சாத்தான்குளம் காவல் நிலைய மரணங்கள்:

இந்திய அரசின் அடக்குமுறையான காவல்துறை அமைப்பின் மற்றொரு கொடூரம் வெட்டவெளிச்சம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் நகர பஞ்சாயத்தில் வசித்து வந்த தந்தையும் மகனுமாகிய திரு ஜெயராஜ் (59) மற்றும் திரு இம்மானுவேல் பென்னிக்ஸ் (31) காவல்துறையால் காவல் நிலையத்தில் வைத்துக்  கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மிருகத்தனமான சித்திரவதையையும் கொலையையும் மூடிமறைக்க காவல்துறையின் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி நாடெங்கிலும் உள்ள மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. குற்றவாளிகளான காவலர்கள் மீது வழக்குத் தொடர மாநில அரசும் காவல்துறை உயர் அதிகாரிகளும் தயக்கம் காட்டுவதை அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். குற்றத்தை நேரில் கண்ட பலியானவர்களின் நண்பர்களின் சாட்சியங்களும் தந்தையும் மகனும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதற்கு பல்வேறு ஆதாரங்களும் இருந்துங்கூட, காவல்துறை இயந்திரமும், மாவட்ட நீதிபதியும் மற்றும் மாநில அரசும் குற்றங்களை மறைக்க முயன்றன. சித்திரவதையின் போது, ​​குற்றவாளிகளான காவலர்கள், பென்னிக்சின் மலக்குடலுக்குள் தடியைச் செறுகி, கடுமையான உள் சேதத்தை ஏற்படுத்தியிருப்பது மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சூன் 19-20 தேதிகளில் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதன் விளைவாகவே இருவரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை கிடைத்த அனைத்து ஆதாரங்களும் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன. அவர்கள் இயற்கைக் காரணங்களாலே இறந்துவிட்டார்கள் என்று காவல்துறை அளித்த விளக்கத்தில் எள்ளளவும் உண்மை இல்லை.

மாலை 8 மணியோடு கடையை மூட வேண்டுமென்ற கொரோனா விதிமுறைகளை மீறியதாக கூறி ஒரு சாதாரண குற்றச்சாட்டின் கீழ் ஜெயராஜூம், பென்னிக்சும் சூன் 19 ஆம் தேதி மாலையில் சாத்தான்குளம் காவலர்களால் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ஐபிசி பிரிவு 188 (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்திரவை மீறியது), 269 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ள கவனக்குறைவான செயல்), 294 (பி) (பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டது), 353 (அரசு ஊழியரை தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுத்தல்), மற்றும் 506 (ii) (குற்றவியலாக மிரட்டியதற்காக தண்டனை) ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவற்றிற்கான தண்டனை அபராதத்தோடோ அல்லது இல்லாமலோ 1 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை இருக்கலாம். தாங்கள் எப்படிப்பட்ட குற்றத்தையும் செய்துவிட்டு எவ்வித தண்டனையின்றி செயல்பட முடியும் என்பதை கடைக்காரர்களுக்கு, காவல்துறை அதிகாரிகள் காட்ட விரும்பினார்கள் என்பதை இது காட்டுகிறது. தங்களுடைய மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்காக வேண்டுமென்றே அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டுகளை உருவாக்கியிருக்கின்றனர்.

காவலர்கள் நடத்திய கொடூரமான தாக்குதல்களை நிறுத்துமாறு இருவருடைய நெருங்கிய உறவினர்களும் வழக்குறைஞர்களும் உட்பட பலர் கோரிய போதிலும், காவல்துறை அதிகாரிகள் நிறுத்தாமல் சித்தரவதையை சூன் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் தொடர்ந்தனர். இருவருக்கும் மிக மோசமாக இரத்தம் ஓடிக் கொண்டிருந்ததால், ஜெயராஜின் மனைவியாகிய பென்னிக்ஸின் தாயை பல லுங்கிகளைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட நீதிபதியின் வீட்டிற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது, ​​குற்றச்சாட்டுகளின் விவரங்களை கூட கேட்டு விசாரிக்க மாவட்ட நீதிபதி அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.

மக்களின் மனதில் அச்சத்தை உண்டாக்குவதற்கும், மக்களுடைய எந்தவிதமான எதிர்ப்புகளையும் அல்லது ஆர்பாட்டங்களையும் சகித்துக் கொள்ள முடியாது என்ற ஒரு சூழலை உருவாக்கவும், சிறைச்சாலைகளில் அப்பாவி மக்களைச் சித்திரவதை செய்வது, காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் கொல்வது போன்றவை இந்திய அரசின் பாதுகாப்பு நிறுவனங்கள் செய்யும் வழக்கமான குற்றங்களாகும். தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) “இந்தியாவில் குற்றம்” என்ற வருடாந்திர வெளியீட்டு, நாட்டில் பதிவாகியுள்ள காவல் நிலைய குற்றங்களின் எண்ணிக்கையை வெளியிடுகிறது. 2017 ஆம் ஆண்டில், மொத்தம் 100 பேர் காவல்துறையின் காவலில் இறந்துள்ளனர், அதில் ஆந்திராவில் அதிகபட்சமாக 27 பேர் இறந்தனர். 2017 ஆம் ஆண்டில் காவல் நிலையத்தில் இறந்ததற்காக கூறப்படும் மிகவும் பொதுவான காரணம் தற்கொலை (37) ஆகும். அதற்கு அடுத்ததாக உடல்நிலை சரியின்றியும் / மருத்துவமனையில் சிகிச்சையின் போதும் மரணம் (28) என்று அது கூறுகிறது. காவல் நிலையத்தில் ஏற்பட்ட மரணங்களுக்கு ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 100 இறப்புகளுக்கு மொத்தம் 33 காவலர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 27 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காட்டப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிக்கை, காவல் நிலைய இறப்புகள் ஒரு வழக்கமான நிகழ்வு என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

2013 மற்றும் 2017 க்கு இடையில் மகாராஷ்டிராவில் காவல் நிலையத்தில் 106 பேர் உயிர் இழந்ததாக ஒரு செய்தித்தாள் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக ஆந்திராவில் (65), குஜராத்தில் (51), தமிழ்நாட்டில் (38), தெலுங்கானாவில் (12) ஆக காவல் நிலைய மரணங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் நடைபெற்ற 106 சம்பவங்களில் 47 இல் ஒரு மாஜிஸ்திரேட் அல்லது நீதித்துறை விசாரணை தொடங்கப்பட்டது. 106-இல் 14 – இல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, 19 – இல் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை இந்திய அரசு கொடூரமாகக் கொலை செய்திருப்பதை, இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த காவல்நிலைய மரணங்கள்,  இந்திய அரசின் அடக்குமுறை எந்திரத்தை மீண்டும் அம்பலப்படுத்துகின்றன. இந்திய அரசு குற்றவாளிகளிடமிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக, மிகவும் காட்டுமிராண்டித்தனமான குற்றவாளிகளையே பாதுகாக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *