தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம்

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி – மத்தியக் குழுவின் அறிக்கை சூலை 4, 2020

நம் நாட்டில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பொறுக்க முடியாததாக ஆகிவிட்டது. வேலையின்மை, சுரண்டல் மற்றும் வறுமை ஆகியவை இதுவரை பார்த்திராத அளவை எட்டியுள்ளன.

ஒன்றன்பின் ஒன்றாக, பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களும், நாட்கூலித் தொழிலாளர்களும் நிரந்தரத் தொழிலாளர்களும் கூட வேலையிலிருந்து தூக்கியெறிப்படுகின்றனர். பணியில் இருப்பவர்களில் பலருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

முடக்கப்பட்டதன் விளைவாக கோடிக் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கும் சொந்த ஊர்களுக்கும் தப்பி ஒட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நகரங்களுக்குத் திரும்புவோர் கொரோனா வைரசிலிருந்து போதுமான பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான சூழ்நிலையில் வேலை செய்யுமாறு தள்ளப்படுகிறார்கள்.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (ஈபிஎஃப்) முதலாளிகளின் பங்களிப்புகள் குறைக்கப்பட்டுள்ளன, அதேபோல் இந்த ஓய்வூதிய நிதிக்கு கிடைக்கும் வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் சேமிப்புகள் ஊக அடிப்படையில் செயல்படும் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் முதலாளித்துவ நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதன் ஒரு பகுதியாக, பொதுத்துறை நிறுவனங்கள் மீது பெரும் இழப்புகளும் அளவுக்கு மீறிய கடன்களும் சுமத்தப்படுகின்றன.

பொருளாதார மறுமலர்ச்சிக்கான தொகுப்பு என்று அழைக்கப்படுவதை பிரதமர் அறிவிக்கும்போது, தற்போதைய நெருக்கடியை ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டுமென அழைப்பு விடுத்தார். உழைப்புச் சுரண்டலை முடிந்தவரை அதிகபட்சமாக தீவிரப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்த வேண்டுமென முதலாளி வர்க்கத்திற்கு அவர் விடுத்த அழைப்பாகும் இது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கும், தொழிலாளர்களின் வேலை நேரத்தை நீட்டிப்பதற்கும், அவர்களின் ஊதியங்களையும் பயன்களையும் வெட்டிக் குறைப்பதற்கான அழைப்பாகும் இது. அவுட்சோர்சிங் எனப்படும் வெளியே கொடுத்து வேலைகளைச் செய்தல் மற்றும் தனியார்மயமாக்கல் வழிமுறைகளை அனைத்து மத்திய அமைச்சரகங்களும் துரிதப்படுத்துவதற்கான அழைப்பாகும் இது. மேலும் இது, தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியங்கள், வேலை நாளுக்கு 8 மணி நேர வரம்பு மற்றும் போராடி வென்ற பிற உரிமைகளை தொழிலாளர்களுக்கு மறுக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள அழைப்பாகும்.

தொழிலாளர்கள் நாம், நம்முடைய விவசாய உடன்பிறப்புக்களோடு சேர்ந்து இந்தியாவின் செல்வத்தை உருவாக்குகிறோம். எனினும் நாம் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகிறோம். முதலாளிகளையும், அவர்களுடைய அரசாங்கத்தையும் பொறுத்த மட்டிலும், நாம் சுமையாகக் கருதப்படும் மிருகங்களே ஆவர். நாம் உழைத்து சம்பாதிக்கும் ஊதிய வருவாயை குறைக்கப்பட வேண்டிய “செலவாகவே” அவர்கள் பார்க்கிறார்கள்.

முடக்கப்பட்ட இந்த ஆபத்தான சூழ்நிலையிலும், வீதிகளில் இறங்கி தொழிலாளர்கள் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுடைய மோசமான நிலைமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து அவர்கள் உரிமைகளைக் கோருகின்றனர். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தின் முன்னணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரத் துறை ஊழியர்கள் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கி, தொலைத் தொடர்பு, ரயில்வே, நிலக்கரிச் சுரங்கம் மற்றும் பிற துறைகளில் உள்ள தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கும் பொதுச் சொத்துக்களை அழிப்பதற்கும் எதிராக உறுதியுடன் போராடி வருகிறார்கள்.

பத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்புகள் கூட்டாக விடுத்த அழைப்பை ஏற்று நேற்று – சூலை 3 அன்று நாடு தழுவிய போராட்டத்தில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு முடிவு கட்டுதல், சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தபட்ச ஊதியமாக மாதத்திற்கு ரூ 18,000/-, சுகாதாரத் துறை “தன்னார்வலர்களை” தொழிலாளர்களாக அங்கீகரித்தல், தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் திருத்தங்களை நிறுத்தி மாற்றியமைத்தல், அனைத்து உழைக்கும் மக்களையும் உள்ளடக்கிய பொதுவான ஓய்வூதியத் திட்டம், விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் தொழிற்சங்கங்களைப் பதிவு செய்தல், தனியார்மயமாக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்துதல் மற்றும் அனைவருக்கும் பொதுவான பொருட்கள் விநியோக முறை உள்ளிட்ட தொழிலாளி வர்க்கத்தின் நீண்டகால கோரிக்கைகளை அவர்கள் எழுப்பினர்.

தொழிலாளர்களாகவும் மனிதர்களாகவும் நம்முடைய பலத்தைக் காட்டவும், நமது உரிமைகளை உறுதிப்படுத்தவும் முன்வருமாறு அனைத்துப் பிரிவு தொழிலாளர்களையும் தற்காலம் கூவி அழைக்கிறது. நம்முடைய பலமானது, நமது ஒற்றுமையிலும் நம்முடைய அமைப்பு மற்றும் நமது விழிப்புணர்விலும் உள்ளது. நம்முடைய வலிமையை மேலும் கட்டியெழுப்புவதற்கு, நமது அமைப்பு மற்றும் விழிப்புணர்வின் தரத்தை நாம் உயர்த்த வேண்டும். நம்மைப் பிளவுபடுத்தியும், நமது உண்மையான எதிரிகளிடமிருந்து நம்மைத் திசை திருப்பியும் வைத்திருக்கும் காரணிகளை வென்று நாம் முன்னேற வேண்டும்.

தற்போதுள்ள அரசமைப்பிற்குள் தத்தமுடைய வாக்குகளையும், நிலையையும் உயர்த்திக் கொள்வதற்காக, மோதி வரும் கட்சிகளுக்கு இடைப்பட்ட போட்டியானது, நம்மைப் பிளவுபடுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். ஆளுங் கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள தொழிற்சங்க கூட்டமைப்பு, மற்ற அனைத்து தொழிற்சங்கங்களுடனும் கூட்டு நடவடிக்கைகளில் ஒன்றிணைவதில்லை. இது நம்முடைய பொதுவான போராட்டத்தை பலவீனப்படுத்தும் ஒரு காரணியாகும்.

தொழிலாளர்கள் நாம், ஒரு பொதுவான நலன்களைக் கொண்ட ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவோம். நாம் ஒவ்வொருவருடைய தொழிற்சங்கம் எந்த கூட்டமைப்பைச் சேர்ந்தது என்றும் அந்த கூட்டமைப்பு எந்தக் கட்சியோடு இணைக்கப்பட்டுள்ளது என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்பட வேண்டும். தொழிற் பேட்டைகளிலும், சேவை மையங்களிலும் தொழிலாளர் ஒற்றுமைக் குழுக்களை நாம் கட்டியமைத்து பலப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இத்தகைய குழுக்களில் வெவ்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் ஒன்றுபட வேண்டும்.

நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் ஆளும் கட்சியைக் குறை கூறுபவர்கள் நம்முடைய உண்மையான எதிரியை அடையாளம் கண்டு கொள்வதிலிருந்து நம்மைத் தடுக்கிறார்கள். கட்சிகள் ஒன்று மாறி இன்னொன்றும், அது போய் வேறொன்றுமாக மாறிமாறி வந்து கொண்டிருந்தாலும், முதலாளித்துவ சுரண்டலானது மோசத்திலிருந்து படுமோசமாக வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது என்பதை வாழ்க்கை அனுபவம் காட்டுகிறது. 2004 ல் பாஜகவை மாற்றி காங்கிரசும், 2014 ல் காங்கிரசை மாற்றி பாஜகவும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தன. ஆனால் அரசாங்கத்தின் திட்டம் மாறவே இல்லை. அடுத்தடுத்த வந்த அரசாங்கங்கள் உழைக்கும் மக்களின் நலன்களை விட்டுக் கொடுத்து மிகவும் சக்திவாய்ந்த முதலாளிகளைக் கொழுக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட உலகமயம், தாராளமயம் மற்றும் தனியார்மயமாக்கல் திட்டத்தை விடாப்பிடியாக நடைமுறைப் படுத்தி வந்துள்ளன. இது எதைக் காட்டுகிறது? இந்த கட்சிகளுக்குப் பின்னால் டாடாக்கள், அம்பானிகள், பிர்லாக்கள் மற்றும் பிற ஏகபோக குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட முதலாளி வர்க்கம் நிற்கிறது என்பதை இது காட்டுகிறது. அவர்கள் கைகளில் தான் அரசியல் அதிகாரம் இருக்கிறது.

மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான மோதலில் எந்தப் பக்கமும் சார்பற்று நடுநிலையோடு அரசு – அதாவது அமைச்சர்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும், நீதித்துறையும், காவல் துறையும், ஆயுதப்படைகளும் இருப்பதாக ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால், தற்போதுள்ள அரசு, தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான முதலாளி வர்க்கத்தின் ஒரு கருவி என்பதை நமது வாழ்க்கை அனுபவம் காட்டுகிறது.

முழு அரசியல் அமைப்பும் அதன் தேர்தல் வழிமுறையும் முதலாளி வர்க்கத்தின் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான தொழிலாளர்களால் வாக்களிக்கக்கூட முடியாது, ஏனெனில் அவர்கள் வேலை செய்யும் இடம் அவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. மேலும், வாக்களிப்பவர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களைத் தீர்மானிக்கவும், தேர்ந்தெடுத்த பின்னர் அவர்களுடைய பிரதிநிதிகள் மீது எவ்வித கட்டுப்பாடும் இல்லையானால் வாக்களிக்கும் உரிமைக்கு எந்தப் பொருளும் இல்லை. முதலாளி வர்க்கத்தின் நம்பிக்கைக்குரிய, நன்கு தேர்வு செய்யப்பட்ட கட்சிகளில் ஒன்றை அரசு இயந்திரத்திற்குப் பொறுப்பாக வைப்பதற்கு தேர்தல்கள் முதலாளி வர்க்கத்தால் பயன்படுத்தப்படுகிறது,

ஆளும் வர்க்கத்தின் கட்சிகளும் பெரும் நிறுவனங்களுடைய கட்டுப்பாட்டிலுள்ள செய்தி ஊடகங்களும் இந்த அல்லது அந்த மதத்தைச் சேர்ந்த மக்களை நம்முடைய முக்கியமான எதிரியாக குற்றம் சாட்டி வகுப்புவாத பரப்புரையைத் தொடர்ந்து நடத்துகின்றன. ஒரு நேரத்தில் சீக்கியர்களை நம்முடைய முக்கிய எதிரிகள் என்று சொன்னார்கள். இப்போது அவர்கள் முஸ்லிம்களை நம்முடைய முக்கியமான எதிரிகளென்று கூறுகிறார்கள். நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் பாகிஸ்தான் அல்லது சீனா தான் காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஏகபோகக் குடும்பங்களைத் தலைமையாகக் கொண்டு அதிகாரத்தில் உள்ள இந்திய முதலாளி வர்க்கமும், அமெரிக்க தலைமையிலான அவர்களின் ஏகாதிபத்திய நட்பு நாடுகளும் தான் நம்முடைய முக்கிய எதிரிகள் என்ற உண்மையை மறைக்க அவர்கள் விரும்புகிறார்கள். முதலாளித்துவ அமைப்பும் இந்த அமைப்பைப் பாதுகாக்கும் அரசும் தான் நம்முடைய பிரச்சினைகளுக்கு முக்கிய அடிப்படை என்ற உண்மையை அவர்கள் மறைக்க விரும்புகிறார்கள்.

தொழிலாளர்கள் நாம் மதம், சாதி, தொழிற்சங்கம் மற்றும் கட்சி இணைப்பு ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் கடந்த அளவில் எழுந்து, நம்முடைய பொது எதிரியான இந்திய மற்றும் சர்வதேச முதலாளி வர்க்கத்திற்கு எதிராக நமது போராட்ட ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்.

முதலாளி வர்க்க ஆட்சியை மாற்றி, தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவுவதை நம்முடைய அரசியல் நோக்கமாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கும், நமக்குச் சொந்தமான அனைத்து உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒரு புதிய அரசியல் அமைப்பு தேவை. மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையாக இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கைகளில் அரசியல் அதிகாரத்தை வைத்திருக்குமாறு வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பு நமக்கு தேவை.

இந்தியாவின் செல்வத்தை உருவாக்கும் நாம் தான் அதன் மன்னர்களாகவும் இருக்க வேண்டும். முதலாளி வர்க்கத்தை வெளியேற்றி விட்டு தீர்மானிப்பவர்களாக நாம் மாற வேண்டும். அப்போதுதான் நாம் உருவாக்கும் செல்வம், சுரண்டும் சிறுபான்மையினரின் பேராசையை நிறைவேற்றாமல், உழைக்கும் பெரும்பான்மையினருடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய முடியும்.

தங்களுடைய உழைப்பு சக்தியை விற்று வாழ்க்கை நடத்துபவர்கள் அனைவரும் ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். முதலாளித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவுவதற்கான நோக்கத்தையும் திட்டத்தையும் ஒட்டி நாம் ஒன்றுபட வேண்டும். உழைக்கும் நாம் நமது உழைப்பின் பலனை அனுபவிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு அரசிற்காகவும் அரசியலமைப்பிற்காகவும் நாம் போராட வேண்டும். விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைவருடனும் கூட்டாக, நாம் ஆளும் வர்க்கமாக மாற தொழிலாளி வர்க்கப் போராட்டத்தை வழிநடத்த ஒரு ஒருங்கிணைந்த முன்னணிக் கட்சியை உருவாக்க நாம் பாடுபட வேண்டும்.

ஒரு தொழிலாளி வர்க்கம், ஒரு திட்டம், ஒரு கட்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *