தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒன்றுபடுவோம்!

தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், செப்டம்பர் 5, 2020 சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்து நடத்திய கூட்டம்.

இலட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதன் மூலம் பெரிய முதலாளிகள் நமது நாட்டு மக்களை திட்டமிட்ட முறையில் கொள்ளையடித்து வருவது பற்றிய செய்தி ஒவ்வொரு நாளும் வந்த வண்ணம் இருக்கிறது. தனியார்மயமாக்கல் என்ற இந்த அரக்கனைத் தடுத்து நிறுத்த தொழில் துறை, கட்சி, தொழிற்சங்கம் மற்றும் பிற வேறுபாடுகளைக் கடந்த அளவில் ஒன்றிணைவது அவசியமாகும் என்பதை பாதிக்கப்படும் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களும் மற்ற தொழிலாளர்களும் புரிந்துகொள்கிறார்கள். இந்த நோக்கத்தோடு முதல் படியாக, தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் (மஸ்தூர் ஏக்தா கமிட்டி), “தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒன்றுபடுவோம்!” என்ற ஒரு கூட்டத்தை செப்டம்பர் 5, 2020 இல் ஏற்பாடு செய்து நடத்தியது. நாடெங்கிலும் இருந்து வங்கிகள், ரயில்வே, ஏர் இந்தியா, பெட்ரோலிய நிறுவனங்கள் போன்ற பல்வேறு பொதுத்துறை மற்றும் பிற நிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்களும், செயற்பாட்டாளர்களும், பேராசிரியர்களும், ஆசிரியர்களும் பிற அக்கறைகொண்ட குடிமக்களும் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் செயலாளர் தோழர் மேத்யூ நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வரவேற்றார். 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மாடர்ன் புஃட்ஸ் நிறுவனத்தை வெறும் ரூ. 124 கோடிக்கு விற்பதில் தொடங்கிய தனியார்மயமாக்கலை துவக்கத்திலிருந்தே தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் மற்ற அமைப்புக்களோடு சேர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது என்று அவர் கூறினார். அப்போதிலிருந்தே மற்ற தொழிற்சங்கங்களுடன் இணைந்து தனியார்மயத்தை எதிர்த்து தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக நடைபெற இருக்கும் கூட்டத் தொடரின் முதல் சந்திப்பு இதுவென அவர் அறிவித்தார். இதன் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து நாம் அறிந்து கொள்வதோடு, ஒரு ஒருங்கிணைந்த செயல் திட்டத்தையும் உருவாக்குவோமென அவர் அறிவித்தார்.

“பொதுத்துறை வங்கிகளின் தனியார்மயமாக்கலை எதிர்ப்போம்” என்ற தலைப்பில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் சார்பாக ஒரு விளக்கக்காட்சியை வழங்க தோழர் அசோக் குமாரை அவர் அழைத்தார். கடந்த 25 ஆண்டுகளாக பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பதன் மூலம் தனியார்மயம் எவ்வாறு படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை பேச்சாளர் விளக்கினார். இப்போது பொதுத்துறை வங்கிகளை இணைப்பதன் மூலம் மிகப் பெரிய வங்கிகள் உருவாக்கப்படுகின்றன. பெரும் முதலாளிகளுக்குத் தேவைப்படும் மிகப்பெரிய அளவிலான மூலதனத்தை வழங்கக் கூடிய மிகப் பெரிய வங்கிகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். பல்வேறு வங்கி தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளவாறு, இந்த ஏப்ரல் மாதத்தில் 10 வங்கிகளை 4 வங்கிகளாக இணைப்பதன் மூலம் 7000 கிளைகள் மூடப்படுவதற்கும் 4000-5000 பேர் வேலை இழப்பதற்கும் வழிவகுக்கும். இப்போது எதனோடும் இணைக்கப்படாமல் இருக்கும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இன்டஸ்டிரியல் டெவலப்மென்ட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி ஆகிய நான்கு வங்கிகளும் தனியார்மயமாக்கலுக்கு தயாராக்கப்பட்டு வருகின்றன.

பொதுத் துறை வங்கிகள் எப்படி பெரும் முதலாளிகள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுக்கு சேவை புரிந்து வருகின்றன என்பதை பல உண்மைகளையும் புள்ளிவிவரங்களையும் கொண்டு பேச்சாளர் விளக்கினார். எடுத்துக்காட்டாக, கடந்த 7 ஆண்டுகளில் பெரும் முதலாளிகள் வாங்கிய 6.7 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வாங்கிய கடன்களைத் திருப்பிக் கட்ட மறுக்கும் முதலாளிகளுக்கு எந்த தண்டனையும் இல்லை. பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, ரூ. 3.15 லட்சம் கோடி பொது மக்களுடைய நிதி மறு மூலதனமாக பயன்படுத்தப்பட்டுள்ளன!

நிதித்துறையில் கொள்ளை லாபம் அடைவதற்கு மிகப் பெரிய வாய்ப்புகள் இருப்பதாக இந்திய முதலாளிகள் பார்க்கிறார்கள். பெருநிறுவனங்களின் மொத்த இலாபத்தில் 15% மட்டுமே இந்திய நிதித்துறை மூலம் பெறப்படுகிறது. அமெரிக்காவில் இது 40% வரை இருக்கிறது. அதிகபட்ச லாபம் ஈட்டுவதற்காக, நிதித் துறை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வேண்டும் என்று பெரும் முதலாளிகள் விரும்புகிறார்கள்.

வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதை வங்கித் தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் எதிர்த்து வந்துள்ளனர். தனியார் வங்கிகள் போலில்லாமல், விவசாயிகளுக்கும் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் கடன் வழங்குவது, வங்கியில்லாத பகுதிகளில் கிளைகளை இயக்குவது, ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்குகளைத் திறப்பது போன்ற சமூகப் பொறுப்புக்களை பொதுத்துறை வங்கிகள் செயல்படுத்துகின்றன என்பதை வங்கித் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “மக்களுடைய பணம் மக்கள் நலனுக்காகவே!”, ஒரு சில பெரும் பணக்கார முதலாளிகளின் பேராசையை நிறைவேற்றுவதாக இல்லாமல் அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக வங்கி மறுசீரமைக்கப்பட வேண்டும் போன்ற மிக முக்கியமான கோரிக்கைகளை தொழிலாளர்கள் எழுப்பியிருக்கின்றனர்.

தனியார்மயமாக்கலுக்கு எதிரான வங்கித் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என்றார் அவர். வங்கி சேவைகளைப் பயன்படுத்தும் அனைவரின் ஆதரவையும் நாம் வெல்ல வேண்டும்!

இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், AIBEA (அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்)-இன் துணைத் தலைவருமான தோழர் தேவிதாஸ் துல்ஜாபுர்கர் உரையாற்றினார். கூட்டத்தை ஏற்பாடு செய்த அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்த பின்னர், கடந்த முப்பது ஆண்டுகளாக பல்வேறு அரசாங்கங்கள் இடைவிடாமல் தனியார்மயமாக்கலை நோக்கி தள்ளி வந்துள்ளதை அவர் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாக பொதுத்துறை வங்கிகள் எவ்வாறு திட்டமிட்ட முறையில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன என்பதை அவர் விளக்கினார். பொது மக்களுடைய பணமானது, அரசாங்கத்தின் ஆதரவோடு பெரும் முதலாளிகளால் மோசடி செய்யப்பட்டுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில், 67% பெரிய நிறுவனங்களுடைய கடன்களாகும். அதில் விவசாய கடன்கள் 7.16% மட்டுமே ஆகும். இருந்துங்கூட, இந்திய ரிசர்வ் வங்கியும் மற்றவர்களும் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதை எதிர்க்கின்றனர். அதே நேரத்தில் இழப்புக்குள்ளாக்கியுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு கோடிக்கணக்கான பொது மக்களுடைய நிதிகள் வழங்கப்பட்டுள்ளன. பெரும் நிறுவனங்கள் மோசடிகள் மூலமாகவும் வங்கிகளை சூறையாடி வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 1.02 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 93% மோசடிகளை பெரும் நிறுவனங்கள் செய்துள்ளன.

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் ஒரு குழுவாகக் கூடி, சேமிப்புக் கணக்கிற்கு 3.5% க்கும் அதிகமான வட்டி கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளன. இந்த பெருந் தொற்றுநோய் காலத்தில் வைப்புத் தொகைக்கு வட்டி 2.70% ஆக குறைந்துள்ளது. சேமிப்புக் கணக்கு வட்டி விகிதத்தில் ஒவ்வொரு சதவிகித வீழ்ச்சிக்கும், பொதுமக்கள் 1.5 லட்சம் கோடி ரூபாயை இழக்கிறார்கள். எனவே வட்டி விகித வீழ்ச்சியின் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான தொகை மக்களிடமிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கு புத்தகத்தில் பதிவு செய்தல், வருடாந்திர ஏடிஎம் பராமரிப்பு, எஸ்எம்எஸ் அனுப்புதல், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலான ஏடிஎம் பயன்பாட்டிற்கு, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காதது போன்ற எல்லாவற்றிற்கும் வங்கிகள் இப்போது மக்களிடம் கட்டணம் வசூலிக்கின்றன.

முன்னுரிமை துறைகளுக்கு கடன் வழங்குவதில் வங்கிகளுக்கு ஆர்வம் இல்லை. பல ஆண்டுகளாக முன்னுரிமைத் துறையின் வரையறை மாற்றப்பட்டுள்ளது, எனவே நடைமுறையில் வங்கிகள் ஏழை விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதில்லை. எடுத்துக் காட்டாக, மறுவரையறைக்குப் பிறகு முன்னுரிமைத் துறையாகக் கருதப்படும் ஒரு கிடங்கிற்கு 2 கோடி கடன் வழங்குவது மிகவும் வசதியானது என்று வங்கிகள் கருதுகின்றன. எனவே. மகேந்திரா டிரான்போர்ட் நிறுவனம் விவசாய போக்குவரத்து வாகனங்களுக்கு 200 கோடி ரூபாயைக் கடனாகப் பெற முடியும், ஏனெனில் அது இப்போது முன்னுரிமைத் துறையில் வருகிறது! மராட்டிய மாநிலத்தில் மிக அதிகமான விவசாயக் கடன்கள் மும்பை நகரின் மிக ஆடம்பரமான மையமாகிய நரிமன் பாயிண்டில் உள்ள வங்கிக் கிளைகளால் வழங்கப்படுகிறது. அந்த நகர மையத்திலிருந்து குறைந்தபட்சம் 20 கி.மீ. சுற்று வட்டாரத்தில் விவசாயமே நடைபெறுவதில்லை!

மகாராஷ்டிரா வங்கி தனியார்மயமாக்கப்படும் அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளது. மகாராஷ்டிராவில் மிகப்பெரிய வலைப்பின்னலைக் கொண்டுள்ள இந்த வங்கி, மாநிலத்தின் உயிர்நாடியாகும். இந்த ஆண்டு வங்கி நிறுவப்பட்ட வாரத்தில் (செப்டம்பர் 13-20), 10,000 தொழிலாளர்கள் நாடு முழுவதும் 50 இடங்களில் போஸ்டர்கள், தட்டிகள் போன்றவற்றைக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வார்களென தோழர் துல்ஜாபுர்கர் அறிவித்தார். தங்களுடைய வங்கி தனியார்மயப்படுத்தப்படுவதற்கு எதிராக கடைசி வரை போராடுவோமென அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் தங்களது 5 லட்சம் வாடிக்கையாளர்களின் தொடர்புக்கான விவரங்களை திரட்டி வைத்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா வங்கியை தனியார்மயமாக்குவது எப்படி வாடிக்கையாளர்களின் நலன்களுக்கு எதிரானது என்பதை விளக்கி அவர்களை மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். தங்களுக்கு ஆதரவளிக்குமாறு தொழிற் சங்கங்களுக்கும், பிற அமைப்புகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார். நம்மிடையே உள்ள போட்டி மற்றும் பொறாமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நம் நாடு மற்றும் மக்களின் நலனை மையமாக வைத்து உழைக்க முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பல பங்கேற்பாளர்களும் பல கருத்துக்களை முன்வைத்தனர். அவர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், மக்கள் வைப்புத்தொகையை முதலாளித்துவம் கொள்ளையடிப்பதற்கு எதிராகவும் வங்கித் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள நியாயமான போராட்டத்திற்கு முழு மனதோடு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். பெரிய வங்கிகள் உழைக்கும் மக்களை கொள்ளையடித்து வருவது குறித்தும், முதலாளிகள் கட்ட மறுக்கும் கடன் சுமைகளை மத்திய அரசு எவ்வாறு மக்கள் தலையில் ஏற்றுகிறது என்பது குறித்தும் பலரும் கோபத்தை வெளிப்படுத்தினர். தொழிலாளர்கள் மற்றும் மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பின் மூலம் தனியார்மயமாக்கலை வெற்றிகரமாக தடுத்து நிறுத்த முடியும் என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளின் மூலம் பல பங்கேற்பாளர்கள் சுட்டிக்காட்டினர். நம் நாட்டில் வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிரான போராட்டத்திற்கான பொது மக்களுடைய ஆதரவை மேலும் வலுப்படுத்தி விரிவுபடுத்த வேண்டுமென்ற உறுதியுடன் கூட்டம் முடிவடைந்தது.

இந்திய ரயில்வேயின் தனியார்மயமாக்கல் தொடர்பான அடுத்த அமர்வில் கலந்து கொள்ள அனைத்து பங்கேற்பாளர்களும் ஆர்வத்தை வெளிப்படுத்தியதோடு கூட்டம் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *