கொரோனா வைரசு தொற்றுநோயை ஒரு சாக்காக வைத்து தொழிலாளர்களைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் திட்டங்களை உறுதியாக எதிர்த்துப் போராடுவோம்!

தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு சமுதாயத்தை நிறுவுவதற்கு ஒன்றுபடுவோம்!

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அறிக்கை, மே 10, 2020

நாடு கொரோனா வைரசு பெருந் தொற்றுநோயை சந்தித்து வரும் சூழ்நிலையிலும் கூட, வரும் நாட்களில் தொழிலாளர்களைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்த பல திட்டங்களை இந்தியாவின் மிகப் பெரிய முதலாளிகள் அறிவித்து வருகின்றனர்.

“பெருந்தொற்று நோயால் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பது” என்ற பெயரில் மத்திய அரசாங்கமும் மற்றும் பஞ்சாப், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பல்வேறு மாநில அரசாங்கங்களும் தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தடுத்து நிறுத்தி வைத்திருக்கின்றன. மேலும், தொழிலாளர்களைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்தும் நோக்கத்துடன் முதலாளிகளுக்கு பல விலக்குகளை அறிவித்துள்ளன.

தொழிற்சாலைகள் சட்டம் 1948 இல் ஒரு திருத்தத்தின் மூலம் உற்பத்தி நிறுவனங்கள் அவர்களுடைய வேலை நேரத்தை தற்போது ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரமாகவும், வாரத்தில் 48 மணி நேரத்திலிருந்து வாரத்திற்கு 72 மணி நேரமாகவும் அதிகரிக்க அனுமதிக்கப்படும் என்று இந்த மாநிலங்கள் அனைத்தும் அறிவித்துள்ளன. ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதற்காகவும், விருப்பம் போல தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும், தூக்கியெறிவதற்கும் வசதியாக ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் தொழில்துறை தகராறுகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களையும் இந்த மாநிலங்கள் அறிவித்துள்ளன. வேலை நிறுத்தங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், மகப்பேறு நலச் சட்டம், சம ஊதியச் சட்டம், தொழிற்சங்கச் சட்டம், தொழில்துறை வேலைவாய்ப்புச் சட்டம், தொழில்துறை தகராறுகள் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் ஆகிய அனைத்தும் அடுத்த மூன்று ஆண்டு காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படும் என்று அவசரச் சட்டம் ஒன்றை உத்திரப் பிரதேச அரசு நிறைவேற்றியுள்ளது. அதிகாரிகள் தொழிற்சாலைகளை ஆய்வு செய்வது நிறுத்தி வைக்கப்படும். வேலை செய்யுமிடங்களில் பணியிடப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து முதலாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படும். தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் தொழிற்சங்கங்களை நிறுவுவதைக் கடினமாக்கும் வகையில் தொழிற்சங்கச் சட்டம் திருத்தப்படும்.

கொரோனா வைரசு தொற்றுநோய் வருவதற்கு முன்பே, பெரிய முதலாளிகளின் நலன்களுக்காக, தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களாக மாற்ற மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் முயன்றன. இந்த நடவடிக்கைகளின் மூலம் பல்லாண்டு காலப் போராட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் பெற்ற அனைத்து அடிப்படை உரிமைகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மற்றும் பிற சலுகைகளையும் பெரிய முதலாளிகள் பறிக்க விரும்பினர். ஆனால் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் அமைப்புகளின் உறுதியான எதிர்ப்பின் காரணமாக, இந்தத் திட்டத்தை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை. இப்போது, ​​கொரோனா வைரசு பெருந்தொற்று மற்றும் ஊரடங்கின் காரணமாக வேலை நிறுத்தங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, பொருளாதாரத்தை நிதி நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவது என்ற சாக்கில், பெரிய முதலாளிகள் தங்களுடைய திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மூலம் நிறைவேற்ற முயற்சிக்கின்றனர்.

கொரோனா வைரசு பெருந்தொற்றும் முடக்கமும், முதலாளிகள் மற்றும் அவர்களுடைய அரசின் தொழிலாளர் விரோதத் தன்மையை தெள்ளத் தெளிவாக வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. ஒரே இரவில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். திடீரென்று அவர்கள் வீடற்றவர்களாகவும், தமக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் எந்த ஆதரவும் இல்லாதவர்களாகவும் ஆகிவிட்டனர். அவர்கள் பசி பட்டினியோடு நாட்களைக் கடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கும் வீடுகளுக்கும் திரும்பிச் செல்ல விரும்பியபோது, ​​அரசு அனைத்து போக்குவரத்துக்களையும் நிறுத்தி, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததுடன், மிருகங்களைப் போலத் தொழிலாளர்களை கூண்டுகளில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்க கொடூரமான காவல்துறையைக் கூட பயன்படுத்தியது. ​நமது ​நாட்டிலும் சர்வதேச அளவிலும் மக்கள் இதைக் கண்டிக்கத் தொடங்கிய போது, ​​தொழிலாளர்கள் வீடு திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம் என்று மத்திய, மாநில அரசாங்கங்கள் அறிவித்தன. ஆனால், தொழிலாளர்கள் திரும்பிச் சென்றுவிட்டால் தொழிற்சாலைகளிலும் கட்டுமானத் தளங்களிலும் குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறி பெரிய முதலாளிகள் இந்த நடவடிக்கையை எதிர்த்ததையடுத்து தொழிலாளர்கள் வீடு திரும்புவதை அரசாங்கங்கள் மீண்டும் தடுக்கத் தொடங்கின. தொழிலாளர்களுக்கு அவர்களுடைய ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படுவதை உறுதி செய்ய எந்தவொரு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்கவில்லை. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரிய முதலாளிகள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களுடைய இலாபங்களைப் பாதுகாக்கவும் அதிகரிக்கவும் மட்டுமே இந்திய அரசும், அதன் மத்திய, மாநில அரசாங்கங்களும் செயல்படுகின்றன என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது. சமுதாயத்தின் செல்வத்தை உண்மையிலேயே உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் நல்வாழ்வை உறுதி செய்வது ஆளும் வர்க்கத்தின் நோக்கமல்ல.

தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் சுரண்டலையும், கொள்ளையையும் பலமடங்கு அதிகரிப்பதன் மூலம் நெருக்கடியிலிருந்து வெளிவர ஏகாதிபத்தியர்களும் பெரிய தொழில் நிறுவனங்களும் முயற்சிக்கின்றன. தொழிலாளர் சட்டங்களில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் தொழிலாளர்களின் அனைத்து அடிப்படை உரிமைகளைப் பறிப்பதையும், அவர்களைச் சுரண்டுவதையும், தடையற்ற அடிமைத்தனத்தையும் அதிகரிப்பதற்கும் உள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்கும் நோக்கம் கொண்டனவாகும். இதன் மூலம் பெரும் முதலாளிகளின் இலாபங்களைப் பாதுகாக்கவும் அதிகரிக்கவும் முடியும். தொழிலாளர்கள் ஒரு மனிதனாக வாழ்வதற்கான உரிமையைப் பறிக்க வேண்டி இருந்தாலும், பெரிய முதலாளிகளின் இலாபத்தில் மட்டும் எந்த தோய்வும், வெட்டும் ஏற்படக் கூடாதென ஆளும் வர்க்கம் விரும்புகிறது!

முதலாளித்துவம் மிகவும் மனிதாபிமானமற்ற அமைப்பு என்பது இன்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பல கோடிக் கணக்கான மனித உயிர்களை விலையாகக் கொடுத்து, இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக பெரும் நிறுவனங்களைக் கொழுக்கச் செய்வதே அதனுடைய முக்கிய நோக்கமாகும்.

ஆளும் முதலாளி வர்க்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், அது சமூக விரோத, தேச விரோதப் பாதையில் போய்க் கொண்டிருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

சமுதாயத்தை வழிநடத்துவதற்கு, முதலாளி வர்க்கம் இனியும் இலாயக்கற்றது. தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்!

பெரிய முதலாளி ஆளும் வர்க்கமும் அதனுடைய அரசாங்கங்களும் தொழிலாளி வர்க்கத்தின் மீது நடத்திவரும் தாக்குதல்களை உறுதியுடன் எதிர்த்துப் போராட முன்வருமாறு அனைத்துத் தொழிற்சங்கங்கள், தொழிலாளர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் மற்றும் பிற மக்களுடைய அமைப்புகளையும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் அழைக்கிறது. ஊரடங்கிற்குப் பின்னர் தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடங்குகையில், முதலாளி வர்க்கத்தின் இந்த சதியை முறியடிக்க நாம் ஒன்றுபட்டு வேலை நிறுத்தங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்து நடத்த வேண்டும். அத்துடன், பொருளாதாரம் மிகச் சில பகாசூர பணக்காரர்களுடைய பைகளை நிரப்புவதாக இல்லாமல், எல்லா உழைக்கும் மக்களுடைய நல்வாழ்க்கையை உறுதி செய்வதாக இருக்கும் ஒரு எதிர்காலத்திற்கு வழி வகுப்பதற்காக ஒன்றுபட்டு போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். பெரும் தொழில் நிறுவனங்களின் பேராசைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலனுக்காக சமுதாயத்தின் அனைத்து முக்கிய முடிவுகளையும், தொழிலாளர்களும் உழைப்பாளர்களும் எடுக்கக் கூடிய, ஒரு எதிர்காலத்திற்காக போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

நாங்கள் தொழிலாளர்கள், அடிமைகள் அல்ல!

தொழிலாளர்களின் உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஒழிக!

நமது உரிமைகளுக்காகவும் சமுதாயத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் நாம் போராடுவோம்!

நாட்டின் செல்வத்தை உற்பத்தி செய்பவர்களே அதன் ஆட்சியாளர்களாக இருக்க வேண்டும்!

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!

இன்குலாப் ஜிந்தாபாத்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *