12 மணி நேர வேலையை அனுமதிக்கும் சட்டங்களை கண்டனம் செய்வீர்

நம் நாட்டின் தொழிலாளர்களின் உரிமைகள் மீது முதலாளி வர்க்கம் ஒரு மிகப் பெரிய தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. நாடு முழுவதும் முடக்கப்பட்டு, ஒரு தொற்றுநோய் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலாளி வர்க்கம் ஒன்றன்பின் ஒன்றாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தொழிலாளி வர்க்கத்தின் மேல் மூர்க்கத்தனமாக திணித்து வருகிறது. தொழிலாளர்களின் மிக அடிப்படையான உரிமைகளில் ஒன்று, வேலை நாளை 8 மணி நேரமாகவும், வாரத்திற்கு 48 மணி நேரமாகவும் வரையறை செய்திருப்பதாகும். இது தொழிற்சாலைகள் சட்டம், 1948 இல் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில், ஒன்றன்பின் ஒன்றாக பல மாநில அரசாங்கங்கள், மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி நடத்திய போதிலும், வேலை நாளை 12 மணி நேரமாகவும், வாரத்திற்கு 72 மணி நேரமாகவும் நீட்டித்து அவசரச் சட்டங்களை இயற்றி வருகின்றன.

ஏப்ரல் 7, 2020 அன்று, குஜராத் அரசாங்கம் தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்தது, அதன்படி, மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களை ஒரு வேலைச் சுற்றில் 12 மணி நேரமும், ஒரு வாரத்தில் 72 மணி நேரமும் வேலை செய்யுமாறு முதலாளிகள் சட்டப்படி கட்டாயப்படுத்த முடியும். இவ்வாறு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, 6 மணி நேர வேலைக்குப் பிறகு 30 நிமிட இடைவெளி கொடுக்கப்படும். இந்தத் திருத்தம் இப்போது ஏப்ரல் 29 முதல் ஜூலை 19, 2020 வரை பொருந்தும். இந்தத் திருத்திற்கு முன்னர், தொழிற்சாலைகள் சட்டம் – 1948 இன் படி, ஒரு தொழிலாளி ஒரு நாளில் 9 மணி நேரமும், ஒரு வாரத்தில் 48 மணி நேரமும் மட்டுமே வேலை செய்ய முடியும், வாரத்தில் 1 நாள் வார விடுமுறை கிடைக்கும். 5 மணி நேர வேலைக்குப் பின்னர் 30 நிமிட இடைவேளை கொடுக்கப்படும். சராசரியாக ஒரு வேலை நாள் 8 மணி நேரமாக இருந்தது.

கூடுதலாக செய்யப்படும் நான்கு மணி நேர வேலைக்கு ஒரு மடங்கு மிகை ஊதியத்தை மட்டுமே தொழிலாளர்கள் பெற முடியும் என்று குஜராத் அரசாங்கத்தின் திருத்தம் மேலும் கூறியுள்ளது. இது (திருத்தப்படாத) சட்டத்தின் 59 வது பிரிவுக்கு எதிரானதாகும், அது ஒரு வாரத்தில் 48 மணி நேரத்திற்கு மேல் செய்யப்படும் வேலைக்கு சாதாரண ஊதிய விகிதத்தை விட இருமடங்கு மிகை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

ராஜஸ்தான் அரசாங்கம் ஏப்ரல் 11 ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது, அது 12 மணி நேர வேலை நாளை 3 மாதங்களுக்கு அனுமதித்திருக்கிறது, கூடுதல் 4 மணிநேர வேலைக்கு இரட்டிப்பு மிகை ஊதியம் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறது. கூடுதல் வேலையை 24 மணிநேரம் வரை செய்யலாம் என்றும், அதாவது ஒரு நாளைக்கு 12 மணி நேரமாக வாரத்தில் 6 நாட்களுக்கு செய்யலாமென அறிவித்திருக்கிறது. முடக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வதற்கான தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஏப்ரல் 20-ம் தேதி அறிவிப்பின் மூலம் பஞ்சாப் அரசு 12 மணி நேர வேலை நாளை 3 மாதங்களுக்கு அனுமதித்திருக்கிறது, கூடுதல் 4 மணி நேர வேலைக்கு இரட்டிப்பு மிகை ஊதியம் கிடைக்குமென அறிவித்திருக்கிறது. இமாச்சல பிரதேசமும் ஏப்ரல் 21 ம் தேதி இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டது, 12 மணி நேர வேலை நாளையும், ஒரு வாரத்தில் 72 மணி நேரம் வரை வேலையையும், கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு மிகை ஊதியத்தையும் ஏப்ரல் 21 முதல் ஜூலை 20, 2020 வரை அனுமதித்திருக்கிறது.

மே 7 அன்று, மத்திய பிரதேச அரசாங்கம் தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய முதலாளிகள் கட்டாயப்படுத்த அனுமதிப்பது உட்பட பல தொழிலாளர்களுக்கு விரோதமான மாற்றங்களை அறிவித்தது. இதற்கிடையில், உத்தரப்பிரதேச அரசு ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது, அதன் மூலம் தொழிற்சாலைகள் சட்டம் உட்பட தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளை வரையறுக்கும் பெரும்பாலான சட்டங்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளன. இதில் 8 மணி நேர நாளும், 48 மணி நேர வார வேலை வரம்பும் அடங்கும்.

ஊடரங்கிற்குப் பிந்தைய காலத்திற்கு 12 மணி நேர வேலை நாள் என்ற கருத்தை மத்திய அரசின் உயர்மட்ட செயலாளர்களின் ஒரு பணிக்குழு முன்மொழிந்தது. இதை மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால், அது உடனடியாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதாலும், மத்திய தொழிற்சங்கங்களின் வலுவான எதிர்ப்பையும் உருவாக்கும் என்பதாலும், தொழிற்சாலைகள் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு மத்திய அரசு மாநில அரசாங்கங்களை ஊக்குவித்தது. “தொழிலாளர்” துறை, அரசியலமைப்புச் சட்டத்தின்படி மத்திய – மாநில அரசாங்கங்களுடைய கூட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு விரோதமான பல மாற்றங்களைக் கொண்டுவர இந்த தந்திரம் சமீப காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

தொழிலாளி முதலாளிக்கு சொந்தமானவர் என்றும் அவரது விருப்பப்படி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்ய வைக்கலாம் என்றும் இந்தத் திருத்தங்கள் கருதுவதாகத் தெரிகிறது. இது வெட்கப்படத்தக்கதாகும், ஏனென்றால் கூலித் தொழிலாளி ஒரு அடிமை அல்ல! அவன் அல்லது அவள் எந்த முதலாளிக்கும் முழு நேரச் சொந்தமல்ல. ஒரு கூலித் தொழிலாளி தன் உழைப்பு சக்தியை ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மணி நேரங்களுக்கு விற்கிறான், மீதமுள்ள நேரம் தன் குடும்பத்துடன் செலவழிப்பதற்கும் ஓய்வெடுப்பதற்கும் அவனுக்கோ அவளுக்கோ சொந்தமானதாகும். ஆகவே, வேலை நாளின் அளவிற்கு சட்டபூர்வமாக விதிக்கப்பட்டுள்ள 8 மணி நேர வரம்பு, விதிவிலக்கு இல்லாமல் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உரிய உரிமையாகும்.

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை நாள் என்ற உரிமையை வென்றெடுக்க மிக நீண்டப் போராட்டங்களை மேற்கொண்டனர், அது இப்போது பிடுங்கப்பட்டு வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில் 8 மணி நேர வேலை நாளுக்காக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் போராடியதை மே தினம் போற்றிக் நினைவுகூர்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஒரு பொதுவான வேலை நாள் 12 முதல் 16 மணி நேரமாக இருந்தது. மோசமான வேலை நிலைமைகளும் நீண்ட வேலை நேரமும், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிர்களைக் குடித்தன. இந்த கோரிக்கைக்காக போராடி பல தொழிலாளர்கள் தங்களுடைய இன்னுயிரைத் தியாகம் செய்தனர். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்தே தொழிலாளர்கள் குறைவான வேலை நேரத்திற்காகக் கோரிக்கை எழுப்பத் தொடங்கினர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல நாடுகள், வேலை நாளை 8 மணி நேரத்திற்கு கட்டுப்படுத்த சட்டங்களை இயற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவில் 1934 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம், 1946 இல் திருத்தப்பட்டபோது 8 மணி நேர வேலை நாள் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

ஆயினும், ஊதியத்தை அதிகரிக்காமல் வேலை நேரத்தை அதிகரிக்கும் விருப்பத்தை முதலாளிகள் ஒருபோதும் கைவிடவில்லை. நம் நாட்டில் தொழிலாளி வர்க்கத்தின் பெரும் பிரிவினருக்கு, 10-12 மணி நேர வேலை என்பது, ஏற்கனவே பொதுவானதாக ஆகிவிட்டது. பெரும்பாலான தற்காலிக மற்றும் தினக் கூலித் தொழிலாளர்களுக்கு, வரையறுக்கப்பட்ட வேலை நேரம் என்று எதுவும் இல்லை. பல கட்டுமானத் தொழிலாளர்கள் கதிரவன் உதயத்திலிருந்து அது மறையும் வரை வேலை செய்கிறார்கள். எண்ணிக்கை அடிப்படையில் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு போதுமான அளவு சம்பாதிப்பதற்காக அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உடலுழைப்புத் தொழிலாளர்களும் அலுவலக ஊழியர்களும் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள். தகவல் தொழில் நுட்பம் உட்பட சேவைத் துறையின் பெரும்பாலான பிரிவுகளில், ஒதுக்கப்பட்ட பணி முடிந்தால் மட்டுமே வேலை நாள் முடிவடைகிறது. நம் நாட்டில் 48 மணி நேர வாரம் என்பது, தற்போது தொழிற்சங்கங்களாக தொழிலாளர்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பெரிய தொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ள குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களால் மட்டுமே அனுபவிக்க முடிகிறது. இத்தகைய நிறுவனங்களில் கூட, தொழிற்சங்கமாக அணிதிரட்டப்படாத தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்யுமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். 

ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலை, 72 மணி நேர வாரம் என்பதை சட்டப்பூர்வமாக்குவது, பல்லாண்டு கால போராட்டங்களுக்குப் பிறகு தொழிலாளர்கள் வென்ற உரிமை மீதான நேரடித் தாக்குதலாகும். இது 19 ஆம் நூற்றாண்டின் மனிதாபிமானமற்ற வேலை நிலைமைகளுக்கு கடிகாரத்தை பின்னோக்கித் திருப்புவதாகும். தற்போது ஒரு நாளைக்கு 8 மணி நேரமும், வாரத்திற்கு 48 மணி நேரமும் வேலை செய்யும் உரிமையை அனுபவித்து வரும் தொழிலாளர்களுக்கு இந்த உரிமையை மறுப்பதென்பது முழு தொழிலாளி வர்க்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். வேலையின் தன்மை மற்றும் வேலை நிலைமைக்கு அப்பாற்பட்டு, ஒவ்வொரு தொழிலாளியின் வேலை நாளை அதிகபட்சமாக எட்டு மணி நேரமாகக் கட்டுப்படுத்த தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *