முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நிறப்பும் தொழிற்சாலைத் தொழிலாளர்களுடைய நிலை

கொரோனா வைரசு அச்சுறுத்தல் மற்றும் நாடு முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் திரவ வடிவிலான பெட்ரோலிய வாயு – சமையல் எரிவாயுவை (எல்பிஜி) சிலிண்டர்களில் நிரப்பும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுடைய நிலை குறித்து இந்தியன் ஆயில் எம்பிளாயிஸ் யூனியனின் தலைவர்களில் ஒருவரான தோழர் பிரீதியை தொழிலாளர் ஒற்றுமைக் குரல் (தொ.ஒ.கு) நேர்முகம் கண்டது. அந்த நேர்முகத்தின் விவரங்கள் பின்வருமாறு –

தொ.ஒ.கு : கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரசு தாக்குதலின் காரணமாக, உலகெங்கிலும் உள்ள நாடுகளும் மக்களும் மிகவும் மோசமானதொரு சூழ்நிலையைச் சந்தித்து வருகிறார்கள். நமது நாட்டில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டிருப்பது, நமது மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சொல்லொணாத் துன்பங்களை உருவாக்கியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் இந்தியன் ஆயில் கார்பரெஷன் (ஐஓசி) தொழிலாளர்களுடைய நிலை குறித்து அறிய விரும்புகிறோம்.

தோழர் பிரித்தி (பிரி) : கோவிட்-19 நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய சேவைகளில் உள்ள தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிரான இந்தப் போரில் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், ஆம்புலன்சு தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்றவர்களும், உணவுப் பொருட்கள் வினியோகம், கடைகள், காவல் துறையினர் போன்ற பிற சேவைகளை அளிப்பவர்களும் முன்னணிப் போராளிகளாக இருக்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி, வங்கி ஊழியர்கள், பெட்ரோலியம், மின் உற்பத்தி போன்ற துறைகளில் வேலை செய்பவர்களும் கூட இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகிறார்கள். முன்னணித் தொழிலாளர்களைப் போலவே இவர்களும் அதே தொற்று நோய் ஆபத்துக்களைச் சந்தித்து வருகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.

தொ.ஒ.கு : சமையல் எரிவாயுவை சிலிண்டர்களில் அடைக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் தொழிலாளர்களுடைய வேலை நிலைமைகளையும், ஆபத்துக்களையும் விளக்கிக்  கூறுங்கள்.

பிரி : தமிழ்நாட்டில் சென்னையிலுள்ள சென்னை பெட்ரோலியம், பெட்ரோலிய சுத்தகரிக்கும் முக்கிய ஆலையாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் கொண்டிருக்கிறது. அங்கு சுமார் 5000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

ஐஓசி-யின் முக்கிய சேவைகளில் ஒன்று, போக்குவரத்து வாகனங்களுக்குத் தேவைப்படும் பெட்ரோல், டீசல் ஆகிய எரி பொருட்களை பெட்ரோல் பங்க்குகள் மூலமாக வழங்குவதாகும். தற்போது எல்லா போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டிருப்பதால், இந்தத் துறையில் வழங்க வேண்டிய வேலை அதிகமாக இல்லை. இன்னொரு முக்கிய சேவையானது எல்லா வீடுகளுக்கும் சமையல் எரிவாயுவை அளிப்பதாகும். தமிழ் நாட்டில் ஐஓசி-க்கு 12 சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அவற்றில் மொத்தமாக சுமார் 3000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் 10% பெண் தொழிலாளர்கள் ஆவர். 70% ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். இந்தத் தொழிலாளர்கள் தமிழ் நாட்டில் மொத்தமாக 2.9 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஒவ்வொரு நாளும் நிரப்பி வினியோகிக்கிறார்கள். இந்தியா முழுவதும், ஒரு நாளைக்கு 60 இலட்சம் சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகின்றன.

வாயுவை நிரப்பும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் எங்களுடைய தொழிலாளர்கள், திரவ வடிவிலான பெட்ரோலிய வாயுவை சிலிண்டர்களில்  நிரப்புகிறார்கள். உஜாலா திட்டத்தின் கீழுள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக அடுத்த 3 மாதங்களுக்குக் கொடுக்கும் திட்டத்தை அரசாங்கம் அண்மையில் அறிவித்திருக்கிறது. மேலும் பல்வேறு காரணங்களால் சமையல் எரிவாயுக்கான தேவை நமது நாட்டில் அதிகரித்திருக்கிறது. இந்த அதிகரித்த தேவையை நிறைவு செய்வதற்கு, எங்களுடைய தொழிலாளர்கள் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான காலி சிலிண்டர்கள் தொழிற்சாலைக்கு வருகின்றன. அவற்றில் தொழிலாளர்கள் சமையல் எரிவாயுவை நிரப்பிய பின்னர் அவை வினியோகத்திற்குச் செல்கின்றன. இந்த எல்பிஜி சிலிண்டர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் – பகுதிகள் உட்பட எல்லா வீடுகளுக்கும் வினியோகிக்கப்படுகின்றன. எல்லா சிலிண்டர்களையும் தொழிலாளர்கள் தம் கைகளாலேயே தொட்டு வேலை செய்ய வேண்டியுள்ளது. சிலிண்டர்கள் சிலவற்றில் கொரோனா வைரசுகள் இருக்க வாய்ப்பு உண்டு. அது பற்றி தெரிந்து கொள்ள முடியாத காரணத்தால் எல்லா சிலிண்டர்களையும் வழக்கமான முறையிலேயே கையாளுகிறார்கள். இந்த வேலையானது ஒரு அத்தியாவசிய சேவையாக இருப்பதால், வைரசு அபாயம் நீங்கும் வரையிலும் நிறுத்தி வைக்கக் கூடிய வேலையும் அல்ல.

உற்பத்திக் கூடத்தில் தொழிலாளர்களுக்கு இடையிலுள்ள இடைவெளியானது, கொரோனா வைரசு நெருக்கடி தோன்றுவதற்கு முன்னர் இருந்த அதே அளவில் மாற்றமின்றி தொடர்கிறது. சமூக இடைவெளி குறித்து மோடியும், எடப்பாடி பழனிசாமியும் நிறைய போதித்துக் கொண்டிருந்தாலும், உற்பத்திக் கூடத்தில் அதைக் கடைபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. உற்பத்தியில் முன்பிருந்த அதே எண்ணிக்கை தொழிலாளர்கள் இப்போதும் முன்பு போலவே வேலை செய்து வருகின்றனர். எனவே, அவர்கள் கையாளும் சிலிண்டர்களிலிருந்தும், பிற சகத் தொழிலாளர்களிடமிருந்தும் வைரசு நோய் தொற்றிக் கொள்ளும் ஆபத்துடனே ஒவ்வொரு நாளும் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். வேலையில் அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு எந்த சிறப்பு ஊதியமும் கொடுக்கப்படுவதில்லை.  

தொ.ஒ.கு : இத்தகைய சூழ்நிலையில் ஐஓசி தொழிலாளர்களுடைய முக்கியக் கோரிக்கைகள் என்ன?

பிரி : வைரசு பெருந்தொற்று நோய் தாக்கக் கூடிய இந்த சூழ்நிலையில் எல்பிஜி தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் ஆபத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுடைய ஊதியத்தை இருமடங்காக உயர்த்தி வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் கோருகின்றனர். குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிக பாதிப்பையும், ஆபத்துக்களையும் எதிர் கொள்கின்றனர்.

தொழிலாளர்களுக்கு முகக் கவசம், கையுறைகள் மற்றும் கிருமி நாசினி போன்ற பாதுகாப்பு சாதனங்களை நிர்வாகம் வழங்கியிருந்தாலும், அவை போதுமானவைகளாக இல்லை. வேலைக்காகவும், பிற தேவைகளுக்காகவும், அவர்கள் முகக் கவசங்களையும், கையுறைகளையும் அடிக்கடி அகற்ற வேண்டியுள்ளது. ஒருமுறை பயன்படுத்திவிட்டால், அவற்றை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று இருப்பதாலும், அவற்றிற்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஐஓசி தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் கொடுக்கப்படவில்லை. அவர்கள் தினக் கூலித் தொழிலாளர்களாக நடத்தப்பட்டு வருவதால், அவர்கள் வேலைக்கு வராவிட்டால் அன்றைய ஊதியத்தை அவர்கள் இழக்க நேரிடும். தொழிற்சாலைக்கு வந்து போகும் வழியில் காவல்துறையினரிடம் அவர்கள் தங்களுடைய அடையாள அட்டைகளைக் காட்டினாலும் கூட, தொழிலாளர்களைக் காவல்துறை தாக்குகிறது. இந்த முடக்கப்பட்ட காலத்திற்காவது, தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்வதற்கு போக்குவரத்து வசதியை நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோருகின்றனர்.

ஐஓசி தொழிற்சாலைகளில் உணவகங்கள் பழைய முறையிலே தான் இயங்குகின்றன. அங்கு ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. சில தொழிற்சாலைகளில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. எல்லா பொது உணவகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் உணவுக்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக, தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை நிர்வாகம் ஏற்பாடு செய்து வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் கோருகின்றனர்.

நாடெங்கிலும் உள்ள சமையல் எரிவாயுவை வினியோகிக்கும் சேவை மையங்களில் வேலை செய்யும் ஓட்டுனர்கள், வினியோகிக்கும் தொழிலாளர்கள், கையாளுபவர்கள் போன்றவர்கள் மேலும் அதிக ஆபத்துக்களை எதிர் கொள்கிறார்கள். நிறுவனம் அவர்களுக்கு வழங்கும் கையுறைகளும், கிருமி நாசினிகளும் போதுமானதாக இல்லை.

ஐஓசி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரசு தொற்று ஏற்பட்டால் அதை உடனடியாக அறிவதற்கு தொழிலாளர்களுக்கு தேவையான மருத்துவ சோதனைகளை ஒவ்வொரு நாளும் நிர்வாகம் ஏற்பாடு செய்து நடத்தவும், பிற தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டும்.

ஆனால் தொழிலாளர்களுடைய மேலே கூறப்பட்ட முக்கியமான, நியாயமான தேவைகளை நிறைவேற்றுவதில் கம்பெனி நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை.

தொ.ஒ.கு : தற்போதைய சூழ்நிலை எதைக் காட்டுகிறது?

பிரி : பெரும் முதலாளிகளுடைய நலன்களுக்காக பெட்ரோலிய நிறுவனங்கள் உட்பட பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் திட்டத்தைத் திணிப்பதில் இந்திய அரசாங்கம் மிகவும் மும்முரமாக இருக்கிறது. பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் ஒன்றான எரிபொருள் துறையில் ஐஓசியும் பிற பெட்ரோலிய நிறுவனங்களும் அங்கமாக இருக்கின்றன. தற்போதைய கோவிட்-19 போன்ற தாக்குதல் அல்லது இந்தியா மீது ஒரு போர், அல்லது வணிகத் தடைகள் போன்ற நெருக்கடியான சூழல் எழுமானால், சக்தித் துறையில் உள்ள இந்த பொதுத் துறை நிறுவனங்களே நமது நாட்டை நடத்துவதற்கு முதுகெலும்பாக செயல்படும். அப்படிப்பட்டதொரு முக்கியமான துறையை தனியார்மயப்படுத்திவிட்டால், இப்படிப்பட்ட நெருக்கடிகள் எழுமானால் நமது மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இருக்காது. மிகவும் மோசமான சூழ்நிலைகளில் இலாபத்தையே தன்னுடைய முக்கிய நோக்கமாகக் கொண்டு வேலை செய்யும் ஒரு நிறுவனம், நம்முடைய மக்களுக்காக முன்வந்து தலையிட்டு ஏன் முழுமூச்சாக வேலை செய்ய வேண்டும்? அப்படிப்பட்ட மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளில் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உதவி செய்வதற்கு பதிலாக, ஒரு தனியார் நிறுவனம் வேண்டுமென்றே செயற்கையாக ஒரு பற்றாக்குறையான சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் நாட்டு நலன்களை அச்சுறுத்தக் கூட தயங்காது. இதைத் தான் இன்று நாட்டையே கொரோனா அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், பெரிய சில்லறை வணிக நிறுவனங்களும் வர்த்தக நிறுவனங்களும் அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்துக் கொண்டு சமுதாயத்தைக் கொள்ளையடித்து வருவதை நாம் பார்க்கிறோம். அது மட்டுமின்றி, இலாபத்தை மட்டுமே தன் நோக்கமாக கொண்டிருப்பது தொழிலாளர்களைச் சுரண்டுவதையும், வெளியே கொடுத்து வேலை செய்வதையும் அதிகரிப்பது மட்டுமன்றி நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டத்தையும் பெருக்குகிறது.

இவ்வாறு, முக்கியத் துறைகளில் உள்ள நிறுவனங்களை தனியார்மயப்படுத்த அனுமதிக்கக் கூடாதெனவும், மாறாக அவற்றை சமூக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டுமென்றும் கொரோனா நெருக்கடி நமக்குத் தெளிவாக அறிவுறுத்துகிறது.

தொ.ஒ.கு : கொரோனா பெருந்தொற்று நோயிலிருந்து மேலும் என்ன படிப்பினைகளை நாம் பெற்றுக் கொள்ள முடியும்?

பிரி : நமது நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தனியார் மருத்துவ மனைகளுக்குச் செல்வதைத் தவிர்த்து பொது மருத்துவ மனைகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் ஒரு நோயாளிக்கு சுவாசக் கருவியோ, அல்லது பிற நவீன மருத்துவ சாதனங்களோ தேவைப்பட்டால் தனியார் மருத்துவ மனைகளில் அவற்றிற்கு இலட்சக் கணக்கில் செலவழிக்க வேண்டியிருக்கும். அதை பெரும்பாலான மக்களால் கொடுக்க முடியாது. மக்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்கு எல்லா முக்கிய உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளும் பொதுமக்களுடைய உடமையாக இருப்பது அவசியமாகும். எனவே, மருத்து அல்லது மருத்துவக் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவமனைகள் அல்லது சுகாதாரத் துறையின் வேறு எந்த சேவையானாலும் அவற்றின் உற்பத்தியையும் வினியோகத்தையும் இலாபத்தை குறிக்கோளாக வைத்திருக்கும் தனியார் நிறுவனங்களுடைய கைகளில் விட்டுவிடாமல் சமூகக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

உலகெங்கிலும் உள்ள நாடுகள், ராணுவத்திற்கு பொது மக்களுடைய வரிப்பணத்திலிருந்து மிகவும் அதிக சதவிகிதத் தொகையை செலவழித்து வருகிறார்கள். மாறாக அவர்கள் சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளில் அதிகமான தொகையை செலவிட வேண்டும். சுகாதாரத் துறையில் முதலீடுகள் போதுமானதாக இல்லை என்பதையும், இப்படிப்பட்ட ஒரு பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்த நம்மிடம் தேவையான வசதிகள் இல்லை என்பதையும் தற்போதைய கோவிட்-19 நெருக்கடி சுட்டிக் காட்டியிருக்கிறது. ராணுவத்திற்கும், பேரழிவான ஆயுதங்களுக்கும் வீணாக செலவு செய்யப்படும் தொகையானது, உற்பத்திகரமான தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். அது மக்களுடைய நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

மக்களை மையமாக வைத்த சமூக மற்றும் அரசியல் அமைப்பை நிறுவுவதற்காக நாம் அனைவரும் வேலை செய்ய வேண்டும்.

தொ.ஒ.கு : ஐஓசி தொழிலாளர்களுடைய கோரிக்கைகளை தொழிலாளர் ஒற்றுமைக் குரல் முழுமனதாக ஆதரிக்கிறது. நேரத்தை ஒதுக்கி, உங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *