குறைந்த சம்பளம், வசதிகள் இல்லாமை குறித்து கர்நாடக மருத்துவப் பணியாளர்கள் ஆர்பாட்டம்

ஆகஸ்டு 13 அன்று கருநாடகம் பெலாகவியில் உள்ள மருத்துவ அறிவியல் கழகத்திலுள்ள செவிலியர்களும் மற்ற  தொழிலாளர்களும் தம் எதிர்ப்பைக் காட்டும் வகையில் கருப்புப் பட்டைகளை அணிந்திருந்தனர். அவர்களுக்குக் கொடுக்கப்படும் குறைந்த சம்பளத்தையும், மோசமான வேலை நிலைகளையும், சமூகப் பாதுகாப்பு பயன்கள் இல்லாததையும் எதிர்த்து அவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். அனைத்து காலியிடங்களையும் நிரப்ப வேண்டுமெனவும், அனைத்து தற்காலிக ஊழியர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டுமெனவும், நல்ல பணி நிலைமைகள் மற்றும் வசதிகளையும் அவர்கள் கோரினர். மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பிற பணி ஓய்வு சலுகைகள் போன்ற வசதிகளையும் அவர்கள் கோரினர்.

“நாங்கள் ஒவ்வொரு மட்டத்திலும் 30% க்கும் மேற்பட்ட காலியிடங்களுடன் வேலை செய்து வருகிறோம். எடுத்துக்காட்டாக, மூன்று வார்டுகளுக்கு ஒரு தொழில்நுட்ப வல்லுநரும், 100 படுக்கைகளுக்கு ஒரு செவிலியரும் மட்டுமே உள்ளனர். அனுமதிக்கப்பட்ட காலியிடங்களை நிரப்புவதன் மூலம் எங்களுடைய அதிக வேலைச் சுமையைக் குறைக்க வேண்டும்” என்று பிம்ஸ் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கூறினார். வேலை நிலைமைகள் பொறுக்க முடியாதவைகளாக உள்ளன என்று அவர் விளக்கினர்.

பெரும்பாலான உதவி ஊழியர்களும், நோயாளிகளுக்கு வேலை செய்பவர்களும், துணை மருத்துவ மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களும், செவிலியர்களும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வேலையில் வைக்கப்பட்டுள்ளனர். வேலைகளை நிரந்தரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டுவரும் கோரிக்கையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *