தொழில்கள் மற்றும் வணிகங்களுக்கு அரசின் ஊக்கத்தொகுப்பு:

தனியார்மயத்தையும் மூலதனக் குவிப்பையும் விரைவுபடுத்தும்

பிரதமர் மோடி மே 12 ஆம் தேதி 20 இலட்சம் கோடி ரூபாய் ஊக்கத்தொகுப்பை அறிவிக்கையில், “ஆத்மனிர்பர் பாரத் அபியான்” அல்லது “சுயசார்பு கொண்ட இந்தியா” இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தார். தொகுப்பு பற்றிய அனைத்து விவரங்களும் அறிவிக்கப்பட்டபோது, இந்த முழக்கத்தின் உண்மையான பொருள் என்ன என்பது தெளிவாகியது. இதன் பொருள் என்னவென்றால், மத்திய அரசிடமிருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு நிறுவனங்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசோ இந்திய மற்றும் வெளிநாட்டு பெரும் தொழிலதிபர்களுடைய நலன்களை மட்டுமே கவனித்துக் கொள்ளும் என்பதாகும்.

பிரதமர் இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டுமென அழைப்பு விடுத்தார். சிறு நிறுவனங்களிடமிருந்து வருகின்ற போட்டியை அழிப்பதன் மூலமும், தனியார்மயமாக்கலை துரிதப்படுத்துவதன் மூலமும், தனியார் ஏகபோக நிறுவனங்களின் ஊடுருவலுக்காக புதிய துறைகளைத் திறந்து விடுவதன் மூலமும் பெருந் தொற்று நோய் நெருக்கடியை இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகள் பொருளாதாரத்தின் மீது செலுத்தும் ஆதிக்கத்தை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக மாற்றுவதே அவர் கூறியதன் பொருள் என்று ஊக்கத்தொகுப்பின் விவரங்கள் காட்டுகின்றன.

தொகுப்பின் விவரங்களை அறிவித்த நிதியமைச்சர் 3.7 லட்சம் கோடி ரூபாய் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ) ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அவர் அறிவித்த புதிய வரையறையின்படி, ரூ 1 கோடி-க்கு குறைவான மூலதனமும், வருவாய் ரூ. 5 கோடிக்கும் குறைவாக உள்ளவற்றை சிறு நிறுவனங்களாகவும்; ரூ. 1-10 கோடி மூதலதனத்தையும், வருவாய் ரூ. 5-50 கோடி உள்ளவற்றை குறு நிறுவனங்களாகவும், ரூ. 10-20 கோடி மூலதனத்தையும் வருவாய் ரூ. 50-100 கோடி வரை உள்ளவற்றை நடுத்தர நிறுவனங்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவித் தொகுப்பு என்பது, முழுக்க முழுக்க புதிய வங்கிக் கடன்களைக் கொண்டுள்ளது, அதை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களை அடமானம் வைக்காமல் பெறலாம், மேலும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான உத்தரவாதத்தை அரசாங்கம் கொடுக்கிறது. இருப்பினும், இந்த நிறுவனங்களுக்கு அரசு நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ள தொகை ரூ. 5 லட்சம் கோடிக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தனியார் நிறுவனங்களிடமிருந்து வராத நிலுவைத் தொகையும், கொடுக்க வேண்டிய ஊதியத் தொகையும் உள்ளன. உடனடியாக ரொக்கப் பண மானியங்கள் இல்லாத நிலையில், பெரும்பான்மையான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தவிர்க்க முடியாமல் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க உதவுவதற்குப் பதிலாக, அரசாங்கத்தின் ஊக்கத்தொகுப்பு, இந்த நிறுவனங்கள் செயல்படும் துறைகளில் இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளுடைய சந்தைப் பங்கை அதிகரிக்க வழிவகுக்கிறது. எடுத்துக்காட்டாக, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தற்போது துணி வகைகளில் 90% மும், ஆயத்த ஆடைகள் பிரிவில் 70% மும் சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன. ரேமண்ட் குழுமம், பாம்பே டையிங், ஆதித்யா பிர்லா குழு, வெல்ஸ்பன் குழு மற்றும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமாகிய பேஜ் இன்டஸ்டிரிஸ் ஆகியவற்றின் நலனுக்காக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் சந்தை கடுமையாக வீழ்ச்சியடைய நேரிடும். சில்லறை வர்த்தகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தற்போது கொண்டுள்ள 90% பங்கு குறைந்து, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரிடெயில், டாடா குழுமத்தின் ட்ரெண்ட், ரஹேஜா குழுமத்தின் ஷாப்பர்ஸ் ஸ்டாப் மற்றும் பியானி குழுமத்தின் பியூச்சர் ரிடெயில் ஆகியவற்றின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

நிலக்கரி, தாதுக்கள், பாதுகாப்பு, விமான நிலையங்கள் மற்றும் மின்சார விநியோகத் துறைகளை பெரிய அளவில் தனியார்மயமாக்கும் முயற்சி திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை முதலாளிகளுக்கு திறக்கப்படாத துறைகள் அணுசக்தியும் விண்வெளியும் ஆகும். அவைகளும் இப்போது இவர்களுக்குத் திறந்து விடப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களுக்கான கொள்கையில் ஒரு பெரிய மாற்றம் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்படும் முக்கிய துறைகள் அடையாளம் காணப்படும். மற்ற எல்லாத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும். முக்கிய துறைகளில், குறைந்தபட்சம் ஒரு நிறுவனமாவது பொதுத்துறையில் இருக்கும், அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் விரிவடைய அனுமதிக்கப்படும். எந்தவொரு முக்கியத் துறையிலும் நான்கு பொதுத்துறை நிறுவனங்களுக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள்; மற்றவை தனியார்மயமாக்கப்படும், இணைக்கப்படும் அல்லது விற்கப்படும். இந்த புதிய கொள்கையால் பொதுத்துறை வங்கிகள் அதிகமாக பாதிக்கப்படும். இது, வங்கிகளில் சிலவற்றை தனியார்மயமாக்கவும், மீதமுள்ளவற்றை நான்கு வங்கிகளாக இணைக்கவும் வழிவகுக்கும்.

நிலக்கரி சுரங்கங்களை ஏலம் எடுக்கவும், சந்தையில் நிலக்கரியை விற்கவும் எந்தவொருவரையும் அனுமதிப்பதன் மூலம் நிலக்கரி சுரங்கங்கள் தனியார்மயப்படுத்தப்படுகிறது. இதற்கு எவ்வித தகுதி நிபந்தனைகளும் இருக்காது. சுமார் 50 நிலக்கரி சுரங்கங்கள் உடனடியாக தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். தனியார் நிறுவனங்கள் புதிய சுரங்கங்களை ஆராய்வதற்கும் பின்னர் உற்பத்தியை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படும். இதுவரை, தம் சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமே நிலக்கரி சுரங்கத்தில் ஈடுபட தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. நிலக்கரியைப் பயன்படுத்துவதில் இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடு என்பதால், நிலக்கரி சுரங்கத்தில் முதலீடு செய்வதில் இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. நிலக்கரி சுரங்கத்தை தனியார்மயமாக்குவது, மிகப்பெரிய எண்ணிக்கையில் தொழிலாளர்களை வைத்துள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கோல் இந்தியா லிமிடெட்-ஐ தனியார்மயப் படுத்துவதற்கான முதல் படியாகும்.

தேடுதல் ஆய்வு, சுரங்கம் அமைத்தல் மற்றும் உற்பத்தி உரிமங்களை ஒன்றாக சேர்த்து வழங்குவதன் மூலம் தாதுக்களின் தேடுதல் ஆய்வு மற்றும் உற்பத்தியில் தனியார் துறை பங்களிப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை, தேடுதல் ஆய்வு மற்றும் உற்பத்தி உரிமங்கள் தனித்தனியாகவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் வழங்கப்பட்டு வந்தன. இப்போது 500 சுரங்கத் தொகுதிகள் திறந்த ஏலம் மூலம் வழங்கப்படும். பாக்சைட் மற்றும் நிலக்கரி சுரங்கங்களைச் சேர்த்து ஏலம் விடுவதன் மூலம் அலுமினியத் தொழிலுக்கு கூடுதல் ஊக்கம் கிடைக்கும். ஆதித்யா பிர்லாவும் வேதாந்தா குழுக்களும் அலுமினியத் துறையில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளன. சுரங்கக் குத்தகைகளை மாற்றுவதற்கும், உபரியாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் திறனை விற்பனை செய்வதற்கும் அனுமதிப்பதற்காக, தாதுத் தொழில்களுக்கு வழங்கப்படும் மற்றொரு பெரிய சலுகையானது சுய பயன்பாட்டிற்கான மற்றும் விற்பனைக்கான சுரங்கங்களுக்கிடையிலான வேறுபாட்டை அகற்றுவதாகும்.

இறக்குமதி தடை செய்யப்படும் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களின் பட்டியலை அறிவிப்பதன் மூலம் ஆயுத உற்பத்தியில் இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவ நிறுவனங்களின் பங்களிப்புக்கு ஒரு பெரிய உந்துதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு முதலீட்டுப் பொருட்களை வாங்குவதற்கு தனி பட்ஜெட் ஏற்பாடு செய்யப்படும். அதே நேரத்தில், அங்கீகாரங்களுக்கு அவசியமின்றி பாதுகாப்புத்துறை உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான வரம்பானது, 49%-லிருந்து 74% ஆக உயர்த்தப்படும். இந்திய ஏகபோக முதலாளிகளுடன் சேர்ந்து கூட்டு நிறுவனங்களை உருவாக்க வெளிநாட்டு ஆயுத உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். டாடா, அதானி, அனில் அம்பானி, எல் அண்ட் டி, பாரத் ஃபோர்ஜ் ஆகிய நிறுவன குழுக்கள் பாதுகாப்புத்துறை தளவாடங்களை உற்பத்தி செய்யும் முக்கிய நிறுவனங்களாக ஆவதற்கு தங்களைத் தயாரித்து வருகின்றன.

பொதுத்துறை – தனியார் பங்கேற்பின் (பிபிபி) அடிப்படையில் ஏற்கனவே கடந்த ஆண்டில் 6 விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் 12 விமான நிலையங்களின் செயல்பாட்டையும், பாராமரிப்பையும் தனியார்மயமாக்குவதை துரிதப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் மின் விநியோகத்தை தனியார்மயமாக்குவதற்கு உந்துதல் தரப்படும். இந்த பிராந்தியங்களின் அனுபவத்தின் அடிப்படையில், நாடு முழுவதும் மின்சார விநியோக நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கான ஒரு மாதிரி உருவாக்கப்படும். மின்சாரம் வழங்குவதற்கான கட்டணங்களை நிர்ணயிப்பதில் ஒரு பெரிய மாற்றம் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து மானியங்களையும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளன, எனவே இது பெரும்பாலான மக்களுக்கு மின்சார கட்டணங்களை அதிகரிக்கும். அதே நேரத்தில், முதலாளிகளால் செலுத்தப்படும் கட்டணங்களைக் குறைப்பதற்காக, தொழில்கள் மீதான கூடுதல் கட்டணங்கள் அகற்றப்படும். இந்த மாற்றங்கள் மின்சார சட்டம் 2003 ஐ திருத்துவதன் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட மசோதாவின் வரைவு ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது.

விண்வெளித் துறையில் தனியார் திறன்களை மேம்படுத்திக் கொள்ள, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) வசதிகளைப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் விண்வெளித் துறை தனியார் நிறுவனங்களுக்குத் திறந்து விடப்படும். விண்வெளி ஆய்வு, விண்வெளி பயணம் போன்ற எதிர்கால திட்டங்களும் தனியார் துறைக்கு திறந்திருக்கும்.

அணுசக்தியைப் பொறுத்தவரையில், புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருத்துவ ஐசோடோப்புகளை உற்பத்தி செய்வதற்காக பொதுத் துறை – தனியார் பங்கேற்பு (பிபிபி) முறையில் ஆராய்ச்சி உலை ஒன்றை அமைப்பதன் மூலம் முதலாளிகளின் நுழைவு திட்டமிடப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பிற்காக கதிர்வீச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த, பிபிபி முறையில் வசதிகளை அமைக்கவும் முதலாளிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

பெரிய முதலாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட மற்றொரு பெரிய சலுகையானது, புதிய திவால் சட்டம் தொடர்பானதாகும். கடன்களை திருப்பிச் செலுத்தத் தவறும் நிறுவனங்களுக்கு எதிராக ஒரு வருடத்திற்கு எந்த புதிய திவால் நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். மேலும், கொரோனா பெருந் தொற்று நோய் தொடர்பான கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால் அவை வாராக் கடன்களாக கருதப்படமாட்டா. இவற்றின் காரணமாக வாராக் கடன்களையும், வங்கிகளின் இழப்பையும் அதிகரிக்கவே செய்யும், அந்தச் சுமையானது வங்கிகளுக்கு மறு மூலதனம் கொடுப்பதற்கான அரசாங்க செலவினங்களின் மூலம் மக்களின் முதுகில் சுமத்தப்படும். விதி மீறல்களை, கிரிமினல் குற்றங்களாக கருதப்படக்கூடாதென நிறுவனங்கள் சட்டத்தை திருத்த வேண்டுமென்ற பெரிய முதலாளிகளின் கோரிக்கைகளையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

சுயசார்பு கொண்ட இந்தியா (ஆத்மனிர்பர் பாரத் அபியான்) ஊக்கத்தொகுப்பு, இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் கைகளில் உற்பத்திக் கருவிகளை மேலும் குவிப்பதற்கும், அதிக எண்ணிக்கையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை அழிப்பதற்கும், வேலையின்மையை மேலும் அதிகரிக்கவும், மேலும் பல வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் போவதற்கும் வழிவகுக்கும் என்பது தெளிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *