தொழிலாளர் சட்டங்களில் கொடூரமான மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சிகளை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் போராடும்

மத்திய தொழிற்சங்கங்கள் வெளியிட்ட கூட்டறிக்கை மே 15, 2020

மே 22 அன்று நாடு தழுவிய எதிர்ப்பு ஆர்பாட்டங்கள்

மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 2020 மே 14 அன்று நடைபெற்ற கூட்டத்தில், ஊரடங்கு காலத்தில் நாட்டில் உழைக்கும் மக்களின் நெருக்கடியான சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, இந்த சவாலை எதிர்கொள்ள ஐக்கிய நடவடிக்கைகளை மேம்படுத்துவதென முடிவு செய்தது.

ஊரடங்கின் காரணமாக ஏற்கனவே ஆழ்ந்த துன்பத்திலும், துயரத்திலும் மூழ்கி இருக்கும் நாட்டின் தொழிலாளி வர்க்கத்தையும் பொது மக்களையும் தாக்குவதற்கு கொரோனா பெருந்தொற்று நோயை ஒரு சாக்காக வைத்து பல்வேறு முடிவுகளை அரசாங்கம் நாள் தோரும் எடுத்து வருகிறது. இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் பிரதமர் மற்றும் தொழிலாளர் அமைச்சருக்கு பல மனுக்களை அளித்துள்ளன. இந்த முடக்க காலத்தில் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கக் கூடாது என்றும், இந்தக் காலத்திற்கு அவர்களுக்கு முழு ஊதியம் வழங்குவது தொடர்பாகவும் அரசாங்கத்தின் உத்தரவுகளும், ஆலோசனைகளும் பரவலாக மீறப்படுவது குறித்த பிரச்சினையையும் தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ளன. இந்த கோரிக்கைகள் குறித்து பிரதமரும் தொழிலாளர் அமைச்சரும் இம்மி அளவும் கவனம் செலுத்தவில்லை. உணவுப் பொருட்கள் விநியோகம், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மிகக் குறைந்த பண உதவி போன்ற அரசாங்கம் வெளியிட்ட அனைத்து அறிவிப்புகளும் நடைமுறையில் பெரும்பான்மையான பயனாளிகளுக்குச் சென்றடையாமல் தோல்வியடைந்திருக்கின்றன.

48 நாட்கள் முடக்கத்தின் காரணமாக வேலை இழப்பு, ஊதிய இழப்பு, குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படுதல் போன்றவற்றால் உழைக்கும் மக்களில் ஏராளமானோர் மனிதாபிமானமற்ற துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். மத்திய அரசாங்கம் உழைக்கும் மக்களை கிட்டத்தட்ட அடிமைத்தனத்திற்கு தீவிரமாகத் தள்ளி வருகிறது. வேறு வழியின்றி விரக்தியில் தொழிலாளர்கள் பல நூற்றுக்கணக்கான மைல்களை சாலைகள், ரயில் தடங்கள், வயல்வெளிகள் மற்றும் காடுகள் வழியாக தங்கள் வீடுகளை அடைவதற்கு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் பசி-பட்டினியாலும், களைப்பாலும், விபத்துக்கள் காரணமாகவும் வழியில் தங்களுடைய விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தனர். ஆனால் மூன்று முடக்கங்களுக்குப் பின்னரும், 2020 மே 14 உட்பட, அரசாங்கத்தின் அனைத்து அறிவிப்புகளுக்குப் பிறகும் பொது மக்களும் தொழிலாளர்களும் சந்தித்து வரும் துயரங்களிலிருந்து அவர்களை விடுவிக்க எதுவும் செய்யப்படவில்லை. பெரும்பான்மையான மக்களின் துயரங்கள் மற்றும் துன்பங்கள் குறித்து எவ்வித உணர்வுமின்றி அவர்கள் உண்மையிலிருந்து விலகி வெகு தொலைவில் நின்று கொண்டு பல வெற்று அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது மையத்தில் உள்ள அரசாங்கம், மிகவும் சந்தேகத்திற்குரிய வகையில், நீண்டகால முடக்கத்தைப் பயன்படுத்தி, தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் உரிமைகளைப் பறிப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் மாநில அரசாங்கங்களையும் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத எதேச்சையதிகார நடவடிக்கைகளை எடுக்கச் செய்யும் யுக்தியை அது செயல்படுத்தி வருகிறது. பல மாநிலங்களும் தொழிலாளர்களுடைய உரிமைகளுக்கும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மத்திய அரசின் அதே போக்கைப் பின்பற்ற வைக்கிறது. இது தொடர்பான ஆலோசனைகள் இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திலிருந்து மாநில அரசுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவுதல் என்ற போர்வையில் உபி அரசாங்கம் “உத்திர பிரதேசத்தில் சில தொழிலாளர் சட்டங்களிலிருந்து தற்காலிக விலக்கு அவசரச் சட்டம் 2020” ​​என்ற தலைப்பில் கொடூரமான அவரச சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஒரே அடி மூலம் 38 சட்டங்கள் 1000 நாட்களுக்கு (கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை கூலி வழங்கும் சட்டம் 1934 இன் பிரிவு 5, கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம் 1996, இழப்பீட்டுச் சட்டம் 1993 மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் சட்டம் 1976 ஆகியவை மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்தச் சட்டங்களில் தொழிற்சங்கச் சட்டம், தொழில் தகராறுகள் சட்டம், பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், மாநிலங்களுக்கு இடையே புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டம், சம ஊதியம் சட்டம், மகப்பேறு பயன் சட்டம் போன்றவை அடங்கும்.

மத்திய பிரதேச அரசு தொழிற்சாலைகள் சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் மற்றும் தொழில்துறை தகராறுகள் சட்டங்களில் கடுமையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, முதலாளிகள் தங்கள் விருப்பப்படி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும் தூக்கியெறியவும் அதிகாரம் அளிக்கவும்; பிரச்சனைகளை எழுப்புவதற்கும், குறைகளைத் தீர்ப்பதற்கும் உள்ள உரிமைக்குத் தடை, 49 நபர்கள் வரை ஒப்பந்தத் தொழிலாளர்களை வழங்குவதற்கு ஒப்பந்தக்காரர்கள் உரிமம் பெற வேண்டிய அவசியமில்லை, எனவே அவர்கள் எந்தவொரு விதிகளும் கட்டுப்பாடும் இல்லாமல் செயல்படலாம், தொழிற்சாலை ஆய்வு கிட்டத்தட்ட திரும்பப் பெறப்படும், மேலும் முழு அமலாக்க இயந்திரங்களும் முடக்கம் செய்யப்படும், இவ்வாறு ஊதியங்கள், இழப்பீடு, பாதுகாப்பு போன்றவற்றில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்டங்களை முற்றிலும் அர்த்தமற்றவைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல், மத்திய பிரதேச தொழிலாளர் நல வாரியத்திற்கு ஒரு தொழிலாளிக்கு ரூ .80 / – வீதம் செலுத்துவதில் இருந்தும் முதலாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் திருத்தப்பட்டு, கடைகள் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை தொடர்ச்சியாக 18 மணி நேரம் செயல்பட அனுமதிக்கிறது.

குஜராத் அரசாங்கமும் வேலை நேரத்தை 8 முதல் 12 மணி வரை அதிகரிக்கும் இந்த சட்டவிரோத முடிவை எடுத்துள்ளது, மேலும் உ.பி. அரசாங்கத்தைப் பின்பற்றி பல சட்டங்களை 1200 நாட்களுக்கு நிறுத்தி வைக்க விரும்புகிறது. அசாம் மற்றும் திரிபுரா அரசாங்கங்களும் இன்னும் பலரும் இதே பாதையில் செல்ல தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

இரண்டாவது கட்டத்தில் 8 மாநில அரசுகள் (குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார் மற்றும் பஞ்சாப்) தினசரி வேலை நேரத்தை எட்டு மணியிலிருந்து 12 மணி நேரம் வரை இருக்கலாமென ஒரு செயலாக்கத் துறையின் ஆணையின் மூலம் இந்த தொழிலாளர் விரோத பிற்போக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் சட்டத்தை மீறும் இந்த முடிவு முடக்ககால சூழ்நிலையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் கூட்டுப் பேரம், முறையான ஊதியங்கள் தொடர்பான தகராறு, பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான உத்தரவாதம் போன்ற உரிமைகள் இன்றி தொழிலாளர்களை கொடூரமாகச் சுரண்டுவதை எளிதாக்குகின்றன. அது மட்டுமின்றி, பொருளாதார மந்தநிலை நீடிக்கும் நிலையிலும், அதிக இலாபத்தை அடையும் நோக்கத்தில், தொழிலாளர்களை அடிமைகளாக நடத்துவதும் இதன் நோக்கமாகும்.  கட்டாய உழைப்பின் மூலம், பெண்களும் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினரும் கடுமையாகச் சுரண்டப்படுவார்கள்..

இதன் பொருள் என்னவென்றால், மூலதனத்தின் நலத்திற்காக ஊதியம், பாதுகாப்பு, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, அனைத்திற்கும் மேலாக மனித மாண்புக்கும் எவ்வித உரிமைகளுக்கும் உத்திரவாதமின்றி, கொத்தடிமைகளாக தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். தொழிலாளர்களின் இரத்தத்திலும் வியர்வையிலும் இலாபத்தை அதிகப்படுத்துவதற்காக செய்யப்படுகிறது. இது மனித உரிமைகளின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானதாகும். .

இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை மீண்டும் ஆங்கிலேய காலனிய கால நிலைமைகளுக்கு தள்ள முயற்சி செய்யப்படுகிறது. தொழிற்சங்க இயக்கம் இத்தகைய மோசமான நயவஞ்சகமான சூழ்ச்சிகளை ஏற்றுக் கொள்ள முடியாது, அது, தொழிலாளர் விரோத மக்கள் விரோதக் கொள்கைகளைத் தோற்கடிப்பதற்கான உறுதியுடனும், தங்கள் முழு வலிமையுடனும் ஒற்றுமையாகப் போராடுவதில் உறுதியாக இருக்கிறது. அடுத்து வருகின்ற நாட்களில் நாடு தழுவிய போராட்டத்தின் மூலம் அடிமைத்தனத்தை திணிக்கும் இத்தகைய திட்டங்களுக்கு எதிராக நாம் எதிர்ப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்.

உழைக்கும் மக்களின் போராட்ட மனநிலையை பிரதிபலிக்கும் வகையில், பல மாநிலங்களிலும் தொழில்துறைகளிலும் இத்தகைய மிருகத்தனமான கொடூரமான மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் ஏற்கெனவே கூட்டாக பல போராட்டங்கள் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றன என்பதை மத்திய தொழிற் சங்கங்கள் மனநிறைவோடு சுட்டிக் காட்டுகின்றன.

இந்தப் பின்னணியில், தொடக்கமாக, அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத மற்றும் மக்கள் விரோத தாக்குதல்களுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 2020 மே 22 அன்று நாடு தழுவிய எதிர்ப்பு தினத்தைக் கடைபிடிக்க முடிவு செய்துள்ளது. தொழிற்சங்கங்களின் தேசிய அளவிலான தலைவர்கள் டெல்லியில் ராஜ்காட், காந்தி சமாதியில் ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்துவார்கள். அதே நேரத்தில் அனைத்து மாநிலங்களிலும் கூட்டாக எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடைபெறும். இதிலிருந்து தொடங்கி, எல்லா தொழிற்சங்கங்கள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து அரசாங்கத்திற்கு லட்சக்கணக்கான மனுக்கள் அனுப்பி வைக்கப்படும். சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாகச் செல்வதற்கான உடனடி நிவாரணம், அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் பொதுவான உணவுப் பொருட்கள் வினியோகம், முடக்க காலம் முழுவதற்கும் ஊதியத்தை உறுதி செய்தல், அனைத்து (பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத அல்லது சுயதொழில் செய்பும்), அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உதவித் தொகையை உடனடியாக வழங்குதல், மத்திய அரசு ஊழியர்களுக்கும்  சிபிஎஸ்இக்களுக்கும் அகவிலைப்படி முடக்கத்தையும், ஓய்வூதியதாரர்களுக்கு டிஆர் முடக்கத்தையும் நீக்குதல், அங்கீகரிக்கப்பட்ட வேலையிடங்களை வெட்டிக் குறைப்பதை நிறுத்துதல் போன்றன கோரிக்கைகளில் அடங்கும்.

அத்துடன், மாநில வாரியாகவும், துறை வாரியாகவும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட தொடர் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். கடுமையான போராட்டங்கள் மூலம் வென்ற தொழிலாளர் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்காக வரும் நாட்களில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டங்கள் மூலம் ஐக்கிய போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்கான உறுதியோடும் கண்ணோட்டத்தோடும் செயல்பட வேண்டும்.

தொழிலாளர் வேலை நிலைமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அனைத்து சர்வதேச உடன்படிக்கைகளில் இந்திய அரசு கொடுத்துள்ள வாக்குறுதிகள் மீறப்படுவது தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பிற்கு (ILO) கூட்டு பிரதிநிதித்துவத்தை அனுப்புவதெனவும் மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

உடல் ரீதியான இடைவெளியை கடைபிடித்து, சமூக ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கும் அதே நேரத்தில் நாடு தழுவிய எதிர்ப்பு தினத் திட்டத்தை மிகப்பெரிய வெற்றியாக மாற்ற வேண்டும் என மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளின் கூட்டுத் தளம், வலியுறுத்துகிறது.

ஐஎன்டியுசி (INTUC), ஏஐடியுசி (AITUC), எச்எம்எஸ் (HMS), சிஐடியு (CITU), ஏஐயுடியுசி (AIUTUC), டியுசிசி (TUCC), சேவா (SEWA), ஏஐசிசிடியு (AICCTU), எல்பிஎப் (LPF), யுடியுசி (UTUC) மற்றும் பல்வேறு துறைகளின் கூட்டமைப்புகள் மற்றும் சங்கங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *