயமாக்கலை ஒன்றிணைந்து எதிர்ப்போம்!

இரயில் தொழிலாளர்களின் போராட்ட தேசிய ஒருங்கிணைப்புக் குழு (என்.சி.சி.ஆர்.எஸ்), நவம்பர் 2020

அன்புள்ள ரயில் பயணிகளே,

நீங்களோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களோ ரயிலில் தினசரி பயணம் செய்பவர்களாகவோ அல்லது அவ்வப்போது பயணிப்பவர்களாகவோ இருந்தாலும், இந்திய ரயில்வேயின் தனியார்மயமாக்கல் திட்டம் உங்கள் அனைவரின் நலன்களுக்கு எதிரானதாகும்! இருந்தபோதிலும், அரசாங்கம் இந்தத் திட்டத்தை மிகவும் மும்முரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. எனவே, அதைத் தடுப்பதற்காக நாம் அனைவரும் உடனடியாக ஒன்று சேர வேண்டும்!

குறைந்த முதலீட்டில் அதிகபட்ச லாபம் ஈட்டுவதென்பது எப்போதும் ஏகபோக முதலாளித்துவத்தின் நோக்கமாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ரயில் பயணிகள் சேவைகளை தனியார்மயமாக்குவது பின்வரும் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்:

  • ரயில் கட்டணங்கள் கடுமையாக அதிகரித்தல். டைனமிக் கட்டணங்கள் என்ற பெயரில் பயணிக்க வருவோர் அதிகமாக அதிகமாக கட்டணங்களை அதிகரித்தல்.
  • தற்போது மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைக் கட்டணங்கள் இனி இல்லை. சீசன் டிக்கெட்டுகள் கிடையாது. (மேட்ரோ தொடர்வண்டிகளில் சீசன் டிக்கெட்டுகளை ஏற்கெனவே நீக்கிவிட்டார்கள்)
  • தண்ணீர், கழிப்பறைகள், படுக்கை போன்ற ஒவ்வொரு சேவைக்கும் அதிக கட்டணங்கள்.
  • அதிக இலாபமற்ற பாதைகளிலும், கூட்டமில்லாத நேரங்களிலும் சேவைகளை வெட்டிக் குறைத்தல் (தனியார் பேருந்துகள் இப்படித்தான் இயக்கப்படுகின்றன)
  • சரியான நேரத்திற்கு இயக்கப்பட வேண்டுமென்பதற்காக, தனியார் இயக்கும் ரயில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசாங்கம் இயக்கும் ரயில்கள் இரண்டாம்பட்சமாக தாமதமாகவும் அக்கறையின்றியும் இயக்கப்படும்.
  • செலவைக் குறைப்பதற்காக பராமரிப்பு வெட்டிக் குறைக்கப்படும். இது பாதுகாப்பை மோசமாக பாதித்து விபத்துக்களை அதிகரிக்கும்.

முன்னர் செய்யப்பட்ட தனியார்மயமாக்கலின் அனுபவத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

உயரும் கட்டணங்கள்: 1990 களின் முற்பகுதியில் பிரிட்டனில் பிரிட்டிஷ் ரயில் தனியார்மயமாக்கப்பட்ட பின்னர், அங்கு சராசரி பயணிகள் கட்டணம் இரு மடங்கிற்கும் அதிகமாகவும், கடந்த இருபது ஆண்டுகளில் பல வழித்தடங்களில் மூன்று மடங்காகவும் அதிகரித்தது. ஐரோப்பாவில் அதிகம் ரயில் கட்டணங்கள் தனியாரால் இயக்கப்படும் பிரிட்டிஷ் ரயிலில்தான் இருக்கின்றன. பிரிட்டனில் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகள் இப்போது பிரான்சில் உள்ளதை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கின்றன. பெரும்பாலும் பொதுத்துறை சேவையாக இருக்கும் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள ரயில் சேவைகளை விட பிரிட்டனில் தனியாரால் இயக்கப்படும் ரயில் சேவைகள் மெதுவாகவும், நெரிசலானதாகவும் உள்ளது.

தற்போது மும்பை உள்ளூர் ரயில்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களைக் காட்டிலும் இரண்டிலிருந்து நான்கு மடங்கிற்கும் அதிக கட்டணங்கள் தனியாரால் இயக்கப்படும் மும்பை மெட்ரோ ரயில்களில் வசூலிக்கப்படுகின்றன.

டெல்லி – லக்னோ மற்றும் மும்பை – அகமதாபாத் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஐ.ஆர்.சி.டி.சி யிடம் ஒப்படைக்கப்பட்டபோது, ​​அவற்றின் கட்டணங்களைத் தீர்மானிக்க முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஐ.ஆர்.சி.டி.சியின் பங்குகள் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டதன் மூலம் அதன் தனியார்மயமாக்கல் ஏற்கனவே துவங்கிவிட்டது.

பெருந்தொற்று நோயின் போது, சூலை 2020 இல், ​​தேர்ந்தெடுக்கப்பட்ட 109 வழித்தடங்களில் 150 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தை ரயில்வே அமைச்சரகம் அறிவித்தது. அதிக லாபம் ஈட்டும் ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற ரயில்களை ஏகபோக முதலாளிகள் நிச்சயமாகக் கைப்பற்றுவார்கள்!

லாபமே முதன்மை நோக்கமாக இருக்கும்போது, ​​பாதுகாப்பு புறக்கணிக்கப்படுகிறது: அர்ஜென்டினாவில் ரயில்வே தனியார்மயமாக்கப்பட்ட பின்னர், விபத்துகளின் தீவிரமும் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்தன. எனவே, 2015 ஆம் ஆண்டில் ரயில்வே அமைப்பை தனியாரிடமிருந்து திருப்பி எடுத்துக் கொள்ளுமாறு அர்ஜென்டினா அரசாங்கத்தை மக்கள் கட்டாயப்படுத்தினர்! நம் நாடெங்கிலும், தனியார் பேருந்துகள் மிகவும் பாதுகாப்பற்றவையாக உள்ளன. அவர்களின் இந்த ஆபத்தான போக்கை எந்த மாநில அரசும் தடை செய்யவில்லை.

ரயில்களை தனியாரிடம் ஒப்படைப்பது மட்டுமின்றி, இந்திய ரயில்வே வேலைகளை வெளியாரிடம் கொடுத்துச் செய்வதன் மூலமும், பல்வேறு செயல்பாடுகளை நிறுவனமயமாக்குவதன் மூலமும் இரயில்வே தனியார்மயமாக்கல் ஏற்கனவே நடந்து வருகிறது. இது பயணிகள் மற்றும் ரயில்வே தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரானதாகும்.

எந்த விலை கொடுத்தாவது இலாபத்தை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்ற தனியார் ஏகபோக நிறுவனங்கள், பயணிகளின் வசதியையும் பாதுகாப்பையும் மேம்படுத்த பணத்தை செலவழிக்கும் என்று கூறும் அரசாங்கத்தின் வாதத்தை யாராலும் நம்ப முடியுமா?

இந்திய ரயில்வேயின் தனியார்மயமாக்கல் எதிர்காலத் தலைமுறை தொழிலாளர்களுக்கு எதிரானது: தனியார் துறையில் சேவை நிலைமைகள் பொதுவாக மிகவும் மோசமானவை என்றும், சேவையின் பாதுகாப்பின்மை, நீண்ட நேர வேலை, குறைந்த சம்பளம், கூடுதல் நேர வேலைக்கு கூடுதல் ஊதியமோ அல்லது பிற சலுகைகளோ இல்லை என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். இந்திய ரயில்வேயில் ஏற்கெனவே தனியார்மயமாக்கப்பட்ட அல்லது வெளியே கொடுத்து செய்யப்பட்டும் சேவைகளின் நிலையும் கொஞ்சமும் வேறுபட்டதல்ல!

அன்புள்ள ரயில் பயணிகளே!

ரயில்வே ஒரு அத்தியாவசிய சேவையாகும், அனைத்து இந்தியக் குடிமக்களும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணிக்கக் கூடிய வகையில் அதை இயக்குவது அரசாங்கத்தின் கடமையாகும். கொரோனா பெருந் தொற்றுநோய் மிக மோசமான அழிவை உருவாக்கியதை நாம் கண்டோம். ஏனெனில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பொது சுகாதாரத்தைப் புறக்கணித்து தனியார் சுகாதார பராமரிப்பு, மருந்து நிறுவனங்கள் மற்றும் பெரும் தனியார் மருத்துவமனைகளையும் ஊக்குவித்து வந்திருப்பதாகும்.

அறுபது லட்சம் கோடி ரூபாய் பொருமானமுள்ள இந்திய ரயில்வேயின் மிகப்பெரிய சொத்துக்கள் 165 ஆண்டுகளுக்கும் மேலாக இலட்சக்கணக்கான ரயில் தொழிலாளர்களின் வியர்வையினாலும் இரத்தத்தினாலும் பொது மக்களுடைய பணத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் கட்டப்பட்டுள்ளன! இந்த பொதுச் சொத்தை தனியார் ஏகபோகங்களுக்கு வாரி வழங்குவதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?

இந்திய ரயில்வே மட்டுமின்றி, பெட்ரோலியத் தொழில் துறையையும், வங்கிகள், நிலக்கரித் துறை, மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் போன்றவற்றையும், பாதுகாப்புத் துறையையும் கூட தனியார்மயமாக்க அரசாங்கம் கடுமையாக வேலை செய்து வருகிறது. அரசாங்கத்திற்கு நம் மக்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. இந்திய மற்றும் வெளிநாட்டு பெரும் நிறுவனங்களின் இலாபத்தை அதிகரிப்பதில்தான் அது தீவிரமாக இருக்கிறது.

உங்களுடைய நல்வாழ்விற்காகவும், வரும் தலைமுறையினரின் எதிர்காலத்துக்காகவும், இந்திய ரயில்வேயின் தனியார்மயமாக்கலைத் தடுத்து நிறுத்துவதற்கான எங்கள் போராட்டத்தில் நீங்கள் எங்களுடன் சேர வேண்டும். அனைத்து பொது சேவைகள் மற்றும் நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காக பல்வேறு ரயில்வே தொழிற்சங்கங்களும் கூட்டமைப்புக்களும், சங்கங்களும் மற்ற தொழிற்சங்கங்களோடும் மக்கள் அமைப்புகளுடனும் இணைந்து முன்வந்துள்ளன.

தனியார்மயமாக்கலைத் தடுத்து நிறுத்தி, பின்வாங்கச் செய்து, நம் நாட்டைக் காப்பாற்றுவதற்கு ஒரு பரந்த முன்னணியை நாம் கட்டுவோம்!

எங்களுடைய வேண்டுகோளை உங்களுடைய தொழிற்சங்கங்களுக்கும், நீங்கள் உறுப்பினர்களாக இருக்கும் மக்கள் அமைப்புகளுக்கும் பரப்புங்கள்!

எங்களுடைய போராட்டம், உங்களுடைய போராட்டமும் ஆகும். இதில் நாம் ஒன்றாக வெற்றி பெறுவோம்!

 

என்.சி.சி.ஆர்.எஸ்: ஆல் இந்தியா ரயில்வேமென்ஸ் பெடரேசன், நேஷனல் பெடரேசன் ஆப் இந்தியன் ரயில்வேமென், பாரதிய ரயில் மஜ்தூர் சங்கம், அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசன், ஆல் இந்தியா ஸ்டேஷன் மாஸ்டர்ஸ் அசோசியேசன், ஆல் இந்தியா டிரெயின் கன்ட்ரோலர்ஸ் அசோசியேசன், இந்தியன் ரயில்வே டிக்கெட் செக்கிங் ஸ்டாப் ஆர்கனெய்சேசன், இந்தியன் ரயில்வே சிக்னல் அன்டு டெலிகம்யூனிகேஷன்ஸ் மெய்ன்டெனர்ஸ் யூனியன், ஆல் இந்தியா டிராக் மெய்ன்டெனர்ஸ் யூனியன், தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், ஆல் இந்தியா ரயில்வே எம்பிளாயிஸ்கன்பெடரேஷன் – வெஸ்டர்ன் சோன், இந்திய ரயில்வே லோகோ ரன்னிங் மென்ஸ் ஆர்கனைசேசன், ரயில்வே கர்மச்சாரி டிராக் மெய்ட்டெனர்ஸ் அசோசியேசன், தக்ஷின் ரயில்வே எப்பிளாயிஸ் யூனியன், இந்திய ரயில்வே டெக்னிகல் சூப்ரவைசர்ஸ் அசோசியேசன், ஆல் இந்தியா எஸ்சி & எஸ்டி ரயில்வே எப்பிளாயிஸ் அசோசியேசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *