“தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒன்றுபடுவோம்” என்ற தொடரின் இரண்டாவது கூட்டம் பெரும் வெற்றி!

தலைப்பு: இந்திய ரயில்வே தனியார்மயமாக்கப்படுவதை எதிர்ப்பீர்!

செப்டம்பர் 21, 2020 திங்கட்கிழமை அன்று தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் நடத்திய கூட்டம்

“தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒன்றுபடுவோம்” என்ற தொடரில் இரண்டாவது கூட்டத்தை தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் (மஸ்தூர் ஏக்தா கமிட்டி) ஏற்பாடு செய்திருந்தது. கூட்டம் குறித்து இந்திய ரயில்வே தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இடையிலும், பிற பொதுத்துறை நிறுவனங்களிடையேயும் பரவலாக பரப்புரை செய்யப்பட்டது. நாடு முழுவதிலுமிருந்து 320 க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் தோழமை நிறைந்த கூட்டத்தில் பங்கேற்றனர். லோகோ பைலட்டுகள், கார்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், இருப்புப்பாதை பராமரிப்பாளர்கள், ரயில் இயக்கத்தைக் கட்டுப்படுத்துபவர்கள், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர்கள், டிக்கெட் பரிசோதனை ஊழியர்கள் மற்றும் ரயில்வே தொழிற்சாலை ஊழியர்கள் என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். பிபிசிஎல், ஹெச்பிசிஎல், ஓஎன்ஜிசி, ஏர் இந்தியா, எல்ஐசி, போஸ்ட் & டெலிகம்யூனிகேஷன்ஸ், வங்கிகள், சுகாதாரம் மற்றும் கல்வித் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களும் அவர்களுடைய பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். கொரோனா பாதிப்புக்குள்ளான ஒரு ரயில்வே தொழிலாளி தனது மருத்துவமனை படுக்கையிலிருந்து கூட கூட்டத்தில் பங்கேற்றார். அந்த அளவிற்கு இந்தக் கூட்டம் தொழிலாளர்களிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கியிருக்கிறது.

கூட்டத்தில் பங்கேற்றவர்களை தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் செயலாளர் தோழர் மேத்யூ வரவேற்றார். தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட கடினமான சூழ்நிலையிலும் இந்திய ரயில்வே தொழிலாளர்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகின்றனர் என்று அவர் கூறினார். உணவுப் பொருட்கள், மருந்துகள், எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை நம் நாட்டின் எல்லா மூலைகளுக்கும் கொண்டு செல்லப்படுவதை அவர்கள் உறுதி செய்தனர். 13 லட்சம் தொழிலாளர்களில், 14,000 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுவிட்டது.  அதில் 360 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் விகிதமும் இறந்தவர்களின் விகிதமும் அனைத்திந்திய விகிதத்தை விட அதிகமாக இருந்தன. தனியார்மயமாக்கலுக்கு எதிராக அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். தனியார்மயமாக்கலுக்கு எதிராக துணிவோடு ஒரு போராட்டத்தை நடத்தி வருவதற்காக வங்கி ஊழியர்களை அவர் பாராட்டினார். வங்கி தனியார்மயமாக்கல் ஏன் சாதாரண மக்களுக்கு பாதகமானது என்பதை விளக்குவதற்காக வங்கி ஊழியர்கள் தயாரித்த அறிக்கைகளையும் காணொளிகளையும் பரப்புவதற்கு தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் உதவி வருவதை அவர் குறிப்பிட்டார்.

தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் சார்பாக தோழர் அசோக் குமார் வழங்கிய மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் விளக்கக்காட்சிக்குப் பிறகு, இரயில்வேவின் பல்வேறு பிரிவு சங்கங்களைச் சேர்ந்த பேச்சாளர்கள் தத்தம் கருத்துக்களை முன்வைத்தனர். நாக்பூரிலிருந்து AILRSA – அகில இந்திய லோகோ ரன்னிங் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் எம்.என் பிரசாத், விஜயவாடாவிலிருந்து AIGC – அகில இந்திய கார்டுகளின் கவுன்சில் தோழர் எஸ்பி சிங், சென்னையிலிருந்து AISMA அகில இந்திய ஸ்டேஷன் மாஸ்டர்கள் கூட்டமைப்பின் தேசிய ஆலோசகர் தோழர் ஜான் வின்சென்ட், விஜயாவாடாவிலிருந்து AITCA அகில இந்திய ரயில் கட்டுப்பாட்டாளர்கள் அசோசியைசனின் பொதுச் செயலாளர் தோழர் வர பிரசாத், அகமதாபாதிலிருந்து IRS&TMU இந்திய ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பராமரிப்பவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் ஏசி பிரகாஷ், தில்லியிலிருந்து AIRTU அகில இந்திய ரயில்வே டிராக் பராமரிப்பவர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் என் பஞ்சால், போபாலிருந்து IRTCSO இந்திய ரயில்வே டிக்கட் சரிபார்க்கும் பணியாளர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர்  ஹேமந்த் சோனி, மும்பையிலிருந்து AIREC அனைத்திந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பின் மேற்கு ரயில்வே மண்டல செயலாளர் தோழர் ஏகே சிரிவத்சவா ஆகியோர் உட்பட பல தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர். CGPI – இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான செயற்பாட்டாளர்கள் மிகவும் பயனுள்ள வகையில் கருத்துக்களை வழங்கினர்.

விளக்கக்காட்சியிலும் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட உரைகளிலும் மிக முக்கியமான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

1991 ல் காங்கிரசு கட்சியால் தொடங்கப்பட்ட தாராளமயம், தனியார்மயம் மூலம் உலகமயமாக்கும் புதிய பொருளாதாரக் கொள்கையை அப்போதிலிருந்து ஒவ்வொரு அரசாங்கமும் பின்பற்றி வருகின்றன. எல்லாவற்றையும் அனைவரையும் இலாபத்தின் ஆதாரமாகப் பார்க்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோகங்களின் நிகழ்ச்சி நிரல் இது. முதலாளித்துவத்தின் தன்மை காரணமாக அவர்கள் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்காக இலாபத்திற்கான புதிய வழிகளை அவர்கள் தேடுகிறார்கள். மக்களின் பணத்தில் கட்டப்பட்ட பொதுத்துறை சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு கைப்பற்றுவது அவர்களுக்கு மிகவும் இலாபகரமானதாகும்.

2001 ஆம் ஆண்டில் ராகேஷ் மோகன் குழு இந்திய ரயில்வேயின் “முக்கியமற்ற துறை” என்று அழைக்கப்படுவனவற்றை நிறுவனமயமாக்குவதன் மூலம் தனியார்மயமாக்க வழிமுறையைத் தொடங்க பரிந்துரைத்தது. 2014 ஆம் ஆண்டில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வரை பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளின்படி தனியார்மயமாக்கலுக்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. டெப்ராய் குழு முழுமையான தனியார்மயமாக்கலை வலியுறுத்தியது. 2019 ஆம் ஆண்டில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய சனநாயகக் கூட்டணி அரசாங்கம், 100 நாள் செயல் திட்டத்தை அறிவித்தது. நாடு முழுவதிலுமிருந்து எழுந்த தொழிலாளர்களின் உறுதியான எதிர்ப்பு காரணமாக, இந்த திட்டத்தை 100 நாட்களில் முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை, ஆனால் அது இன்னும் பெரிய அளவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அண்மை ஆண்டுகளில் பல ரயில் நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன, மேலும் 2019 இல் 2 தேஜாஸ் (தனியார்) ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. மிகவும் இலாபகரமான 109 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்களை இயக்கவும், மேலும் 50 ரயில் நிலையங்களை தனியார்மயமாக்கவும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புது தில்லி ரயில் நிலையத்தின் 5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவை புதுப்பித்துக் கட்டவும், அதைச் சுற்றியுள்ள கூடுதல் 2.6 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவும் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதேபோல், மும்பையின் மைய நிலையமான சி.எஸ்.எம்.டி-யும் மாற்றியமைக்கப்படும். அதை மேற்கொள்ளும். தனியார் நிறுவனத்தின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 2.5 லட்சம் சதுர மீட்டர் இடம் அறுபது ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்படும்.

அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் உற்பத்திப் பிரிவுகளை நிறுவனப்படுத்தும் வேலையைத் தொடங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்காக தற்போதைய ஏழு இரயில் பெட்டி தொழிற்சாலைகளை இந்திய ரயில்வே ரோலிங் ஸ்டாக் எனப்படும் ஒரே ஒரு நிறுவனமாக இணைக்கப்பட உள்ளன.

சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய ஆளும் வர்க்கம் அதன் தேவைகளுக்கு ஏற்ப தேசியமயமாக்கலையும், தனியார்மயமாக்கலையும், அவ்வப்போது இருக்கும் அரசாங்கங்களின் மூலம் செய்து வருகிது. சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு மாகாணங்களின் கீழிருந்த 32 தனியார் ரயில்வே நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டன. இன்று இந்திய ரயில்வேயின் மிகவும் இலாபகரமான துறைகள் மட்டுமே தனியார்மயமாக்கப்படுகின்றன. அதே நேரத்தில், நட்டத்தில் இயங்கிவரும் மும்பை மெட்ரோவை பொதுத்துறைக்கு தள்ளிவிடும் திட்டங்களும் இருக்கின்றன.

இந்திய ரயில்வே தொழிலாளர்களில் நான்கில் ஒரு பகுதியினர் – 4 லட்சம் பேர் – ஏற்கனவே தனியார் ஒப்பந்தக்காரர்களின் கீழ் மோசமான ஊதியத்திற்கு, ஆபத்தான சூழ்நிலைகளில், வேலை பாதுகாப்போ எந்த சலுகைகளோ இல்லாமல் வேலை செய்து வருகிறார்கள். சுமார் 12 லட்சம் தொழிலாளர்கள் இந்திய ரயில்வேயில் இன்னமும் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த வலிமை மிகப் பெரியதாகும். மேலும் அவர்கள் மிக முக்கியமான, “அத்தியாவசிய” சேவைகளில் வேலை செய்து வருகின்றனர். தனியார்மயமாக்கல் பயணிகளுடைய நலன்களை எவ்வாறு மோசமாக பாதிக்கும் என்பதை அவர்களுக்கு விளக்கிக் கூறி, அவர்களையும் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டால், தொழிலாளர்களுடைய வலிமை பல மடங்காக அதிகரிக்கும். (பெட்டியைக் காண்க).

ரயில் பயணிகள் மற்றும் பிற தொழிலாளர்கள் மீது பாதிப்புகள்

  • பயணக் கட்டணங்கள் பெருமளவில் உயர்வு
  • டைனமிக் கட்டணக் கொள்கை, அதாவது பயணம் செய்ய தேவை கூடும் போது கட்டணத்தை அதிகரிப்பது
  • சீசன் டிக்கெட்டுகள் இல்லை (மேட்ரோ-வில் ஏற்கெனவே சீசன் டிக்கெட்டுகள் இல்லை)
  • தற்போது மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களின் பயணத்திற்கு தற்போது கொடுக்கப்பட்டுவரும் சலுகைகள் மறுக்கப்படும்
  • நீர், கழிப்பறைகள், படுக்கை சுருள்கள் போன்ற ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக கட்டணங்கள்.
  • இலாபம் அதிகமற்ற வழித்தடங்களிலும், அதிக கூட்டமில்லாத நேரங்களிலும் சேவைகளை வெட்டிக் குறைத்தல்
  • செலவைக் குறைப்பதற்காக பராமரிப்பு பணிகளைக் குறைத்தல். அதன் மூலம் பாதுகாப்பு விட்டுக் கொடுக்கப்படுகிறது.

இந்திய ரயில்வே மக்களின் சொத்தாகும். கிட்டத்தட்ட ரூ. 6 லட்சம் கோடி மதிப்புள்ள அதன் சொத்துகள் மக்களுடைய பணத்தாலும், லட்சக்கணக்கான ரயில் தொழிலாளர்களின் கடின உழைப்பினாலும் கடந்த 165 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வந்துள்ளது! பாதுகாப்பான மக்களுக்குக் கட்டுப்படியாகும் வகையில் ரயில் பயணத்தை வழங்குவது என்பது ஒரு அரசாங்கத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். அதை தனியார் இலாபத்திற்காக ஒப்படைக்க அதற்கு கொஞ்சமும் உரிமை இல்லை! கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடி நீர், மின்சாரம் போன்ற பிற சேவைகளும் இது போன்றதே ஆகும். இவற்றை தனியார்மயமாக்குவதன் மூலம் இந்த அத்தியாவசியமான சேவைகளை கோடிக்கணக்கான மக்களுக்கு மறுப்பது முற்றிலும் சமூக விரோதமான செயலாகும்!

ரயில்வே மிக முக்கியமான துறை மட்டுமின்றி, உண்மையில் நாட்டின் உயிர்நாடியும் ஆகும். அவற்றில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தேச விரோத நடவடிக்கையாகும்!

இவ்வாறு, இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்குவது என்பது முழு இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மீதும், அனைத்து உழைக்கும் மக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்!

கடந்த ஆண்டு தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூடி, இந்திய ரயில்வேயின் ஏழு உற்பத்தி பிரிவுகளும், ஆயுதத் தொழிற்சாலைகளும், நிறுவனமயப்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த முடிந்தது. பிரிட்டன், அர்ஜென்டினா மற்றும் சமீபத்தில் மலேசியாவின் கோலாலம்பூர் இரயில்களில் நடந்ததைப் போலவே தனியார்மயமாக்கும் திட்டத்தை நாம் தடுத்து நிறுத்தி அதை மீண்டும் பொதுத்துறையின் கீழ் கொண்டு வர முடியும்.

பெரும்பான்மையான பேச்சாளர்கள் இந்தியாவின் மறுமலர்ச்சியை நோக்கி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டனர். அப்படிப்பட்டதொரு அமைப்பில், முதலாளிகளுடைய பேராசையை அல்லாமல், மக்களுடைய தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதற்கு மக்கள் கைகளில் அதிகாரம் இருக்கும்.

இந்திய ரயில்வே தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிரான போராட்டம், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் அத்தியாவசிய சேவைகளையும் தனியார்மயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதை பங்கேற்வர்கள் ஒப்புக்கொண்டனர். “ஒருவரின் மீதான தாக்குதல் அனைவருக்கும் மீதுமான தாக்குதல்!” என்ற அடிப்படையில் நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக செயல்பட வேண்டும்,

ஆலை மற்றும் கிளை மட்டத்தில் ஒற்றுமையை கட்டியமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அதை எல்லா இடங்களுக்கும் விரிவுபடுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒரு பரந்த முன்னணி கட்டப்பட வேண்டும். அந்த நோக்கத்தோடு, தனியார்மயமாக்கலின் பேரழிவு குறித்து குடிமக்களிடையே ஒரு பரப்புரையை மேற்கொள்ளதென முடிவெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *