தொழிலாளர்களின் நலன்களும் முதலாளிகளின் நலன்களும்

புதிய கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்திலும், பொருளாதார நடவடிக்கைகளை எவ்வளவு விரைவாகத் தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவாக மீண்டும் தொடங்க வேண்டுமென்ற விருப்பத்திலும், சமூகத்தின் அனைத்து வர்க்கங்களும் இந்த நேரத்தில் ஒன்றுபட்டிருப்பது போல் மேற்பரப்பில் தோன்றலாம். ஆனால், கூர்ந்து பார்த்தால், தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கும் இடையே ஒரு கடுமையான மோதல் இருப்பதைக் காணலாம்.

ஊரடங்கு தொடங்கியதிலிருந்தே, தொழிலாளர்கள் தங்கள் உயிர்களையும் அவர்களின் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவது குறித்து கவலை கொண்டுள்ளனர். எந்தவொரு வருமானமோ சேமிப்போ இல்லாத நிலையில், எப்படியாவது உயர் பிழைத்திருக்க வேண்டுமென்பதற்காக கோடிக்கணக்கான தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். அவர்களில் பலருக்குத் தங்குவதற்கு கூட இடம் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தத்தம் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள். வரும் காலத்தை எதிர்நோக்கி, அனைத்துத் தொழிலாளர்களும் மீண்டும் வேலைக்குச் சென்று தங்கள் வாழ்வாதாரத்தை சம்பாதிக்க விரும்புகிறார்கள். இருப்பினும், அவர்கள் முன்பை விட ஆபத்தான அல்லது மேலும் கடுமையான சுரண்டலான நிலைமைகளில் வேலை செய்ய விரும்பவில்லை.

ஆரம்பத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்படக் கூடிய ஆபத்து குறித்து டாடா-க்கள், அம்பானி-கள், பிர்லா-க்கள் மற்றும் பிற ஏகபோகக் குடும்பங்களைத் தலைமையாகக் கொண்ட முதலாளி வர்க்கம் கவலைப்பட்டது. இப்போது முதலாளிகள் தங்களையும் தங்கள் சொந்த குடும்பங்களையும் பாதுகாக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அவ்வாறு செய்தபின், அவர்கள் தற்போது முக்கியமாக தங்கள் தொழில்களை மீண்டும் தொடங்குவதில் அக்கறை கொண்டுள்ளனர். மீண்டும் அவர்கள் அதிக லாபத்தைச் சுருட்டத் தொடங்க விரும்புகிறார்கள். செலவினங்களை வெட்டிக் குறைப்பதன் மூலமும், பல தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதன் மூலமும், முன்னையும் விட அதிக லாப விகிதத்தை அள்ளுவதற்கு வழிவகைகளை அவர்கள் தேடி வருகிறார்கள். தற்போதைய அசாதாரண சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.

தங்கள் உயிருக்கு தேவையற்ற ஆபத்தை உருவாக்கும் எந்த வேலை நிலைமைகளையும் தொழிலாளி வர்க்கம் ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்துத் துறைகளிலும் உள்ள தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வேலை நிலைமைகளை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் எந்தவொரு தொழிலாளிக்கும் கொரோனா வைரசு தொற்றுமானால் அதற்கு அந்த நிறுவனத்தின் முதலாளிகள் பொறுப்பேற்க வேண்டும் என்பது சர்ச்சைக்குரிய சிக்கல்களில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு உரிமையாளர்கள் பொறுப்பு ஏற்க மாட்டார்களென, முதலாளித்துவ ஏகபோகக் குடும்பங்களின் சங்கங்களுடைய வற்புறுத்தலின் பேரில், உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த பொறுப்பு ஏற்கப்படாத நிலையில், அரசாங்கம் வெளியிட்டுள்ள பொதுவான செயல்முறையில் (Standard Operating Procedure) கூறப்பட்டுள்ள எல்லா விதிகளும் நடைமுறை முக்கியத்துவத்தை இழக்கின்றன. பணியிடத்தில் குறைந்தபட்ச உடல் இடைவெளியைக் கடைபிடித்தல், இரண்டு வேலைச் சுற்றுகளுக்கு இடையில் ஒரு மணி நேர இடைவெளியை வைத்திருத்தல், பணியிடத்தை முறையாக சுத்திகரிப்பு செய்தல் போன்றவை குறித்த விதிகள் வெற்றுக் காகிதத்தில் மட்டுமே இருக்கும்.

கொரோனா வைரசின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக என்று கூறி, 8 மணி நேர வேலை சுற்றுக்குப் பதிலாக அதை 12 மணி நேரமாக மாற்ற அனுமதிக்க வேண்டும் என்பது மத்திய அரசிடம் முதலாளிகளுடைய சங்கங்கள் வைத்திருக்கும் முன்வைப்புகளில் ஒன்றாகும்! இது குறித்த அறிவிப்புகளை குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில அரசுகள் ஏற்கனவே வெளியிட்டுள்ளன. இது, 20 ஆம் நூற்றாண்டில் சர்வதேச தொழிலாளி வர்க்கம் வென்ற மிக அடிப்படையான உரிமைகள் மீதான பெரும் தாக்குதலாகும்.

தொழில்துறை தகராறுகள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள தொழிற்சங்கத்தை அமைப்பதற்கான தொழிலாளர்களின் உரிமையை குறைந்தபட்சம் 2020-21 நிதியாண்டிற்காவது தடை செய்ய வேண்டுமென்பது குஜராத் வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களுடைய சங்கம் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றாகும். தற்போதைய சூழ்நிலையில் மேலும் பல தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துப் போராடுவதற்காக தொழிற்சங்கங்களை உருவாக்க முன்வருவார்கள் என்ற முதலாளிகளின் கவலையை இது பிரதிபலிக்கிறது.

தொழிலாளர்களைச் சுரண்டுவதை மேலும் தீவிரப்படுத்துவதற்கான வாய்ப்பாக கொரோனா வைரசு தொற்று நோயைப் பயன்படுத்த அனைத்து முயற்சிகளையும் முதலாளித்துவ வர்க்கம் மேற்கொண்டு வருகிறது. எனவே, முதலாளி வர்க்கத்தின் கொடிய திட்டங்களை முறியடிப்பதற்காகவும், போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொழிலாளி வர்க்கம் எடுக்க வேண்டும். தற்போதைய முதலாளித்துவ ஆட்சி முறைக்கு பதிலாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவுவதற்கு தயாரிக்கும் கண்ணோட்டத்தோடு, தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்த, ஒன்றுபட்டு முன்வருமாறு தொழிலாளி வர்க்கத்தின் அனைத்து கட்சிகளையும் அமைப்புகளையும் நிலைமை கூவி அழைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *