கொலைகாரர்களோடு கூட்டாளிகளாகச் செயல்படும் இந்திய அரசை கண்டிப்போம்!

போபாலில் கொட்டப்பட்ட நச்சுக் கழிவுகள் உருவாக்கிய பாதிப்புகளுக்கு, அமெரிக்க நிறுவனமாகிய யூனியன் கார்பைடு கார்பரேசனும், அப்போது அதனுடைய தலைவனாக இருந்த வாரன் ஆண்டர்சனும் பொறுப்பல்ல என அமெரிக்க மத்திய நீதி மன்றம் சூன் 26 அன்று தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் அந்த நச்சுக் கழிவுகளையும் சுற்றுப்புறத்தையும் தூய்மைப்படுத்துமாறு அவர்களைக் கேட்கவும் முடியாதென நீதி மன்றம் கூறியிருக்கிறது.

போபாலில் கொட்டப்பட்ட நச்சுக் கழிவுகள் உருவாக்கிய பாதிப்புகளுக்கு, அமெரிக்க நிறுவனமாகிய யூனியன் கார்பைடு கார்பரேசனும், அப்போது அதனுடைய தலைவனாக இருந்த வாரன் ஆண்டர்சனும் பொறுப்பல்ல என அமெரிக்க மத்திய நீதி மன்றம் சூன் 26 அன்று தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் அந்த நச்சுக் கழிவுகளையும் சுற்றுப்புறத்தையும் தூய்மைப்படுத்துமாறு அவர்களைக் கேட்கவும் முடியாதென நீதி மன்றம் கூறியிருக்கிறது.

போபாலில் உள்ள யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் கம்பெனியின் தொழிற்சாலை, மீதல் ஐசோ சயனைடையும் (MIC), பிற நச்சு வாயுக்களையும் டிசம்பர் 2-3, 1984 இல் வெளியிட்டு, 28 ஆண்டுகள் கடந்துவிட்டன. வெளியிட்ட இந்த நச்சு வாயுவையும், பயங்கரமான வேதியல் பொருட்களையும் சுவாசித்த காரணத்தால், 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். நச்சு வாயு தொடர்பான நோய்களால் தாக்கப்பட்டு தொழிற்சாலைக்கு அருகில் வாழ்ந்து வந்த  35,000-க்கும் மேற்பட்ட மக்கள்  இதுவரை இறந்துள்ளனர். மேலும், 3 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு துயரத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் இந்த தொழிற்சாலையில் வேலை செய்து, அருகில் இருந்த குடிசைப் பகுதிகளில் வசித்து வந்தவர்கள் ஆவர்.

இந்தக் கொடிய அவலப் பேரிடருக்கு இந்திய அரசின் பதில், கொலைகாரத்தனமான அலட்சியமாகும். மத்தியிலும், மாநிலத்திலும் கடந்த 28 ஆண்டுகளில் மாறிமாறி வந்த அரசாங்கங்கள் கொடுத்த உறுதிமொழிகளும் வாக்குறுதிகளும் பட்டப்பகலில் மீறப்பட்டிருக்கின்றன. அந்தக் கொடூரமான இரவைத் தாண்டி இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் போதுமான மருத்துவ நிவாரணம் கேட்டும் மறுவாழ்வு கோரியும் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களுடைய அன்புக்கு உரியவர்களையும், தங்களது குடும்பத்தின் ஆதாரமாக இருந்த  சம்பாதிப்பவரையும் பறிகொடுத்தவர்கள், அவர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட இழப்பீட்டை இன்னும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இழப்பைத் தொடர்ந்த சில மாதங்களுக்கு அவர்கள் அங்கும் இங்கும் அலைக் கழிக்கப்பட்டனர். பெரும் பான்மையான இந்த விதவைகளுக்கு அவர்களுக்கு உரிய இழப்பீடும் ஊதியமும் இன்றுவரை கிடைக்கவில்லை. அந்த இடத்திலிருந்து நச்சுக் கழிவுகளை அகற்றவும், போபால் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும் அரசு இதுவரை நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

இந்தப் படுகொலைக்கு குற்றவாளியாக இந்தியாவிலுள்ள யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் கம்பெனியையோ, அல்லது அமெரிக்காவிலுள்ள அதனுடைய தலைமை நிறுவனமாகிய யூனியன் கார்பைடு கார்பரேசனையோ இந்திய அரசு குற்றஞ்சாட்டவில்லை. இந்திய மக்களை விலையாகக் கொடுத்து, இந்திய அரசு, இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகாதிபத்திய முதலாளி வர்க்க நலன்களைப் பாதுகாக்கிறது என்பதற்கு இதற்கு மேலும் நிரூபணம் எதுவும் தேவையில்லை. மேலும், இந்திய அரசாங்கம், யூனியன் கார்பைடு கார்பரேசனுடைய அப்போதைய தலைவன் வாரன் ஆண்டர்சன் நாட்டிலிருந்துத் தப்பித்துப் போவதை அது உறுதிசெய்தது. அவலப் பேரிடர் நடந்த உடனேயே, "பாதிப்புகளைக் கணிப்பதற்காக"என்று சொல்லிக் கொண்டு, யூனியன் கார்பைடு கார்பரேசனுடைய தலைவன் போபால் வந்திருந்தான். இந்தப்  போரழிவால் மிகவும் கோபமடைந்து, இதற்கு யூனியன் கார்பைடு கார்பரேசனும், யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெடும் பொறுப்பேற்க வேண்டுமென கேட்டிருந்த போபால் மற்றும் எல்லா இந்திய மக்களுக்கும், நடவடிக்கை எடுத்து வருவதாகக் காட்டுவதற்காக அவனைக் "கைது"செய்தது. ஆனால் அவனுக்கு சில மணி நேரங்களிலேயே பிணை விடுப்பு கொடுத்து, அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவினுடைய கட்டளைப்படி அவன் நாட்டை விட்டுத் தப்பியோட வழிவகை செய்யப்பட்டது.

போபால் பேரழிவினால் பாதிக்கப்பட்டவர்களும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அவர்களை ஆதரிப்பவர்களும், இழப்பீட்டிற்கான போராட்டத்தையும், யூனியன் கார்பைடு கார்ப்பரேசனையும், யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெடையும் தண்டிக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் கைவிட்டு விடவில்லை. இந்த நெருக்குதல்களை அவ்வப்போது அறிவிப்புகள் மூலமும், வாக்குறுதிகள் மூலமாகவும், எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இவற்றையொட்டி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அரசாங்கத்தின் மக்கள் விரோத குற்றவியலான தன்மையை மேலும் நிரூபிக்கிறது.

1894 போபால் நச்சு வாயு பேரழிவோடு தொடர்புடைய யூனியன் கார்பைடு கார்பரேசனுடைய முன்னாள் தலைவன் வாரன் ஆண்டர்சனை இந்தியாவிற்குக் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென 2002-இல் அரசாங்கம் அறிவித்தது. "இந்தப் பேரழிவு பற்றி அரசாங்கத்திற்கு அறிவுரை கூற"2010-இல் அமைத்த அமைச்சர் குழு, "இழப்பீடு, வாரன் ஆண்டர்சனை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சட்டரீதியான முயற்சிகள், மிகவும் முக்கியமாக பிரச்சனைகளுக்குத் தீர்வு, சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள் – என எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டோமென"அறிவித்தது!

ஆண்டர்சனை மீண்டும் கொண்டுவருவதும், நீதி விசாரணை நடத்துவதும் போலி வாக்குறுதிகளாக இருப்பது மட்டுமின்றி, அமெரிக்க நீதி மன்றத்தின் இப்போதைய தீர்ப்பு, யூனியன் கார்பைடு கார்பரேசன் முழுவதுமாக தன்னுடைய பொறுப்பைக் கை கழுவி விடுவதை உறுதிப்படுத்தியிருக்கிறது 2001-இல் யூனியன் கார்பைடு கார்பரேசனை வாங்கிய டோவ் கெமிகெல்சு நிறுவனம், போபாலில் நடைபெற்ற படுகொலைகளுக்கு அது எந்த வகையிலும் பொறுப்பாளியாக இருக்காது என்ற உத்திரவாதத்தை இந்திய அரசாங்கத்திடமிருந்து 2006-இல் பெற்றிருக்கிறது. அதற்கும் முன்னரே, நச்சுக் கழுவுகளை அகற்றி தூய்மைப் படுத்தும் எந்தப் பொறுப்பும் தனக்கு இல்லையென யூனியன் கார்பைடு கார்பரேசன் திட்டவட்டமாக கூறியிருக்கிறது. யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட், அதனுடைய தலைமை நிறுவனமாகிய யூனியன் கார்பைடு கார்பரேசனுடைய முழு ஒப்புதலோடு பல்வேறு பாதுகாப்பு வரைமுறைகளையும், தரக்கட்டுப்பாடு, பயிற்சி முறைகளையும் புறக்கணித்து வந்துள்ளது என்பதையும், இந்த தொழிற்சாலையில் சாவையும், பல மோசமான காயங்களும் உண்டாக்கிய பல விபத்துக்கள் நடந்திருந்தாலும் அவை வெளிப்படையாகவே உதாசீனப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதையும் ஆய்வுகள் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன.

பேரழிவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்டு பிழைத்திருப்போரும் யூனியன் கார்பைடிலிருந்து இழப்பீடு கேட்கும் கோரிக்கைகளுக்கு பதிலாக, இந்திய அரசாங்கம் அவர்கள் அனைவர் சார்பாகவும் செயல்படுமென்றும், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி இழப்பீட்டிற்காக கம்பெனி மீது வழக்கு தொடுக்கும் என்றும் கூறியது. ஆனால், ஒரு நீண்ட நீதிமன்றப் வழக்கிற்குப் பின்னர் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி 1989-இல், யூனியன் கார்பைடு வெறும் 750 கோடி ரூபாய் (470 மில்லியன் டாலர்கள்)கொடுத்துவிட்டு சென்றுவிட்டது. இந்த உடன்படிக்கை, பலியானவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களின் நலன்களை விட்டுக் கொடுத்து இந்திய அரசாங்கம் விலை போய்விட்டதாக பல்வேறு அமைப்புக்களால் தாக்கி கண்டிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின் படி, நோய்வாய்பட்டிருப்பவர்களுக்கு ரூ 25,000-மும், இறந்தவர்களுடைய உறவினருக்கு ரூ 1 இலட்சமும் கொடுக்கப்பட்டது. முன் கூறப்பட்டது போலவே, வாக்குறுதி கொடுக்கப்பட்ட இந்த இழப்பீடும் உரிய மக்களுக்கு இதுவரை போய்ச் சேரவில்லை.

ஒரு நியாயமான இழப்பீட்டிற்காக பாதிக்கப்பட்டவர்கள் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து எழுப்பும் கோரிக்கை காரணமாக இந்திய அரசாங்கம் டிசம்பர் 2010-இல் ஒரு வழக்கைத் தொடர்ந்தது. இந்த வழக்கில் அது முன்னர் கணித்திருந்த பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையின் அடிப்படையில் அதிக இழப்பீடு கேட்டிருந்தது. ஆனால் இது பொது மக்களுடைய கோபத்தைத் தணிப்பதற்கும், தன்னுடைய குற்றங்களை மூடி மறைப்பதற்கும் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகும். விபத்து நடந்து நான்காண்டுகளுக்குப் பின்னரே இழப்பீடு வழங்கப்பட்டது என்பதை எடுத்துக் காட்டி, பாதிப்புகளை கணிக்க அரசாங்கத்திற்குப் போதுமான கால அவகாசம் இருந்தது என்பதையும் எடுத்துக் கூறி, யூனியன் கார்பைடு கார்பரேசன் நீதி மன்றத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. 

போபாலில் மக்களைப் படுகொலை செய்தவர்களோடு மத்திய, மாநில அரசாங்கங்களின் கூட்டுச் சதியை தொழிலாளர் ஒற்றுமைக் குரல் கண்டிக்கிறது. முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாகிய இந்த அரசு, தங்களுடைய நலன்களைப் பாதுகாக்கும் என்றோ, குற்றவாளிகளைத் தண்டிக்குமென்றோ, எந்த மாயையும் மக்களுக்கு இருக்கக் கூடாது. ஒரு தொழிலாளிகள் – விவசாயிகளுடைய அரசால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *