நமது உரிமைகள் மீதான தாக்குதலை உறுதியாகவும் ஒற்றுமையோடும் எதிர்த்துப் போராடுவோம்!

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அழைப்பு, மே 18, 2020

தொழிலாளர் தோழர்களே,

கொரோனா வைரசு தொற்றுநோய் என்ற பெயரில் மத்திய அரசாங்கம் அறிவித்த அவசரகால நிலையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கம் நமது உரிமைகள் மீது இதுவரை கண்டிராத அளவில் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

இந்தியா ஒரு மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்து வருகிறது. இரண்டு மாதங்கள் நிறைவடையவிருக்கும் நாடு தழுவிய ஊரடங்கின் விளைவாக கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரமான வேலைகளை இழந்துவிட்டனர். கோடிக்கணக்கான வேலையிழந்த தொழிலாளர்கள், பசியிலும் பட்டினியிலும், தங்குவதற்கு இடமும் இன்றி, வயல்கள், காடுகள், ரயில் தடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் வழியாக ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள தங்கள் கிராமங்களை நோக்கிச் செல்கின்றனர். பசி-பட்டினியாலும், களைப்பினாலும் அல்லது விபத்துக்களிலும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் போகும் வழியிலேயே இறந்துள்ளனர்.

நம் நாட்டின் ஆட்சியாளர்களின் கொடுமைக்கும் கொடூரத்திற்கும் எல்லையே இல்லை. கொரோனா வைரசு நோயைச் சமாளிப்பதில் சமூகத்திற்கு உதவுவதற்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து, சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் உழைத்து வருகின்றனர். ஊரடங்கு முடக்கத்தின் விளைவாக கோடிக்கணக்கான தொழிலாளர்களும், விவசாயிகளும் உழைக்கும் மக்களும் மிகப் பெரிய அளவில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இவை அனைத்திலும் திருப்தியடையாத, நமது ஆட்சியாளர்கள் இப்போது இந்த நெருக்கடியின் முழுச் சுமையையும் வலுக்கட்டாயமாக தொழிலாளி வர்க்கத்தின் மீது ஏற்ற விரும்புகிறார்கள்.

தொழிலாளி வர்க்க உரிமைகள் மீது எல்லா வகையான தாக்குதல்களையும் நடத்துவதற்கு இந்த முடக்கத்தை மத்திய மாநில அரசாங்கங்கள் வெட்கமின்றி பயன்படுத்துகின்றன. முதலாளி வர்க்கத்தின் ஆணையின் அடிப்படையில் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களிடம் இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகள் கோரிவந்த தொழிலாளர் சட்ட மாற்றங்கள் அனைத்தும் இப்போது அவர்களுக்கு ஒரு வெள்ளி தட்டில் வழங்கப்படுகின்றன. நம்முடைய வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மாறிமாறி வந்த அரசாங்கங்களிடம் தொழிலாளர்கள் நாம் கோரிய மாற்றங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநில அரசாங்கங்கள் நிறைவேற்றியுள்ள அவசரச் சட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் தற்போதுள்ள பல உரிமைகளை இழக்க நேரிடும். வார வேலை நேரத்தை 48 மணியிலிருந்து 72 மணி நேரமாகவும், வேலை நாளை 8 லிருந்து 12 மணி நேரமாகவும் அதிகரித்து பத்து மாநில அரசாங்கங்கள் ஏற்கனவே நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.

இதனுடன், பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்புகளை அதிகரித்தல், பல்வேறு துறைகளில் தனியார்மயமாக்கல் மற்றும் இந்திய மற்றும் வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விவசாய வர்த்தகத்தைத் திறந்து விடுதல் போன்ற இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான கொள்கை நடவடிக்கைகளை அறிவிப்பதில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது.

ஆளும் முதலாளி வர்க்கமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் அரசியல் கூட்டங்களைத் தடை செய்வதன் மூலமும், முடக்கத்தின் மூலமும் தொழிலாளி வர்க்கத்தை செயலிழக்கச் செய்ய முடியும் என்று நினைக்கின்றனர். நம்முடைய உரிமைகளைத் தாக்கிவிட்டு தப்பித்துக் கொள்ளலாமென அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் தப்புக் கண்க்கு போடுகிறார்கள். நம்முடைய குரல்களைக் நசுக்க நாம் அனுமதிக்க மாட்டோம்.

நம்முடைய உரிமைகள் மீது அரசாங்கம் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக நமது நாட்டின் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பை வெளிப்படுத்த, மே 22 அன்று அனைத்திந்திய ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்வதென மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.       

மே 22 அனைத்திந்திய ஆர்பாட்டத்தை நம் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றிபெறச் செய்ய தீவிரமாக செயல்படுமாறு தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் அதன் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *