அக்டோபர் புரட்சியின் 103 வது ஆண்டுவிழா:

பாட்டாளி வர்க்க புரட்சி, காலத்தின் கட்டாயம்

1917 நவம்பர் 7 ஆம் தேதி, ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இது உலகம் முழுவதையும் உலுக்கியது. இது எல்லா நாட்டு முதலாளிகளின் இதயங்களிலும் அச்சத்தை உருவாக்கியது. புரட்சி, அனைத்து நாட்டுத் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆர்வமூட்டி நம்பிக்கையை அளித்தது.

இன்று, உலகம் முழுவதும் கடுமையான நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. போர்களும் இனப்படுகொலையும் பரவலாக நடைபெற்று வருகின்றன. எல்லா இடங்களிலும் உழைக்கும் பெருந்திரளான மக்கள் பொருளாதார இழப்பில் வாழ்கின்றனர். இன்னொரு துருவத்தில், மிகச் சிறுபான்மையினர் உழைக்கும் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட சமூக செல்வத்தை கைப்பற்றி வைத்திருக்கிறார்கள். சமுதாயத்தின் போக்கைத் தீர்மானிப்பதில் பெருந்திரளான மக்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. தற்போதுள்ள அரசியல் வழி முறையால் அவர்கள் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பில் ஒரு அடிப்படையான, ஆழமான மாற்றத்திற்கான தேவை எல்லா பக்கங்களிலும் எழுப்பப்படுகிறது. இதனால்தான் ரஷ்யாவில் நடந்த மகத்தான அக்டோபர் புரட்சியும், அங்கு நிறுவப்பட்ட பாட்டாளி வர்க்க சனநாயகமும் சோசலிசமும், இன்று நமக்கு மிகவும் மதிப்புமிக்க படிப்பினைகளாக இருக்கின்றன.

அக்டோபர் புரட்சி, உழைக்கும் மக்களை மையமாகக் கொண்ட ஒரு புதிய அரசையும் சமூகத்தையும் தோற்றுவித்தது. புதிய சோவியத் அரசு, பெரிய முதலாளிகளின் உடமைகளைக்  கைப்பற்றியது. அது பெருவீத தொழிற்சாலைகள், போக்குவரத்து, வங்கி மற்றும் வர்த்தகத்தை பொதுவுடமையான சமூக நிறுவனங்களாக மாற்றியது. இது ஏழை விவசாயிகள் தங்கள் நிலங்களைத் தாமாகவே தன்னார்வ அடிப்படையில் முன்வந்து ஒருங்கிணைக்கவும், பெரிய அளவிலான கூட்டுப் பண்ணைகளை உருவாக்கவும் ஊக்கமளித்தது. அனைத்து உழைக்கும் மக்களின் தேவைகளையும் நிறைவு செய்வதற்காக எல்லா பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியும், விநியோகமும் ஒரே திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. வேலையின்மையும், பணவீக்கமும், எந்தவிதமான நெருக்கடிகளும் இல்லாத ஒரு புதிய சோசலிசப் பொருளாதார அமைப்பு உருவானது.

சுரண்டும் வர்க்கங்களும், சிறப்பு உரிமைகள் பெற்ற மேட்டுக்குடியினரும் அங்கு இனியும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு தொழிலாளியும், விவசாயியும், படை வீரனும் சட்டமன்ற அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படவும், தேர்ந்தெடுக்கவும் உரிமையைப் பெற்றிருந்தனர். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை எந்த நேரத்திலும் திருப்பியழைக்கும் உரிமையையும் அவர்கள் பெற்றிருந்தனர். பெண்கள் எல்லா விதமான பாகுபாடுகளிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் விடுபட்டு, வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் சம உரிமைகளை அனுபவிப்பதற்கான நிலைமைகளை சோவியத் அரசு உருவாக்கியது. சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அமைதி, வளமை மற்றும் பாதுகாப்பிற்கு அது உத்திரவாதம் அளித்தது. இது சோசலிச அமைப்பைக் கட்டியெழுப்புவதற்காக கைகோர்த்த அனைத்து வெவ்வேறுபட்ட நாடுகள் மற்றும் மக்களின் ஒற்றுமையை பலப்படுத்தியது.

சோவியத் யூனியனில் புரட்சி மற்றும் சோசலிச சாதனைகள் சாத்தியமானதற்கு காரணம், தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் உயர்ந்த விழிப்புணர்வு உடையவர்களைக் கொண்டிருந்த ஈடுஇணையற்ற போல்ஷவிக் கட்சியின் தலைமையாகும். லெனின் தலைமையில் போல்ஷிவிக் கட்சி, புரட்சிகர விழிப்புணர்வையும், அமைப்பையும் உருவாக்குவதில் வெற்றி பெற்றது. அதைப் பயன்படுத்தி, தொழிலாளி வர்க்கம், சுரண்டலதிபர்களைத் தூக்கியெறிந்து விட்டு, ஆளும் வர்க்கமாக ஆக முடிந்தது. முதலாளி வர்க்க சனநாயகம் பற்றிய அனைத்து மாயைகளையும் அடித்து நொறுக்கி, போல்ஷவிக் கம்யூனிஸ்டு கட்சி, பாட்டாளி வர்க்க சனநாயகத்தின் ஒரு வடிவமான சோவியத் சனநாயகத்தை முன்னணியில் நின்று கட்டியமைக்க தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் படை வீரர்களுக்குத் தலைமை தாங்கியது. கட்சி சுட்டிக்காட்டிய வழியில் உழைக்கும் மக்கள் ஒரு மாபெரும் வலிமைமிக்க சக்தியாகச் செயல்பட்டதால், அவர்கள் முதலாளி வர்க்க ஆட்சியைத் தூக்கியெறிவதில் வெற்றி பெற்றனர்.

1956-இல் தொடங்கி, சோவியத் கட்சியின் தலைமை புரட்சிகரமான வர்க்கப் போராட்டப் பாதையைக் கைவிட்டு விட்டு ஏகாதிபத்திய அமைப்போடு சமாதான சகவாழ்வைப் பரப்புரை செய்யத் தொடங்கியது. இது சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதற்கும், உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூடியும், போட்டியிட்டும் வருகின்ற ஒரு ஏகாதிபத்திய சக்தியாக சோவியத் ஒன்றியம் மாறுவதற்கும் வழிவகுத்தது. இதன் விளைவாக ஆயுதப் போட்டி உருவாகியது. மோதல் போக்கு கொண்ட இருவேறு வல்லரசுகளின் செல்வாக்குக் கோளங்களாக உலகம் பிளவு பட்டது.

சோவியத் யூனியன் 1991-ல் சிதறுண்டதைத் தொடர்ந்து உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் என்ற பெயரில் உலக முதலாளி வர்க்கம் இதுவரை கண்டிராத அளவில் சமூக விரோதத் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. மக்கள் எதிர்ப்பை மிருகத்தனமாக அடக்குவது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் அநியாயமானப் போர்களை நடத்துவது, சனநாயகத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஏகாதிபத்திய தலையீடுகள் ஆகியவை அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் நிரந்தரமான செயல்முறையாக மாறியுள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் தொழிலாளி வர்க்கம் மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் மோசமடைந்து வந்திருப்பது, மக்களைக் கொல்லும் முதலாளித்துவ-ஏகாதிபத்திய அமைப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அவசியத்தை முன்னெப்போதையும் விட அதிகமாக உருவாக்கியுள்ளது.

நமது நாட்டில், மதச்சார்பற்ற மற்றும் சனநாயகமானதாக அழைக்கப்படும் இந்திய அரசாலும், பல கட்சி பிரதிநிதித்துவ சனநாயக அரசியல் வழிமுறையினாலும் பாதுகாக்கப்படும் இந்த முதலாளித்துவ அமைப்பு குறித்து பரப்பப்பட்டு வரும் அனைத்து மாயைகளையும் அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு வெற்றிகரமான பாட்டாளி வர்க்க புரட்சி மட்டுமே தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நம் நாட்டின் சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட அனைவரின் விடுதலைக்கான பாதையைத் திறக்கும். இதைத்தான் அக்டோபர் புரட்சி நமக்குக் கற்பிக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில், ரஷ்யாவில் நடந்த மகத்தான அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி வெளியிட்ட கட்டுரைகளை மீண்டும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *