கார்ல் மார்க்சின் 202 வது பிறந்தநாள் ஆண்டு விழா:

முதலாளித்துவத்திலிருந்து சோசலிச மாற்றத்திற்கு காலம் அழைப்பு விடுக்கிறது

“ஆளும் வர்க்கங்கள் ஒரு கம்யூனிச புரட்சியால் நடுங்கட்டும். பாட்டாளி வர்க்கம் இழப்பதற்கு சங்கிலிகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் இருக்கிறது. எல்லா நாட்டுத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்!” கம்யூனிஸ்ட் அறிக்கையின் இந்த புகழ்பெற்ற வார்த்தைகள் கார்ல் மார்க்சின் பிறந்த நாளான மே 5 அன்று உலகம் முழுவதும் எதிரொலித்தன. ஆளும் முதலாளி வர்க்கத்திற்கு எதிரான கோபம் உச்சத்தை எட்டுகின்ற இந்த நேரத்தில், பல கோடிக் கணக்கான பாட்டாளி வர்க்கத்தினருடைய இதயத்தை இந்த வார்த்தைகள் தொட்டிருக்கின்றன.

கொரோனா வைரசு பெருந்தொற்று நோய் பரவும் சூழ்நிலையில் பெரும்பான்மையான முதலாளித்துவ அரசாங்கங்கள் விதித்த ஊரடங்கால் தொழிலாளர்கள் பேரழிவிற்கு ஆளாகியுள்ளனர். அதே நேரத்தில் இனவெறிக்கும், வகுப்புவாத பரப்புரைக்கும் மற்றும் சனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எந்தவிதமான முடக்கமும் இல்லை. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பகைமைக்கும், இராணுவமயமாக்குவதற்கும் போருக்கும் எந்தவிதமான முடக்கமும் இல்லை. இந்த வைரசை உலகமெங்கும் திட்டமிட்டு பரப்பியதாக அமெரிக்கா, சீனாவை குற்றங்கூட சாட்டி வருகிறது.

முதலாளித்துவம் ஒரு மனித நேயமற்ற அமைப்பாக வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளது. பல கோடிக்கணக்கான மனித உயிர்களை விலையாகக் கொடுத்து ஒரு சிறிய எண்ணிக்கையிலான பாகாசூர பணக்காரர்களை அது கொழுக்கச் செய்து வருகிறது. புதிய கொரோனா வைரசு போன்ற ஒரு பெருந்தொற்று நோயிலிருந்து சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பாதுகாக்க திறனற்றதென பெரும்பான்மையான முதலாளித்துவ அரசாங்கங்கள் அம்பலப்பட்டு நிற்கின்றன.

இனியும் சமுதாயத்தை ஆள முதலாளி வர்க்கம் தகுதியற்றது என்ற மார்க்சின் அறிவியல் முடிவின் உண்மைத் தன்மையை நம் கண்களுக்கு முன்னால் உள்ள அனைத்து உண்மைகளும் நிகழ்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. மேற்கொண்டு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாட்டாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாக மாறுவதும், அது முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாற்றத்தை மேற்கொள்ளவும் வேண்டும்.

மார்க்சின் கருத்தியல் முடிவுகளும் போதனைகளும் காலாவதியாகி விட்டன என்றும், இனி செல்லுபடியாகாது என்றும் பொய்யை முதலாளி வர்க்கம் தொடர்ந்து பரப்பி வருகிறது. மனிதனை உயிரோடு விழுங்கிவரும் நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ அமைப்பின் ஆயுளை நீடிப்பதே அவர்களின் நோக்கமாகும். முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து விட்டு ஒரு புதிய சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை வழிநடத்துவதற்கு புரட்சிகர கோட்பாட்டை பாட்டாளி வர்க்கம் தனது ஆயுதமாக கொண்டிருப்பதை அவர்கள் தடுக்க விரும்புகிறார்கள்.

இந்தியாவில், கடந்த 45 நாட்களாக முடக்கப்பட்டிருந்த காலத்தில் தங்களுடைய வேலைகளையும், வைத்திருந்த மிகக் குறைந்த சேமிப்புகள் அனைத்தையும் இழந்துவிட்ட தொழில்துறை மற்றும் வர்த்தகத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான பாட்டாளி வர்க்கம், தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதற்கான உரிமையில் உறுதியோடு நிற்கிறார்கள். தொழிலாளர்கள் நகரங்களை விட்டு வெளியேறக் கூடாதென விரும்பும் முதலாளிகளுடைய நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுகின்றன. முடக்கம் அகற்றப்படும்போது வேலைக்கு வரத் தயாராக உள்ள நிலையில் வேலையில்லாதவர்களுடைய ஒரு பெரிய இராணுவத்தை வைத்திருப்பதற்கான வசதியை முதலாளிகள் அனுபவிக்க விரும்புகிறார்கள். தொழிலாளர்கள் அதிகாரிகளின் தடையை மீறிச் செல்கிறார்கள். அவர்கள் காவல்துறையினருடன் பல இடங்களில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி தொழிலாளர்களைச் சுரண்டுவதை மேலும் தீவிரப்படுத்த முதலாளி வர்க்கம் விருப்புகிறது. இதை, தொழிற்சாலைகளில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட வேலை நாளை 8 லிருந்து 12 மணி நேரம் வரை நீட்டிக்க பல மாநில அரசாங்கங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளில் காணலாம். அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க உத்தரபிரதேச அரசு எடுத்த முடிவிலும் இதைக் காணலாம்.

கொரோனா வைரசின் காரணமாக கொண்டு வரப்பட்ட ஊரடங்கு முதலாளித்துவ அமைப்பின் மனித நேயமற்ற தன்மையை நமது நாட்டிலுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு உணர்த்தியுள்ளது. இது தங்களுடைய எண்ணிக்கையின் வலிமையையும், சமுதாயத்தில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கு குறித்தும் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஒடுக்கப்பட்ட அனைவரையும் இந்திய பாட்டாளி வர்க்கம் அணிதிரட்டுவதற்கும், முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை அகற்றுவதற்கும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவுவதற்குமான போராட்டத்திற்கு தலைமை அளிப்பதற்கும் வழி காட்டுமென்ற தன்னுடைய  உறுதிமொழியை மார்க்சின் பிறந்தநாள் ஆண்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி மீண்டும் புதுப்பிக்கிறது. மேலும் நமது கட்சி ஒரு நவீன சனநாயக மற்றும் சோசலிச இந்தியாவுக்கு ஒரு புதிய அடித்தளத்தை அமைக்கும்.

கார்ல் மார்க்சின் முக்கிய கருத்தியல் முடிவுகள்

மனித சமுதாய வளர்ச்சியின் பொதுவான விதியையும் (வர்க்கப் போராட்டக் கோட்பாடு) மற்றும் முதலாளித்துவ சமுதாயத்தின் இயக்கம் பற்றிய குறிப்பிட்ட விதியையும் (உபரி மதிப்புக் கோட்பாடு) மார்சு கண்டுபிடித்தார். கூலி உழைப்பைச் சுரண்டுவதே முதலாளித்துவ இலாபத்தின் அடிப்படையாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். மனித சமுதாயத்தின் வரலாற்று பரிணாமத்தை, அதன் பழமையான கட்டத்தில் இருந்து, வர்க்கப் போராட்டத்தின் மூலம் அடுத்தடுத்த உயர்ந்த கட்டங்களுக்கு வந்திருப்பதை அவர் ஆய்வு செய்தார். உற்பத்தி சக்திகள் மேலும் வளர்ச்சியடைவதற்கு, தற்போதுள்ள உற்பத்தி உறவுகள் ஒரு தடையாக மாறும் போது, ​​சமுதாயம் மேற்கொண்டு முன்னேறுவதற்கு ஒரு புரட்சி அவசியமாகிறது என்பதை அவர் காட்டினார்.

வர்க்கப் பிளவுபட்ட சமுதாயத்தின் கடைசி வடிவம் முதலாளித்துவ சமுதாயம் என்ற முடிவுக்கு மார்க்சு வந்தார். முதலாளித்துவம், அடுத்த உயர் நிலையாகிய வர்க்க வேறுபாடுகள் இல்லாத ஒரு சமுதாயத்திற்கு – ஒரு நவீன கம்யூனிச சமூகத்திற்கும், அதன் ஆரம்ப கட்டமாகிய சோசலிசத்திற்கும் வழி வகுக்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடு, உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும், உற்பத்திக் கருவிகள் தனியார் உடைமையாக இருப்பதற்கும் இடையே தானென மார்க்சு கண்டுபிடித்தார். உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் முதலாளித்துவ இலாபத்தை அதிகரிப்பதென்ற முக்கிய நோக்கமே, உற்பத்தி சக்திகளின் தங்கு தடையற்ற வளர்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது, மேலும் இது மீண்டும் மீண்டும் அதிக உற்பத்தி நெருக்கடிகளுக்கு வழிவகுக்கிறது. முதலாளிகள் விற்க விரும்புவதை வாங்குவதற்கு உழைக்கும் மக்களின் கைகளில் வாங்கும் சக்தி இல்லாததால், இத்தகைய நெருக்கடிகளின் போது உற்பத்தி சரிவும், உற்பத்தி சக்திகள் அழிக்கப்படுவதும் நிகழ்கின்றன,

முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடு, தீர்க்கப்படக்கூடியதென்றும், தீர்க்கப்பட வேண்டியதென்றும் கூறியதோடு, அதற்கான வழியையும் மார்க்சு காட்டினார். உற்பத்திக் கருவிகள் தனியாரிடமிருந்து சமூகச் சொத்தாக மாற்றப்பட வேண்டும், இது, முதலாளித்துவ பேராசையை நிறைவேற்றுவதற்கு பதிலாக சமூகத் தேவைகளை நிறைவு செய்வதாக உற்பத்தியை மாற்றியமைக்கும். முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கு தலைமை தாங்கும் திறனும் ஆர்வமும் புரட்சிகர வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கத்திற்கு மட்டுமே இருக்கிறது என்பதை மார்க்சு கண்டுபிடித்தார்.

சமூக வளர்ச்சியின் உந்துசக்தியாக வர்க்கப் போராட்டம் இருப்பதை மார்க்சுக்கு முன் வந்த சிந்தனையாளர்கள் கண்டுபிடித்தது உண்மையே. நவீன சமுதாயத்தில் வர்க்கப் போராட்டம் தவிர்க்க முடியாமல் முதலாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் தூக்கியெறிவதற்கும், சமுதாயத்தில் அனைத்து வர்க்க வேறுபாடுகளையும் ஒழிப்பதற்கான முன்னோடியாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கும் கொண்டு செல்லும் என்ற முடிவின் மூலம் மார்க்சு தனது தனித்துவமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *