ஐதிராபாத் ஐ.ஐ.டி வளாகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின் நிலை

கொரோனா வைரசு ஊடங்கு நிலையில், ஐ.ஐ.டி ஐதிராபாத் வளாகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு வீடு திரும்ப விரும்புகிறார்கள். தெலுங்கானா சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள காண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஐ.ஐ.டி ஐதிராபாத் வளாகத்தின் ரூ .644 கோடி கட்டுமான திட்டத்தின் 2-வது கட்டத்தில் எல் அண்ட் டி (L&T) நிர்வாகத்திடம் இந்த தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்..

மார்ச் 24 முடக்கத்திற்கு முன்னர், பீகார், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஐ.ஐ.டி ஐதிராபாத் வளாகத்தில் கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்தத் தொழிலாளர்கள் எந்த வகையான வேலை என்பதைப் பொறுத்து மாதத்திற்கு ரூ. 15,000 லிருந்து ரூ. 25,000 வரை ஊதியம் பெற்று வந்தனர். எல் அண்ட் டி நிர்வாகம் ஒப்பந்தக்காரருக்கு கொடுக்கும் தொகையிலிருந்து அவர் தொழிலாளிகளுக்கு ஊதியம் கொடுக்கிறார். எந்தவொரு நேரத்திலும் தொழிலாளர்களின் பல வார ஊதியங்களை ஒப்பந்தக்காரர் தன்னிடமே வைத்துக் கொள்கிறார். அதன் மூலம் இந்தத் தொழிலாளர்களை கொத்தடிமைத் தொழிலாளர்களைப் போல ஒப்பந்தக்காரரிடமே தொடர்ந்து இருப்பதை உறுதி செய்து கொள்கிறார்கள்.

மத்திய மற்றும் மாநில அரசு, முதலாளிகளையும் ஒப்பந்தக்காரர்களையும் முடக்கப்பட்ட காலத்திற்கு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குமாறு கேட்டுக் கொண்ட போதிலும், மார்ச் 24 முடக்கத்தைத் தொடர்ந்து, இந்தத் தொழிலாளர்களுக்கு மார்ச் 21 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. முகாமில், கோடை வெப்பத்தில் தகரக் கூரை கொண்ட அறைகளில், ஒரு அறைக்கு 15 முதல் 20 தொழிலாளர்கள் வரை விசிறி கூட இல்லாமல் விடப்பட்டனர். உயிர் பிழைக்கக் கூட அவர்களிடம் போதுமான பணம் இல்லை, அவர்கள் தம் வீட்டிற்கு அனுப்பவும் பணம் எதுவும் இல்லை.

தங்களுக்கு வழங்க வேண்டிய கடந்த கால ஊதியத்தைக் கோரி, ஏப்ரல் 29 ம் தேதி, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமான தளத்தில் உள்ள எல் அன்டு டி நிர்வாகத்திடம் ஆர்பாட்டம் நடத்தினர். அடுத்த நாள், எல் அண்ட் டி நிர்வாகம் நிலுவைத் தொகையில் ஓரளவை ஒப்பந்தக்காரருக்குக் கொடுத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க ஏற்பாடு செய்தனர்.

இந்த தொழிலாளர்களின் போராட்டம் மே 1 ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து ஜார்க்கண்ட் வரை சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்ய அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது. சில தொழிலாளர்கள் இந்த ரயிலில் ஏற முடிந்தது. அதன்பிறகு, மே 4 ஆம் தேதி கட்டுமானத் தளத்தில் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும், மீதமுள்ள 600 தொழிலாளர்களில் பெரும்பாலோர் பணிக்குத் திரும்பும் மனநிலையில் இல்லை. அன்னிய சூழலில் எந்த வேலையும் ஊதியமும் இல்லாமல், இன்னுமொரு காலவரையற்ற முடக்கத்தைத் தங்களால் தாங்க முடியாது என்று அவர்கள் எண்ணினார்கள். தங்களது ஊர்  போய் சேர்வதற்கு போக்குவரத்தை அரசாங்கம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.

பீகார், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து பல்வேறு திட்டங்களில் பணியாற்றுவதற்காக வந்துள்ள நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களில் இவர்களும் அடங்குவர். எந்த வேலையும் ஊதியமும் இன்றி, பெரும்பாலும் தங்குவதற்கு இடமும் இல்லாமல், அவர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். தங்களைத் தாங்களே பதிவுசெய்து, வீட்டிற்குத் திரும்பிச் செல்ல டிக்கெட் பெறுவதற்காக, உள்ளூர் காவல் நிலையங்கள், ரயில் நிலையம் என இங்குமங்கும் பல மணிநேரம் காத்திருக்குமாறு அவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அவர்களின் கோபமும் விரக்தியும் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் பல்வேறு இடங்களில் காவல்துறையுடனும் அதிகாரிகளுடனும் மோதலில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *