கடந்த இரண்டு வாரங்களாக கேரளாவில் இளநிலை செவிலியர்கள் வேலைநிறுத்தம்

மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் (எம்.சி.எச்) வேலை செய்யும் இளநிலை செவிலியர்கள் ஆகஸ்டு 21-ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக அவர்கள் ஊதியம் கோருகின்றனர்.

பி.எஸ்.சி நர்சிங் முடித்து, கேரள செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சிலின் கீழ் பதிவு செய்திருந்த இளநிலை செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒரு வருட வேலையில் வைக்கப்பட்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டில் நிரந்தர செவிலியர்களின் அடிப்படை சம்பளத்துடன் சமமாக இருப்பதற்காக அவர்களின் உதவித்தொகையை ரூ. 6,000 இலிருந்து ரூ 13,900 ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும், உயர்த்தப்பட்ட இந்த ஊதியத்தை 2016-லிருந்து மட்டுமே கொடுக்கத் தொடங்கினர். அதே ஆண்டு நிரந்தர செவிலியர்களின் ஊதியம் ரூ. 27,800 ஆக உயர்த்தப்பட்டது. “நாங்கள் ஒராண்டிற்கும் மேலாக ஊதிய உயர்வு கோரி வருகிறோம், ஆனால் எங்களுக்கு வாக்குறுதிகள் மட்டுமே பதிலாகக் கிடைத்து வருகின்றன. 200 க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் பதிவு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்குக் கொடுக்கப்படும் அதே ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவு கூட உள்ளது” என்று கட்டாய செவிலிய சேவை ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அர்ஜுன் பி.பி கூறினார்.

“நாங்கள் எங்கள் கட்டாய வேலைவாய்ப்பை செய்து கொண்டிருக்கலாம். ஆனால் நாங்களும் முன்னணியில் நின்று வேலை செய்கிறோம். நாங்கள் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவிலும், கொரோனா வார்டுகளிலும், நோயாளிகளை கவனிக்கும் பிற முக்கிய வேலைகளிலும் கடமை ஆற்றி வருகிறோம். ஆனால் எங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ 450 மட்டுமே சம்பளம் கிடைக்கிறது. நாங்கள் செய்யும் வேலைக்கு சம ஊதியம் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று ஒரு பயிற்சி செவிலியர் கூறினார்.

“நாங்கள் சுமார் 6 மணி நேரம் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு வேலை செய்கிறோம். கோரோனா நோயாளிகளை கவனித்துக் கொள்கிறோம், அவர்களுக்கு மருத்துவ உதவிகளையும், உளவியல் ஆதரவையும் வழங்குகிறோம். இது எங்கள் கடமை, அதை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அதே நேரத்தில் மற்ற செவிலியர்களைப் போலவே நாங்கள் செய்யும் வேலைக்கு சமமான சம்பளத்தை வழங்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கேட்டுள்ளோம்” என்று இன்னொரு இளம் செவிலியர் கூறினார்.

இரண்டு வார போராட்டங்களுக்குப் பிறகும், வேலைநிறுத்தம் செய்யும் செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. மாறாக, வேலைநிறுத்தம் செய்யும் செவிலியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் பதிவு ரத்து செய்யப்படும் என்றும் அவர்கள் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படலாம் என்றும் அச்சுறுத்தப்படுகின்றனர். வேலைநிறுத்தம் செய்யும் செவிலியர்களின் கடமைகளை பி.எஸ்.சி நர்சிங் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களைக் கொண்டு செய்ய அரசாங்கம் முயன்றது, இருப்பினும், செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை விட்டுக் கொடுக்காமல், துணிவோடு தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *