நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உழவர் விரோத மசோதாக்களை கண்டனம் செய்வீர்

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி – மத்தியக் குழுவின் அறிக்கை செப்டம்பர் 25, 2020

விவசாய பொருட்களின் வர்த்தகம் மற்றும் சேமிப்பு. குறித்த மூன்று மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைக் கண்டிப்பதற்காக நாடு முழுவதும் விவசாயிகள் சாலைகளில் அணிவகுத்தும், கூட்டங்களில் பங்கேற்றும் வருகின்றனர். அவை

(1) வேளாண் விளைபொருள் வணிக ஊக்கச் சட்டம் – 2020,

(2) வேளாண் சேவைகள் மற்றும் விலை உறுதி ஒப்பந்தச் சட்டம்,

(3) இன்றியமையாப் பண்டங்கள் (திருத்தச்) சட்டம்

ஆகியனவாகும். விவசாயிகளுக்கான மின் செலவை கடுமையாக அதிகரிக்கும் மின்சாரம் (திருத்த) மசோதா 2020 ஐயும் அவர்கள் எதிர்க்கின்றனர்.

எல்லா பக்கங்களிலிருந்தும் பரந்துபட்ட எதிர்ப்பு இருந்துங்கூட அரசாங்கம் இந்த மசோதாக்களை பாராளுமன்றத்தின் மூலம் அவசர அவசரமாகக் கொண்டு வந்துள்ளது குறித்து விவசாயிகள் மிகுந்து கோபத்தோடு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செப்டம்பர் 23 இலிருந்து 25 வரை பஞ்சாபில் விவசாயிகள் 3 நாள் ரயில் முற்றுகையை ஏற்பாடு செய்து நடத்தினர். ஒரு நாடு தழுவிய கடையடைப்பு செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்திலும் இந்த விவசாயிகளுக்கு விரோதமான மசோதாக்களைக் கண்டித்து பல்வேறு ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

250 விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பாக இருக்கும் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) இந்த வேளாண் மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரியுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள பல கட்சிகளும் இந்த மசோதாக்களை எதிர்த்துள்ளன.

புதிய மசோதாக்கள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவும் என்று அரசாங்கம் கூறுகிறது. அவர்கள் கூறுவது உண்மையானால், எந்தவொரு விவாதமும் இல்லாமல் பாராளுமன்றத்தின் மூலம் மசோதாக்களை அவசர அவசரமாக அரசாங்கம் கொண்டுவர வேண்டியத் தேவையில்லை. இவற்றை விவாதிக்க வேண்டுமென விவசாய அமைப்புகள் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கைகளை அது புறக்கணிக்க வேண்டியத் தேவையும் இல்லை. இந்த மசோதாக்களை நியாயப்படுத்த முடியாததால் அரசாங்கம் இவ்வாறு செய்திருக்கிறது.

இவ்வளவு எதிர்ப்பையும் மீறி கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கதாகும். இந்த மசோதாக்கள் விவசாயிகளை அதிகாரமற்றவர்களாக ஆக்குவதோடு, பெருநிறுவன வர்த்தகம் மற்றும் வேளாண் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் நலன்களை மட்டுமே முன்னேற்றும் என்பதும், அவர்கள் எங்கு வர்த்தகம் செய்யலாம், எதை வர்த்தகம் செய்யலாம் என்பதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிவிடும் என்பதும் தெளிவாகிறது. எனவே “அதிகாரமளித்தல்” மற்றும் “பாதுகாப்பு” என்பதெல்லாம் தனிப்பட்ட முதலாளிகளுக்குத் தானே ஒழிய விவசாயிகளுக்கு அல்ல. இது விவசாயத்தின் மீதும், இலட்சக்கணக்கான விவசாயிகள் மீதும் பெரும் நிறுவனங்களின் உடும்புப் பிடியை தீவிரப்படுத்துவதை எளிதாக்குவதும் ஆகும்.

அனைத்து பொருட்களையும் உத்திரவாதமான குறைந்தபட்ச விலையில் கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர். ஆனால் அரசாங்கமோ உண்மையில் அதற்கு நேர் எதிரான் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த மசோதாக்கள் மூலம், மக்களுக்கு உணவளிப்பவர்களுக்கு அரசு நிறைவேற்ற வேண்டிய கடமையை அது முற்றிலுமாக கைவிடுகிறது. இது அரசின் ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாய சந்தைகளின் (ஏபிஎம்சி) உள்கட்டமைப்பை முற்றிலுமாக அழித்து, விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த அறிவிக்கப்பட்ட கொள்கையை ஒழித்துக் கட்டுகிறது..

அரசின் ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாய சந்தைகளை (ஏபிஎம்சி) செயலிழக்கச் செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு பீகார் மாநிலம் ஒரு எடுத்துக்காட்டாகும். 2006 ஆம் ஆண்டில், பீகார் ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாய சந்தைகள் – ஏபிஎம்சி சட்டம் நீக்கப்பட்டது. அதனால் ஒரு புதிய “விவசாய புரட்சியும்”, விவசாயிகளின் விருப்பம் போல அவர்களுடைய விளை பொருட்களுக்கு மிக அதிக விலைகள் வழங்கப்படும் என்பன போன்ற வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. உண்மையோ முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அவர்களுடைய வயல்களிலிருந்து அடிமட்ட விலைக்கு நேரடியாக தனியார் வர்த்தகர்களின் கும்பலுக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டனர், அவற்றை மிகக் குறைவான விலைக்கு வாங்கியவர்கள் அதை பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாய சந்தைகளுக்குக் கொண்டு சென்று குறைந்தபட்ச ஆதார விலையில் விற்று இலாபமடைந்து வருகிறார்கள்!

பிரதமர் தனது உரைகளில் விவசாயிகளை “அனைவருக்கும் உணவு வழங்குபவர்கள்” என்றெல்லாம் புகழ்ந்துரைத்து, இந்த “வரலாற்று சிறப்பு மிக்க” மசோதாக்கள் விவசாயிகளின் விலங்குகளை உடைத்தெறியப் போகிறதென கூறுகையில் அவர் முழு பூசனிக்காயை அப்பட்டமாக சோற்றில் மறைக்கப் பார்க்கும் மோசடியான குற்றவாளியாக இருக்கிறார். உண்மை என்னவென்றால், இந்த மசோதாக்களின் மூலம், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் அழிக்கப்படுவார்கள் அல்லது தனியார் முதலாளிகளுக்கு அடிமைப்படுத்தப்படுவார்கள் என்பதைத்தான் அவரது அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

விவசாயிகள் தங்களுடைய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றனர். கடன்களைத் திருப்பியடைக்க மறுக்கும் மிகப்பெரிய முதலாளிகளுடைய கடன்களைத் தள்ளுபடி செய்துவரும் அரசாங்கம், விவசாயிகளுடைய இந்தக் கோரிக்கைக்குக் கொஞ்சமும் செவி சாய்க்கவில்லை.

பிரதமரும் பல்வேறு அமைச்சர்களும் இந்த மசோதாக்களால், விவசாயிகளுடைய வாழ்க்கை ஒளிமயமாக மாறும் என்று கூறிவருவது முற்றிலும் சாயம் வெளுத்துப் போன வாக்குறுதி என்பதை விவசாயிகள் தங்கள் அனுபவத்திலிருந்து அறிவார்கள். இந்திய விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை மறுக்கப்பட்டு வருவதால். பேரழிவான வறுமையையும் பற்றாக்குறையையும் விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர். நாடெங்கிலும் உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் ஒரு மாதத்திற்கு 1,700 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் தங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். வெறும் 6 சதவீதத்திற்கும் குறைவான விவசாயிகள் மட்டுமே தங்களுடைய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறுகிறார்கள்.. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் கோரிக்கையைப் புறக்கணிப்பது மட்டுமன்றி, உண்மையில் அவர்களை முற்றிலுமாக அழிக்கப் போகின்றன.

நாடெங்கிலும் உள்ள விவசாயிகள் இந்த மசோதாக்களை எதிர்த்து, அவற்றை திரும்பப் பெறக் கோரியுள்ள நிலையில், தங்கள் பயிர்களுக்கு நியாயமான விலைகளைப் பெறமாட்டார்கள் என்ற “தவறான தகவல்களால்” திசைதிரும்ப வேண்டாம் என்று பிரதமர் அவர்களிடம் “வேண்டுகோள் விடுக்கிறார்”. எதிர்க்கட்சிகளும் “இடைத்தரகர்களும்” விவசாயிகளைத் தவறாக வழிநடத்தியதாக அவர் குற்றம் சாட்டுகிறார். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கிறது. இது விவசாயிகளின் வாழ்க்கை அனுபவத்தை முற்றிலும் மறுப்பதாக இருக்கிறது. விவசாயிகள் தங்களுடைய வறுமை மற்றும் தற்கொலைகளுக்கு என்ன காரணம் என்று கொஞ்சமும் தெரியாமல் இருக்கிறார்கள் என்று அது கூறுகிறது. இந்த மசோதாக்களுக்குப் பின்னால் உள்ள நோக்கமானது விவசாயப் பொருட்களின் வர்த்தகத்தை மிகப்பெரிய முதலாளித்துவ நிறுவனங்களின் முழுமையான ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதாகும் என்பதை அது மறுக்கிறது.

அரசாங்கம் வேண்டுமென்றே பல வழிகளிலும் மக்களுக்குத் தவறான தகவல்களை அளித்து வருகிறது. விவசாயிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை சந்தையை சென்றடைவதற்கான வழியே என்று அது கூறுகிறது, ஆனால் விவசாயிகளின் மிகப்பெரிய பிரச்சனையோ, அவர்களின் விளைபொருட்களை இலாபகரமான விலையில் கொள்முதல் செய்யப்படுமென்ற உத்திரவாதம் இல்லாமல் இருப்பதும், கடன் சுமை அதிகரித்து வருவதும் ஆகும்.

இந்த மசோதாக்களை நிராகரிக்கவும், அவை திரும்பப் பெறப்பட வேண்டுமென்றும் கோரிக்கையை வலியுறுத்தி நாடெங்கிலும் ஆர்பாட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக விழிப்புணர்வு கொண்ட அனைத்து மக்களும் அமைப்புகளும் உடன் நிற்க வேண்டும். விவசாயிகளுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனது பொறுப்பை அரசாங்கம் முற்றிலுமாக கைவிட விரும்புகிறது என்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கதாகும்.

உழவர் விரோத, சமூக விரோத மசோதாக்கள் ஒழிக!

தங்கள் உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்த தொழிலாளர்கள் – விவசாயிகளின் ஒற்றுமை நீடூழி வாழ்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *