ஊரடங்கிற்கு மத்தியில் – நாடெங்கிலும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்கின்றனர்

தமிழக செவிலியர்கள் பணி நிரந்தரமும், சம ஊதியமும், ஊதிய உயர்வும் கோருகின்றனர்

மருத்துவமனை நிர்வாகங்கள், செவிலியர்களுடைய சம்பளம் மற்றும் அலவன்சுகளை மறுக்கும் முயற்சிகளுக்கு எதிராக கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னணியில் பங்கேற்றுவரும் தமிழக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர்கள் போராடுகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்யும் செவிலியர்கள் எந்தவித வெட்டுக்களும் இன்றி தங்களுக்கு சம்பளமும் அலவன்சுகளும் வழங்குமாறு கோருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள ஒப்பந்த செவிலியர்கள் தங்களது மோசமான குறைந்த சம்பளம் குறித்து புகார் அளித்து வருகிறார்கள், அவர்கள் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மற்ற செவிலியர்களுக்குச் சமமான சம்பளத்தைக் கோருகின்றனர்.

செய்தித் தகவல்களின்படி, தமிழ்நாட்டின் பல தனியார் மருத்துவமனைகள், நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களின் சம்பளத்தை வெட்டிக் குறைக்கத் தொடங்கியுள்ளன. கொரோனா வைரசு தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பவர்களுக்குக் கூட சம்பள வெட்டு செய்யப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகளில் குறைந்த நோயாளிகள் இருப்பதைக் காரணமாகக் காட்டி, நிர்வாகம், ரூ .12,000 முதல் ரூ .25,000 வரை மாத சம்பளத்தைப் பெறும் நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களின் சம்பளத்தை 15-50% வரை வெட்டிக் குறைத்திருக்கிறார்கள். மேலும் மிகை நேர ஊதியமும், இரவு சுற்றுக்கான படியும் மறுக்கப்படுகிறது. அது மட்டுமின்றி அவர்களில் பலரும் வேலையை விட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை அதிகாரிகள் தங்கள் முழு சம்பளத் தொகையை வெட்டு இல்லாமல் வழங்க வேண்டும் என்று கோரி, பல தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த செவிலியர்கள் மே 12 அன்று ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மேலும் மிகை நேர ஊதியம், இரவு நேர வேலைக்கு அலவன்சு மற்றும் பிற அலவன்சுகளை நிறுத்தாமல் வழங்க வேண்டுமென்றும் செவிலியர்கள் கோரினர்.

2015 ஆம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்தப்பட்ட போது இரண்டு ஆண்டுகளில் நிரந்தர வேலை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும், ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகும் அவர்களுக்கு வேலை நிரந்தரமோ ஊதிய உயர்வோ வழங்கப்படவில்லை. நிரந்தர செவிலியர்களைப் போலவே ஒப்பந்த செவிலியர்களுக்கும் கொரோனா வைரசு வார்டுகளிலும் வேலை கொடுக்கப்பட்டாலும் இந்த ஒப்பந்த செவிலியர்கள் கடந்த இரண்டாண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் இன்றி மாதத்திற்கு ரூ .14,000 மட்டுமே ஊதியம் பெறுகிறார்கள். எல்லா நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களுக்கு சமமான வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டுமென்றும், அனைத்து ஒப்பந்த செவிலியர்களையும் உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசாங்க எம்.ஆர்.பி செவிலியர்கள் உரிமைக்கான அசோசியேசன் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *