தம் ஊருக்குச் செல்லும் வழியில் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்:

மனிதாபிமானமற்ற அமைப்பு, உணர்வற்ற அரசு

மே 16 ஆம் தேதி அதிகாலையில், உத்தர பிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தில் லக்நோவிலிருந்து சுமார் 200 கிமீ தொலைவில், தத்தம் ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் பயணித்த லாரிகள் மோதிக் கொண்டதில் குறைந்தது 24 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று சேர வேண்டுமென தீவிரமாக முயன்று வரும் போது ஏற்பட்டுவரும் தொடர்ச்சியான விபத்துக்களில் இது சமீபத்தியதாகும், அவற்றில் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். 

மே 14 ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் ஆறு தொழிலாளர்கள் பேருந்து மோதி கொல்லப்பட்டனர். இவர்கள் பஞ்சாபிலிருந்து பீகாரில் உள்ள தங்கள் வீடுகளுக்கு நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் ஆவர். அதே வாரத்தின் தொடக்கத்தில், ஒரு பெண்ணும், அவரது மகள் உட்பட நான்கு தொழிலாளர்கள் சாலை விபத்துக்களில் கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் ரயில் தடங்களில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியதால் 20 பேர் கொண்ட ஒரு குழுவில் இருந்த 16 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்ப விரும்பும் தொழிலாளர்களுக்கு பேருந்துகளையும் ரயில்களையும் ஏற்பாடு செய்வதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதியளித்தன. ஆனால் இந்த ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்பது தெளிவாகிறது. சில சந்தர்ப்பங்களில், பணம் ஏதுமின்றி வெற்றுக் கையோடு நிற்கும் தொழிலாளர்களிடம், ரயில் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களை நோக்கி மிகவும் கடினமான சூழ்நிலைகளில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், போதுமான உணவோ, தண்ணீரோ அல்லது மருத்துவ உதவியோ கூட இல்லாமல் பெரும்பாலும் கால்நடையாகவே செல்ல முயற்சிப்பது ஏன்? அதற்குக் காரணம் நம் நாட்டில் உள்ள மனிதாபிமானமற்ற முதலாளித்துவ அமைப்பிலும், இந்த அமைப்பைப் பராமரிக்கும் உணர்வற்ற அரசிலும் உள்ளது, இந்த அமைப்பில் அனைத்து செல்வங்களையும் உழைத்து உருவாக்குகின்ற தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை.

இறப்புகளுக்கு வருத்தம் தெரிவித்த, உத்திரப் பிரதேச முதல்வர், காயமடைந்தவர்களுக்கு நிவாரணமும், மருத்துவ உதவிகளும் அளிப்பதாக உறுதியளித்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் வடித்து பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், இந்த இரு கட்சிகளும் முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்யவே போட்டியிடுகின்றன.

சில நாட்களுக்கு முன்னர், உத்திரப் பிரதேச அரசாங்கம், கிட்டத்தட்ட அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் மூன்று வருட காலத்திற்கு நிறுத்திவைத்து ஒரு ஆணையைப் பிறப்பித்துள்ளது, இதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பான அனைத்து சட்டப் பாதுகாப்பையும் அது ஒழித்துக்கட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியால் ஆளப்படும் மாநிலங்கள் உட்பட பிற மாநிலங்களும் 12 மணி நேர வேலை நாளை அனுமதிப்பது மற்றும் தொழிற்சங்க உரிமைகளை நிறுத்தி வைப்பது உட்பட இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த இரு கட்சிகளுமே முதலாளிகளுக்கு சேவை செய்ய விரும்புகின்றன என்பதையும், தொழிலாளர்களைக் கடுமையான சுரண்டுவதன் மூலம் அதிகபட்ச இலாபத்தை அடைய வேண்டுமென்ற அவர்களுடைய பேராசையை நிறைவேற்ற விரும்புவதையும் இது தெளிவுபடுத்துகிறது.

இடம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிய மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த பிரச்சினையை குறித்து தான் எதுவும் செய்ய முடியாதென்று இந்த நாட்டின் உயர்மட்ட நீதிமன்றம் கையை விரித்துள்ளது.

செயலாக்கத்துறை, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை உட்பட அரசின் எல்லா இயந்திரங்களும் முதலாளித்துவ அமைப்பின் தங்கு தடையற்ற சுரண்டலைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளனவே ஒழிய உழைக்கும் பெரும்பான்மையான மக்களின் நலன்களுக்கு சேவை செய்வதற்காக அல்ல என்ற உண்மையை இந்த நிகழ்வுகள் அம்பலப்படுத்துகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *