நீதிபதி ஹொஸ்பெட் சுரேஷ் மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கல்

மனித மற்றும் சனநாயக உரிமைகளுக்கான அச்சமற்ற போராளியான நீதிபதி ஹொஸ்பெட் சுரேஷ் 2020 சூன் 11 அன்று இயற்கை எய்தினார். மக்களுடைய உரிமைகளுக்காக ஓய்வு ஒழிவின்றி போராடி வந்த அவருடைய இழப்புக்கு இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

1929, சூலை 20 ஆம் தேதி கர்நாடகாவின் சூரத்கலில் உள்ள ஹோசபெட்டு என்ற இடத்தில் பிறந்த நீதிபதி சுரேஷ் மங்களூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும்,  பெல்காமில் உள்ள விஸ்வேஸ்வரயா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், பம்பாய் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பையும் முடித்த பின் தனது 24 வயதில் மும்பை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராக சேர்ந்தார். அரசு சட்டக் கல்லூரியிலும், மும்பையின் கே.சி. சட்டக் கல்லூரியிலும் பகுதிநேர சட்டப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

ஒரு இளைஞனாக, மும்பை தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்தும் போர்க்குணமிக்க போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கொண்டிருந்த ஆர்வத்தால் உந்தப்பட்டு அவர் நீதித்துறையில் சேர்ந்தார்.

1968 மற்றும் 1982 க்கு இடையில், அவர் மாநகர் பம்பாயின் கூடுதல் அமர்வு நீதிபதியாகவும், மும்பை நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் இரண்டாவது கூடுதல் முதன்மை நீதிபதியாகவும், மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றினார். நவம்பர் 21, 1986 அன்று அவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார். ஜூன் 12, 1987 அன்று அவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் ஜூலை 19, 1991 அன்று மும்பை உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்றார்.

நீதிபதி சுரேஷ் “தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும்” என்ற கூற்றில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். நீதிபதியாக இருந்த ஆண்டுகளில், வழக்குகளை விரைவாக முடித்து வைப்பவரென அவர் நன்கு பெயர் பெற்றவர். ஒருவர், ஒரு வழக்குக்காக மூன்று முறைக்கு மேல் நீதிமன்றத்திற்கு வர வேண்டியத் தேவையில்லை என்று அவர் அடிக்கடி சொல்வதோடு, அதை அவர் நடைமுறையிலும் செயல்படுத்தினார்.

தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள், மனிதர்களாக இருப்பதாலேயே அவர்களுக்கு உரிமைகள் உள்ளன என்பதையும், தற்போது நடந்து வருவதைப் போல அவர்களுடைய இந்த உரிமைகள் பறிக்கக்படக் கூடாது என்பதையும் உயர்த்திப் பிடித்தவர் நீதிபதி சுரேஷ் என்று நன்கு அறியப்பட்டவர். தொழிலாளர்கள், வீதி ஓரங்களில் வசித்து வருபவர்கள் மற்றும் பிற நகர்ப்புற ஏழைகளுக்கு ஆதரவாக பல முக்கிய தீர்ப்புகளை அவர் கொடுத்திருக்கிறார்.

ஓய்வு பெற்ற உடனேயே, நீதிபதி சுரேஷ், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயரால் நிறுவப்பட்ட இந்திய மக்கள் மனித உரிமைகள் தீர்ப்பாயத்தின் பணிகளில் ஆர்வத்துடன் மூழ்கினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசின் மனித உரிமை மீறலை அம்பலப்படுத்துவதற்கு அந்த தீர்ப்பாயம் செயல்பட்டது. பாபரி மசூதி இடிக்கப்பட்ட உடனேயே, டிசம்பர் 1992 – ஜனவரி 1993 இல் மும்பையை உலுக்கிய வகுப்புவாத வன்முறை குறித்து நீதிபதி சுரேஷ்உம், மறைந்த நீதிபதி எஸ்.எம்.தாவுதும் சேர்ந்து ஆய்வு நடத்தினர். ஆறு மாதங்களுக்குள் “மக்கள் தீர்ப்பு” என்ற தலைப்பில் வெளிவந்த அவர்களின் அறிக்கை, வகுப்புவாத படுகொலைகளை ஏற்பாடு செய்து நடத்துவதில் முக்கிய அரசியல் கட்சிகளும் உயர் மட்ட அரசு அதிகாரிகள் வகித்த குற்றவியலான பங்கைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியது.

கோத்ரா ரயில் படுகொலையைத் தொடர்ந்து இந்த இனவாதப் படுகொலை குறித்து விசாரிக்க 2002 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குஜராத்திற்குச் சென்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணா ஐயர் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவில் நீதிபதிகள் சுரேஷ் மற்றும் நீதிபதி பி.பி. சாவந்த் ஆகியோர் உறுப்பினர்களாக பங்கேற்றனர். அந்த உண்மை கண்டறியும் குழு வாய்வழியாகவும், எழுத்து பூர்வமாகவும் 2,094 சாட்சியங்களை சேகரித்ததோடு பல மூத்த போலீஸ் அதிகாரிகளையும் அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்தது. “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்” என்ற தலைப்பில் அவர்களின் அறிக்கை, படுகொலையை ஏற்பாடு செய்து, செயல்படுத்துவதில் உயர்மட்ட அரசு நிர்வாகமும் காவல்துறையும் ஆற்றிய பங்கைத் தெளிவாக நிறுவியது.

1984 நவம்பரில் சீக்கியர்களின் இனப்படுகொலை மற்றும் 2002 இல் குஜராத்தில் முஸ்லிம்களின் படுகொலை உள்ளிட்ட அனைத்து வகுப்புவாத வன்முறைகளுக்கும், உயர்மட்ட அதிகாரப் பொறுப்பு என்ற கொள்கையின் அடிப்படையில் இந்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற போராட்டத்தின் முன்னணியில் நீதிபதி சுரேஷ் இருந்தார். “மனித இனத்திற்கு எதிரான படுகொலைகள் மற்றும் குற்றங்கள் தடுப்புச் சட்டம் 2004” என்று அழைக்கப்பட்டு முன்மொழியப்பட்ட ஒரு வரைவுச் சட்டத்தை எழுவதில் அவர் பங்கேற்றார். எந்தவொரு அரசாங்கமும் அத்தகைய சட்டத்தை நிறைவேற்றும் என்ற மாயைகள் அவருக்கு இல்லாத போதிலும், அதில் பங்கேற்றார். வகுப்புவாதத்தையும் வகுப்புவாத வன்முறையையும் ஏதாவது ஒரு பிரிவு மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடுவது என்பது ஆளும் வர்க்கத்திற்கு விருப்பமான கொள்கை என்பதை அவர் தெளிவாக புரிந்து கொண்டார்.

குற்றவியலான அரசியல் கட்சிகளுக்கும், அப்படிப்பட்ட கட்சிகளை அதிகாரத்தில் கொண்டு வரவும், வைத்திருக்கவும் செய்யும் அரசியல் அமைப்புக்கும் வழிமுறைக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பை நீதிபதி சுரேஷ் கண்டார். அரசியலில் வகுப்புவாதத்திற்கும் குற்றமயமாக்கப்படுவதற்கும் முடிவு கட்டுவதற்கு மக்களை அதிகாரம் கொண்டவர்களாக ஆக்க வேண்டியது அவசியம் என்ற கருத்தை நீதிபதி சுரேஷ் ஆதரித்தார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இந்திய மக்கள் அரசியல் அமைப்பையும் பிரதிநிதித்துவ சனநாயகத்தின் செயல்முறையையும் முழுமையாக மாற்றியமைக்க வேண்டியதையும், அதற்கு பதிலாக தீர்மானிக்கும் அதிகாரம் மக்கள் கைகளில் இருக்கக் கூடிய ஒரு அமைப்பை நிறுவ வேண்டியதையும் அவர் வலியுறுத்திப் பேசினர். மக்களின் கைகளில் அதிகாரம் வந்தால் மட்டுமே இந்தியாவைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதிலும், இந்திய மக்களை அதிகாரம் பெறுவதை நோக்கி வழி நடத்தக் கூடிய ஒரு அமைப்பு அவர்களுக்குத் தேவை என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். அத்தகைய அமைப்பை உருவாக்குவதற்கு அவர் தனது சக்தியை அர்ப்பணித்தார். மக்களாட்சி இயக்கத்தின் (லோக் ராஜ் சங்கதன்) முன்னோடியான மக்கள் அதிகாரக் குழு, ஏப்ரல் 1993 இல் புதுதில்லியில் நிறுவப்பட்ட காலத்திலிருந்தே, அதனுடைய பணியில் அவர் ஈர்க்கப்பட்டார். 1998-இல் மக்களாட்சி இயக்கம் நிறுவப்பட்ட போது அதனுடைய அனைத்திந்த குழுவிற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் கைகளில் அதிகாரத்தைக் கொண்டு வருவதற்கான திட்டத்தை உருவாக்குவதில் தீவிரமாகப் பங்களித்தார்.

எந்தவொரு பிரிவினருக்கும் நீதியும் உரிமைகளும் மறுக்கப்பட்டாலும், அவர்களுக்கு ஆதரவாக நீதிபதி சுரேஷ் உறுதியுடன் நின்றிருக்கிறார். மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க நாட்டின் எந்தப் பகுதிக்கும் எந்த நேரத்திலும் பயணிக்க அவர் தயாராக இருந்தார். மனித உரிமை மீறல்களின் பல்வேறு நிகழ்வுகள் பற்றிய கிட்டத்தட்ட 40 அறிக்கைகளில் அவர் முக்கிய பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். 1991 டிசம்பரில் பெங்களூரில் காவேரி நீர் பங்கீடு குறித்த பிரச்சனையில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட கலவரங்கள், மும்பையில் ஏழை மக்களுடைய குடிசைகளை இடித்துத் தள்ளுதல், உணவுப் பொருட்களின் பொது விநியோகம் மற்றும் காஷ்மீரில் அரசு நடத்திய வன்முறைகள் ஆகியவை இதில் அடங்கும். உயிர் வாழ்வதற்கான உரிமையும்  ஒரு கண்ணியமான மனித வாழ்க்கைக்கான உரிமையில், சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் எப்போதும் வலியுறுத்தினார்.

நீதிபதி சுரேஷ் தன்னுடைய ஆழமான அறிவாலும், அவரது நடைமுறை சாத்தியமான அடக்கமான அணுகுமுறையுடனும் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு பெற்ற அனைவருக்கும் ஆர்வமூட்டினார். அரசு பயங்கரவாதத்தை சட்டப்பூர்வமாக்கிய தடா, போடா, யுஏபிஏ மற்றும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் போன்ற கறுப்புச் சட்டங்களை அவர் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்தார். தனது நடவடிக்கைகளின் போது அரசின் பல்வேறு மட்டங்களிலிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போதிலும் பின்வாங்காமல் துணிவோடு செயல்பட்டார்.

ஒரு புதிய சமுதாயத்திற்கான போராட்டத்தில் நீதிபதி சுரேஷின் வாழ்க்கையும் அவர் ஆற்றிய பணிகளும் மக்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும். அந்த புதிய சமுதாயத்தில் மக்கள் முடிவெடுப்பவர்களாகவும், சனநாயக உரிமைகளுக்கு அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *